Sunday, 29 October 2017

அபிராமி அந்தாதி - 23



                                                 அபிராமி அந்தாதி - 23
                                                                                                     

கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது; அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே!



அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 

கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது;
அன்னை அபிராமியே, உன் கோலம் அல்லாது மற்றொன்றை என் மனத்தில் நினைத்துக்கொள்ள மாட்டேன். 

அன்பர் கூட்டந்தன்னைவிள்ளேன்;

உன் அடியார்களை பகைத்துக்கொள்ள மாட்டேன்.
"அன்பர் பணி செய்ய அனை ஆளாக்கி விட்டு விட்டால்,
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே" என்று பேசுகிறார் தாயுமானவர்.
"சத்சங்கத்வே நிஸ்சங்கத்வம்
நிஸ்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலதத்வம்
நிச்சலதத்வே ஜீவன் முக்திஹி"
என்று பேசுகிறார் சங்கரர்.
இப்படி, பெரும் ஆன்றோர்கள் அனைவருமே, சத்சங்கத்தின் உயர்வினை, அன்பர் கூட்டம் தனில் இன்புற்று இருப்பதன் பெருமையை மிக உயர்வாகப் பேசியுள்ளார்கள்.

 உன்னடியார்களை விட்டு நான் என்றும் விலகவே மாட்டேன்.. எனக்கு உற்றார்கள், சுற்றார்கள் எல்லாரும் நின் அடியார்களே... என்னருகே யார் வந்தாலும் அவர்களெல்லாம்

உனக்கடியார்களாகத்தான் இருக்கின்றார்கள்..

அபிராமிப் பட்டர் அன்னையின் அன்பராகவே இருப்பதால், காண்போரெல்லாம் அவருக்கு அன்னையின் அடியவராகவேத் தோற்றமளிக்கிறார்களாம்.
அப்படிப்பட்ட அடியவரின் கூட்டத்தை விட்டுத் தான் என்றும் விலகுவதில்லை என்று அன்னையிடம் தெரிவிக்கிறார். 

பரசமயம் விரும்பேன்; 

 உன்னைத்தவிர மற்றொரு தெய்வத்தை விரும்ப மாட்டேன்.
அழகிய தாமரை மலர் போன்று தோற்றமளிக்கும் உன் அழகிய பொற்பாதங்களை வணங்கிய பின்னர்
இன்னொருவரை நான் பணிவது இல்லை
.எத்தனையோ சமயங்கள் இந்த உலகில் உள்ளன தாயே...ஒவ்வொன்றும் ஒவ்வொருவரை இறைவன் என்று உரைக்கின்றன... ஆனால் என் கண்ணிற்கு உன்னை விடுத்து வேறு யாரும் தெய்வமாகத் தோன்றாததால், உன் சமயத்தை விட்டு வேறு சமயத்தை நான் விரும்ப மாட்டேன்.

வியன் மூவுலகுக்குஉள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே,

 மேல் உலகம், பூமி, கீழ் உலகம் ஆகிய மூவுலகிற்கும் உள்ளேயும். இவற்றிற்கு வெளியேவும் நிறைந்திருக்கும் அன்னையே, 

