Sunday, 4 August 2019

அபிராமி அந்தாதி.... 40



                                                            அபிராமி அந்தாதி....  40



முன் செய் புண்ணியமே (பாடல் 40)


வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே

அன்பரின் விளக்கவுரை 

வாள் நுதல் கண்ணி
ஒளி பொருந்திய நெற்றி கொண்டவள் அன்னை : அந்நெற்றியில் கண்ணையும் உடையவள் அவள்.

சிவபிரான் உள்ளது போன்றே உமை அம்மைக்கும் நெற்றியில் கண் உண்டு. இவ்விருவர்க்கு உள்ளது போன்றே இவர்தம் முதல் மதலையான விநாயகருக்கு மூன்று கண்கள் உண்டு. இரண்டாம் பிள்ளையான முருகனுக்கு முகத்துக்கு மூன்று கண்கள் வீதம் ஆறுமுகங்களுக்குப் பதினெட்டு கண்கள் உண்டு. ' வாள் நுதல் கண்ணி' யை என்று குறிப்பிட்டது ஒரு பெருமை.

'வாணுதற் கண்ணி' என்பதற்கு நெற்றிக்கண்ணை உடையவள் என்றும் பொருள் கொள்ளலாம். லலிதாசஹஸ்ர நாமம் மற்றும் சௌந்தர்யலஹரியில் ஒளி வீசும் நெற்றி, நெற்றிக் கண் இரண்டு விதத்திலும் வர்ணிக்கப்பட்டிருக்கிறாள் சக்தி. சிவனுடைய நெற்றிக்கண்ணே சக்தி தான் என்றும் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சௌந்தர்யலஹரியிலும் அந்தக் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது ("சிவனுடைய கண்ணின் கனலானவள்").

பட்டரின் சொல்லாட்சியை ரசிப்போம். 'தேவரையும் மூவரையும் பெற்றவள், சிவனுடன் பலவிதங்களில் காமப்போர் புரிபவள்' என்றெல்லாம் முன்பு சொல்லிவிட்டு இங்கே அபிராமியைக் கன்னி என்கிறாரே பட்டர்? கருணையுடையவள், எளியவருக்கும் அருள் புரிபவள் என்று முந்தைய பாடல்களில் சொன்னவர், இங்கே அபிராமியை எளிதில் காணமுடியாதவள் என்பானேன்? கன்னி என்ற சொல்லுக்கு அழிவில்லாத, எல்லாவற்றுக்கும் தொடக்கமான என்று பொருளுண்டு. அபிராமி அழிவில்லாதவள் என்பதால் கன்னி என்றார். 


விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை - விண்ணில் வாழும் தேவர்கள் யாவரும் வந்து வணங்கிப் போற்றுதற்கு விருப்படும் எங்கள் தலைவியை,

பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை - ஒன்றுமறியா பேதை நெஞ்சில் காணுவதற்கு எளிதில்லாத கன்னியை


 பேதமை என்றால் அறியாதிருத்தல் என்று பொருள். பெண்ணுக்குப் பேதை என்று ஒரு பொருள் உண்டு. பெண்கள் அறிவில்லாதவர்கள் என்று பொருள் அல்ல. சிலவற்றை அறிந்தும் அறியாதவர் போல் காரணம் தொட்டு நடந்து கொள்வதால் பெண்களுக்குப் பேதை எனும் பொருள் வழங்கலாயிற்று. தேவர்களும் கடவுளருமே பணிந்து வணங்கும் அழிவில்லாத அபிராமியை அறிந்தும் நம்பிக்கையிழந்து அறிவில்லாதவர் போல் நடந்து கொள்ளும் பேதைகளுக்கு அபிராமியின் அண்ணியம் கிடைக்காது என்பதால், 'பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள்' என்றார் பட்டர். அண்ணுதல் என்றால் நெருங்குதல்; அண்ணித்தல் என்றால் அருளுதல்.

" நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாதவள் என்றால், அவள் நம் அருகிலேயே இருக்கிறாள்; நாமாக அழைத்தாலும் அவள் வருவாள் ; நாம் அணுகிச் சென்றாலும் அவளருளைப் பெறலாம். அதற்குப் புண்ணியம் பண்ணிட வேண்டும். 


புண்ணியத்தால் அடையத்தக்கவள் நம் பிராட்டி. இனி காணுதற்கு என்றார் அல்லவா. " பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு " என்று அபிராமிபட்டர் சொன்னார் அல்லவா? காணும் என்றால், கோவில் சென்று அர்ச்சாவதார மூர்த்தியைக் கண்டு வணங்குவதை அவர் குறிப்பிடவில்லை. சாமானியர் என்ற பாமரர் பக்தி அது. அதை விடச் சிறந்தது. " நெஞ்சில் காணுதல் " என்ற பக்தி. நெஞ்சில் அவளைக் காணமுடியுமா! அதற்கும் அபிராமிபட்டர் பதில் தந்தார்.
" நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாதவள் என்றால், அவள் நம் அருகிலேயே இருக்கிறாள்; நாமாக அழைத்தாலும் அவள் வருவாள் ; நாம் அணுகிச் சென்றாலும் அவளருளைப் பெறலாம். அதற்குப் புண்ணியம் பண்ணிட வேண்டும். 

காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் 
புண்ணியமே - காணும் அன்பு கொள்ளவேண்டும் என்று எண்ணினேனே. அந்த எண்ணம் நான் முன்பு செய்த புண்ணியப் பயன் தானே.


முன்பிறவியில் புண்ணியம் செய்வோருக்குத் தான் இப்பிறவியில் அவள்பால் பக்தி உண்டாகும். ஸ்ரீவித்யா உபாசனையும், தேவி மந்திரமும் பூர்வ புண்ணியத்தாலேயே உண்டாகும். ஆதிசங்கரர் ஸௌந்தர்யலஹரீ முதல் ஸ்லோகத்திலே " ஹரி - ஹர - விரிஞ்சாதிபி - ரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கமதக்ருத - புண்ய : ப்ரபவதி " - என்று ஒரு கேள்வியாகக் கேட்பது வெகு அழகு. அதாவது " விஷ்ணு, ருத்ரன், பிரம்மா முதலியவர்களாலும் பூஜித்தற்குரிய உன்னை புண்ணியம் செய்யாதவன், வணங்குவதற்கோ அல்லது துதிப்பதற்கோ எங்ஙனம் தகுதியுடையவனாவான்? "


லலிதா ஸஹஸ்ரநாமாவளியிலும் அம்பிகையை

543. புண்ய லப்யா - முன் செய்த புண்யத்தால் அம்பாளின் க்ருபை கிடைக்கும். சுருக்கமாகச் சொன்னால், நாம் முற்பிறவியில் புண்ணியம் செய்து இருந்தால் தான் அம்பாளை இப்பிறவியில் பூஜை செய்யும் பாக்கியம் கிடைக்கும். அதுவும் அவள் அருளாலேயே

அத்தகைய பேற்றையும் பெருமையும் கொண்ட எம்பெருமாட்டியைத் துதித்திட ஒருவர் புண்ணியம் செய்திருக்க வேண்டும்; அன்னையைத் துதித்திட நாமும் அத்தகைய புண்ணியத்தை இனியாவது செய்வோமா!!
அபிராமி சரணம் சரணம்!!

                           
                                       பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்

                                            
                                          அபிராமி சரணம் சரணம்!!
                                                   முருகா சரணம்                                                  

No comments:

Post a Comment