Tuesday, 21 January 2014

THIRTY FOURTH PADI VIZHA - 2014

34வது படிவிழா - 2014 

படி என்றால் என்ன ?நாம் உயர ஏற உதவி செய்யும் படிக்கட்டுக்கள் மட்டும் தானா?வேறு பொருள்கள் ஏதேனும் உண்டா என்று  ஆர்வத்துடன் அகராதியை பார்த்ததில் கிடைத்தவை: படித்தல்  (வாசித்தல்) பூமி,நீர்நிலை,உருவம்,தகுதி,குணம்,தரம்.நித்திய கட்டளை, வம்ச பரம்பரை.விதம்,வேடம்,நாழி,சம்பளம்,(சம்பளப்படி) ஓர் அளவு (அரிசி அளக்கும் படி) தாழ்வாரம்,வாயிற்படி,படிக்கல்,முறைமை,படிதல்,கீழ்ப்படி           ( obey ) முதலிய பொருள். அது தவிர மற்ற வார்த்தைகளோடு சேரும்போது மாறுபட்ட பொருள் கிடைக்கும் .உதாரணமாக ,"சொற்படி,வாழும்படி.சேரும்படி ,கூடும்படி,விளங்கும்படி  போன்றவை.  நம் பாடல்களில் " படி " பல இடங்களில் பல பிரயோகத்தில்  இடம் பெற்றுள்ளது.சில உதாரணங்கள்:

  • பிறவிகள் தோறும் எனை  நலியாத   படி 
  • படி   மீது துதித்துடன் வாழ 
  • பருத்தி சோமன் வானாடர   படி  யுளோர்கள் 
  • ஏட்டின் விதிப்  படி யே 
  • அப் படி ஏழும் ...இப் படி யோனி ..விதிப் படி யே மாறி 
  • தொலையும் அந்தத்துக்கு அப்புறம் நிற்கும்  படி ..பத்ம தச்சனும் முட்கும்  படி 
  • பொற் சிகரக்  குன்றை ப்  படி யில் சிந்த தொடும் வேலா 
  • சந்திரசேகரன் பாவை விளையாடும்  படி 
  • படி புனல்  நெருப்படர்                                                                                                    
பொதுவாக அறியப்பட்ட பொருள்  படிக்கட்டு,படித்தல். குருஜி, திருப்புகழை ராகதாளத்தோடு பாட முடியாதவர்கள் படித்தால் போதும் பெருமான் மனம் உவந்து அருளுவான்  எனபார் அருணகிரியார் மயில் விருத்தத்தில்:

"பாடல் தரு மாசறு வேல் விருத்தம் ஒரு பத்தும் 
மாசறு மயில் விருத்தம் ஒரு பத்தும்  
படிப்பவர்கள் ஆதி மறை நூல் 
மன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர் 
வாணி தழுவப்பெருவரால் 
மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
வாரிச மடந்தையுடன் வாழ் 
அன்னாயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர் 
அமுதாசனம் பெறுவர் மேல் 
ஆயிரம் பிறை தொழுவர்  சீர் பெறுவர் பேர் பெறுவர் 
அழியா வரம் பெறுவரே "

படி விழாவில் இந்த இரண்டு "படி" களும் கலந்துள்ளதை நாம் அனுபவிக்கலாம். இவ்வளவு பதிவுகளின் காரணம் அன்பர்கள்  யாவரும் பெருமளவில் படி விழாவில் கலந்து கொண்டு பாட வேண்டும்,படிக்கவேண்டும். கேட்க வேண்டும்.அனுபவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கத்தான். இப்போது யதார்த்த  படி விழாவுக்குத் திரும்புவோம். 

நம் படி விழா பல நகரங்களில் ஜனவரி முதல் வாரத்தில் நடை பெறுகிறது.மும்பையில் 26ம் தேதி குடியரசு  தினம் பொது விடுமுறை .அதனால் அன்பர்கள் எல்லோரு ம்  கலந்துகொள்ள வசதி யாக இருக்கும் என்ற நோக்கம் கருதி அன்று ஆண்டு தோறும் நடக்கிறது.

திருத்தணியில்1917 ஜனவரி முதல் தேதி அன்றே படி விழா  தொடங்கி வைத்தவர் சச்சிதானந்த வள்ளிமலை சுவாமிகள்.அது சுவாரஸ்யமான ஒரு தொடக்கம்.அந்த கால கட்டத்தில்,நம்மவர்கள் நம்மை ஆண்ட ஆங்கிலேய பிரபுக்களை தங்கள் சுயநலம் கருதி அந்த புத்தாண்டு தினத்தில் "துரையே " என வணங்கி பல பரிசுகளை வழங்கி வந்தனர்.துரைகளுக்கு துரையாக நம்மை வாழ வைக்கும் நம் பெருமானை வணங்காமல் ,அவர்களை போற்றிய மக்களைக்கண்டு மனம் வெதும்பி,அவர்களை திசை திருப்ப "திருத்தணி திருப்புகழ் திருவிழா " என்ற அமைப்பை ஏற்படுத்தி படி விழா தொடங்கினார்.

ஆண்டு முழுவதும் நாம் செய்த பாவங்களை களையவும் ,புத்தாண்டு வளமாக அமையவும் பெருமானின் கருணை வேண்டியும் டிசம்பர் 31 இரவு முதல் மறுநாள் புத்தாண்டு காலை வரை படிவிழா இன்று வரை தொடருகிறது.

துரை என்ற சொல் சமீப காலத்தில் தான் தமிழில் புகுந்துள்ளது என்று பெரும்பாலானோர் கருத்தில் கொண்டுள்ளனர்.ஆனால், நம் அருணகிரியார்  "துரையே அருள் தந்து என்றும் இன்பம் தரு வீடது தருவாயே."என்று  "வஞ்சம் கொண்டும்" என்ற திருசெந்தூர் பாடலில் வேண்டுகிறார்.திருத்தணி முருகன் துரை முருகன்  என்றே அழைக்கப்படுகிறார்.

நம் படி விழா பெருமானின் திரு உள்ளப்படியும் சிருங்கேரி மஹா சன்னிதானத்தின் அருளாசியுடனும் கடந்த 33ஆண்டுகளாக குருஜியின் தலைமையின் கீழ் நடை பெற்று வருகிறது.இந்த ஆண்டும் அருவமாய் நம்மை வழி நடத்துவார் என்பதில் ஐயமில்லை.அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.படி விழாவில் கலந்துகொள்வது நம் கடமை,பாக்கியம்,குருஜிக்கு செலுத்தும் நன்றிக்கடன்,காணிக்கை என்ற உணர்வுடன் அன்பர்கள் முன்னதாகவே வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

34வது படிவிழா - 2014 

26 ஜனவரி 2014

அழைப்பிதழ் 


நிகழ்ச்சி நிரல்



சென்னையிலும்,செகந்திராபாத்திலும்  நடைபெற்ற படிவிழாக்களின் புகைப் படங்களை அடியி ல் உள்ள LINK மூலமாக காணலாம். அருளாளர்கள் நீலகண்டன்,மாலதி ஜெயராமன் அவர்களுக்கு நன்றிகள் பல.

Chennai: 

Secundrabad: 

No comments:

Post a Comment