இறைவன் அனைத்துமாக இருக்கிறான் - யாவையுமாய்
அவனே அனைத்துமாக இல்லாதவனாகவும் இருக்கிறான் - அல்லையுமாய்.
இது என்ன புதுக் குழப்பம் ?
எல்லாம் அவன் என்பது புரிகிறது.
அவன் எல்லாமாகவும் இல்லை என்பது எப்படி சரியாகும் ?
ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போல இருக்கிறதே ?
சிந்திப்போம்.
அதற்கு முன்னால் இரணியன் கதையை நினைத்துப் பார்ப்போம்.
‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற
தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்'
அவன் சாணிலும் இருக்கிறான். அணுவை ஆயிரம் கோடியாக பிளந்தால் அந்த தூளிலும் உள்ளான். மாமேரு குன்றிலும் உள்ளான். இந்த தூணிலும் உள்ளான். நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று கூறுகிறான் பிரகலாதன்.
தூணில் இருக்கிறானா என்று கேட்டால் ஆமாம் இருக்கிறான்.
இந்த தூண்தான் அவனா என்று கேட்டால் இல்லை.
தூணில் அவன் இருக்கிறான். ஆனால் அந்தத் தூணே அவன் இல்லை. அவன் தூண் இல்லாமல் மற்ற வடிவிலும் மற்ற இடங்களிலும் இருப்பான்.
அதைத்தான் மணிவாசகர் சொல்கிறார் - யாவையுமாய், அல்லையுமாய்.
அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான். அதற்காக அவை எல்லாம் அவன் இல்லை.
சிலையில், படத்தில் அவனை வணங்கலாம்.
ஆனால், அந்த சிலைதான் அவன் என்று சொல்லக் கூடாது. அவன் அந்த சிலையைத் தாண்டி இருக்கிறான்.
இதையே அபிராமி பட்டரும் "உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே" என்றார். உள்ளும் புறமும் உண்டு.
"வியம் மூவுலகுக்கும் உள்ளே" என்ன இது குழப்பம்.?
ஓரிடத்து ஏழுலகங்கள் என்றார். பிரிதோரிடத்தில் பதினான்கு உலகங்கள் என்றார்.. இப்பாடலிலோ மூவுலகம் என்று பாடுகிறாரே... இதென்ன? என்ற ஐயம் நம் மனத்தில் எழுகின்றது.. ஆனால் அவ்விடத்திருந்து நீ இயக்குகின்றாய் என்ற விளக்கம் நம்மைத் தெளிவு படுத்துகின்றது.. பூவுலகின் இயக்கங்களுக்குக் காரணமாக மூன்று உலகங்கள் உள்ளன..
அவை பிரம்மனின் சத்தியலோகம், திருமாலின் வைகுண்டம், சிவபெருமானின் கயிலாயம். இவ்வுலகங்களே உலகின் முக்கிய இயக்கங்களான படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெருந்தொழில்களை இயக்குகின்றன... ஆனால் தாயே.. நீ அந்த மூவுலகினையும் இயக்குபவள் அல்லவா....? என்கிறார்..

 உள்ளத்தே விளைந்தகள்ளே, 
' கள்ளே ' - என்று அம்பாளைச் சொல்வது சுருதி பிரமாணம்.
717. மதுமதீ - மதுவுடன் இருப்பவள். மது - தேன் என்றும், மயக்கம் தரும் பொருள் ( கள் முதலியவை) என்றும் பொருளுடையது. ஸ்ரீபாஸ்கரராயர் ' மஹத்யை வா ஏதத்தேவதாயை ரூபம் யன்மது ' - என்று மேற்கோள் காட்டி இது ' சுருதிவாக்கு ' என்று ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வியாக்யானத்தில் கூறுகிறார். அதாவது ' அம்பாளுடைய ரூபமே தேன் போன்றது ' என்று பொருள்.
" எத்திக்கும் தானாகி என் இதயமே ஊறி தித்திக்கும் ஆனந்தத் தேனே ! " - என்பார் தாயுமானவர்.
56. மதுப்ரீதா - அம்பாள் மதுவினால் ( தேன்) ப்ரீதியடைகிறாள்.
அம்பிகையே ஆனந்த உருவமாக இருக்கிறாள் அல்லவா? அவள் அன்பர்களின் கண்ணுள் மணியாக நின்று இந்தக் காட்சியைக் காணச் செய்கிறாள். பக்தர்கள் பால் இரக்கம் கொண்டு இந்த நிலையை அருள்கிறாள்.
களிக்குங்களியே, அளிய என் கண்மணியே!

நீ என்னுள்ளத்தில் என்றும் ஆனந்தத்தை தரும் தேன் போன்றவள். ஆனந்தத்திற்கு ஆனந்தம் தருபவள். என் கண்மணி நீ.
ஆனந்த லஹரி என்று அம்பாளுக்கு ஒரு பெயர். அதாவது ஆனந்ததினை பிரவாஹமாக அருள்பவள்.
ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியில் முதல் 41 ஸ்லோகங்கள் ஆனந்தலஹரி என்றுதான் அழைக்கப்படுகின்றன. அதாவது ஆனந்த வெள்ளம் என்று பொருள். பின் இருக்கக்கூடிய 59 ஸ்லோகங்கள் சௌந்தர்ய லஹரி - அழகு வெள்ளம் நிரம்பியதாம்.
மனதினுள்ளே அப்படி அவள் ஆனந்த போதை தரும் ஒரு கள் போலே நிறைந்து இருப்பது எவ்விதம் கிட்டிற்று? சொல்கிறார் பட்டர்.
அன்னையின் திருஉருவங்களும், திருநாமங்களும் எண்ணிலடங்கா. இதை நன்கு அறிந்தவர் அபிராமிபட்டர். ஆனாலும் ' அன்னை அபிராமியின் ' திருவுருவக் கோலம் ஒன்றே தியானிப்பதற்குரிய பொருளாக அவர் உள்ளத்திலே நின்றது.
இதனையே, காரைக்கால் அம்மையார், ' ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணித்தொழிந்தேன்
ஒன்றே என் உள்ளத்தின் உள்ளடைத்தேன் ' - என்று பாடுகிறார்.
மனதில் அந்த அபிராமியின் கோலம் அன்றி வேறொன்று குறிப்பதில்லை எனக்கொண்டிருந்தார் அவர். அப்படி மீண்டும் மீண்டும் மீண்டும் அவளையே த்யானம் செய்து வந்ததினால், அந்த மெய்ப்பொருள், எங்கும் நிறைந்து இருக்கும் அந்த பரம்பொருள், அவரது உள்ளத்தேயும் விளைந்தது. வேறொறு பொருள் அன்றி அந்த ஒன்றையே த்யானம் செய்ததினால், அந்த த்யானமும் சித்தியாயிற்று. வேறொறு சமயம் எதனிலும் நாட்டமின்றி, அம்பிகையையே, அபிராமியையே த்யானம் செய்து வந்ததினால், அந்த அம்பிகை, அந்த அபிரமி அவரது உள்ளத்தே விளைந்து, களிக்கும் களியாக நின்றாள்.


கள்ளை
அருந்துவோருக்கு அது மயக்கத்தை, இன்பத்தைத் தருகின்றது... ஆனால் அக்கள்ளே களிக்கும் களி... அக்கள்ளையே இன்பத்தால் மயங்க வைக்கும் பேரின்பம் நீயே அம்மா..... எளியவன் எனக்கு நீ என் கண்ணின் மணியைப் போன்றவள்னு சொல்றார்
கள்ளைக் குடிப்பதனால் உண்டாகும் மயக்கத்துக்கு ' களி ' என்று பெயர். இந்தக் கள்ளால் உண்டாகும் ஆநந்த அனுபவமும்
ஒருவகைக் களியே ஆகும்.

அளிய என் கண்மணியே!
அளிய - என்ற சொல்லுக்கு ஆதரிக்கத் தக்கவன் , இரங்குவதற்குரியவன் என்று பொருள். ' அளியன் தானே முதுவாய் இரவலன் ' - திருமுருகாற்றுப்படை.
அளி என்பதற்கு ' வண்டு ' என்ற பொருளும் உண்டு. அன்னை அபிராமியைக் ' கள்ளே ' என்று ' ' ' ' 'விளித்து ' அளி கூறியதால் - தேனைப் பருகும் வண்டாகத் தன்னை பட்டர் கூறிக்கொள்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
எனவே ' என் கண்மணியே ' என்று கூறி பாடலை நிறைவு பெறச் செய்கிறார் அபிராமிபட்டர்
                                                           பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 


                                            
                                                                                       

                                                             
                                                                  U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 

                                                                          https://youtu.be/G58cl7LFT
             
                                                               அன்பர்கள் இசைக்கிறார்கள் 

       


                                                                  U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 

                                                                      https://youtu.be/q9NCfzZW1N4

                                                                           அபிராமி சமயம் நன்றே!!


                                                                           அபிராமி சரணம் சரணம்!!
                                                                           முருகா சரணம் 
                                                                                                                                   

No comments:

Post a Comment