Thursday, 1 March 2018

அபிராமி அந்தாதி - 28


                                                               அபிராமி அந்தாதி - 28   

                                                                                                      

                                                     
சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே! நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே 

அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை... நன்றிகள் பல 

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்

சொல் - என்பது முதலில் வருவது - சக்தியைக் குறிக்கும்.பொருள் - என்பது சொல்லைக் கேட்ட பிறகு விளங்குவது - சிவன்.பொருளின்றி ஏதேனும் ஒரு சொல் இருக்க முடியுமா? இல்லை அல்லவா? அது போல், ஒரு பொருள் பற்றிப் பேச வேண்டுமானால், ஏதேனும் ஒரு சொல் சொல்லித்தானே ஆக வேண்டும்? அப்படி, சொல்லும், பொருளும், இரண்டறக் கலந்தவை. அப்படித்தான், இறைவனும், இறைவியும் கலந்திருப்பதாகப் பேசுகிறர் பட்டர்.
லலிதா ஸஹஸ்ரநாமத்திலயும் அன்னையை
வாகதீச்வரீ - வாக்குகளிற்கு அதிபதியானவள் வசினீ முதலிய எட்டு வாக்தேவதைகளுக்கும் ஈசுவரியானவள். இவர்கள், அம்பாளின் ஆக்ஞைப்படியே ( இந்த) ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தை எழுதினார்கள். எல்லா விதமான வார்த்தைகளும் எழுத்துக்களும் அம்பாளுடையதே என்று ஸௌந்தர்யலஹரீயில் பகவத்பாதாள் கூறியுள்ளார்கள்.
சிவ பெருமான் நர்த்தனம் செய்தபோது, முதலில், சப்தங்கள் எழுந்தன என்று சொல்வார்கள்.
அந்தச் சொற்களே பின்னர் வேதங்களாக விளங்கின என்று சொல்வதும் உண்டு. சொல்லையோ அதன் பொருளையோ பிரிக்க முடியாது. அதுபோல இந்த அர்த நாரீஸ்வரத் திருக் கோலத்தை பாடுகிறார் பட்டர்.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -
நடேஸ்வரி - நடரேசருடைய மனைவி. சிதம்பரத்தில் ஆடும் நடராஜாவின் மனைவி. சிதம்பரம் என்பதை ஷேத்திரம் என்றும், ஹ்ருதயாகாசம் என்றும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். இரண்டுமே சரியானவை. அப்படி ஆடும் நடேசருக்கு அனுஸரணையாக இவளும் நடனம் ஆடுகிறவள்.
இவர்கள் இருவரும் நடனம் செய்வதை " தவாதாரே மூலே " ஸௌந்தர்யலஹரீயில் ( ஸ்லோகம் - 41) சொல்லப்படுகிறது.
புல்லும்

புல்லுதல் என்று ஒரு அருமையனா தமிழ் சொல் உண்டு. அணைத்தல், மருவுதல், தழுவுதல், புணர்தல் என்று தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள நெருக்கத்தை புலப்படுத்தும் ஒரு சொல். வள்ளுவர் இந்த சொல்லை பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்

அபிராமி, அவளுடைய துணைவனை அணைத்து இருக்கிறாள். அவளுடைய துணைவன் மீது அவளுக்கு அவ்வளவு அன்பு. நெருக்கம் என்றால் மிக நெருக்கம். பிரிக்க முடியாத நெருக்கம். அதை எப்படி சொல்லி விளங்க வைப்பது ?

ஒரு சொல்லும், அதன் பொருளும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படி ஒரு நெருக்கம். பொருள் இல்லாவிட்டால் சொல் இல்லை. சொல் இல்லாமல் பொருள் இல்லை. இரண்டும் வேறுதான் என்றாலும் ஒன்றை விட்டு ஒன்று இல்லை.

கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவு, உள்ள ஒரு புரிதல் என்பது ஒரு அலுவகலத்தில் வேலை பார்க்கும் மற்றொரு நபருடன் உள்ள புரிதல் போல அல்ல.
ஒரே சொல் பல அர்த்தங்களை தரும்...
அறிவு பூர்வமாய் ஒரு அர்த்தம்
உணர்வு பூர்வமாய் ஒரு அர்த்தம்
சொல்லுபவரின் மன நிலையை கொண்டு ஒரு அர்த்தம்
சொல்லப் படும் இடத்தை கொண்டு ஒரு அர்த்தம்
என்று அர்த்தம் மாறுபடும். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அறிவு பூர்வமாய், உணர்வு பூர்வமாய், ஒருவரின் மனதை ஒருவர் அறிந்து கொண்டு...ஈருடல் ஒருயிராய் இருக்க வேண்டும்..அபிராமி அப்படி இருக்கிறாள்....
அதாவது அபிராம பட்டர்,இந்தப் பாடலில், பக்தி மார்க்கத்தையும் அதன் பயனையும் இந்த இரண்டு சொற்களினால் விளங்க வைத்து விட்டார். சக்தியின் மூலமாகத்தான் சிவனை ( சிவலோக பதவியை) அடைய முடியும். திருமூலரும், " மருவொத்த மங்கையும் தானும் ( திருமந்திரம் - 1137) என்பார்.அதாவது மலரோடு மணம் பொருந்தியிருப்பது போல சிவனும் சக்தியும் ஒன்றியிருப்பது.
இரகு வம்சத்தில் காளிதாசன் இப்படி சொல்றார்.
वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये।
जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ॥
வாக³ர்தா²விவ ஸம்ப்ருʼக்தௌ வாக³ர்த²ப்ரதிபத்தயே|
ஜக³த​: பிதரௌ வந்தே³ பார்வதீபரமேஸ்²வரௌ||
சொல்லும் பொருளும் என இணைந்த தொல்லுலகின் தாய் தந்தையரை, பார்வதி பரமேஸ்வரரை, சொல்லையும் பொருளையும் அறிந்திடவேண்டிப் பணிகிறேன்னு சொல்றார்.

 பரிமளப் பூங்கொடியே!

பரிமளப் பூங்கொடியே. ( 631. திவ்ய கந்தாட்யா - தெய்வீக மணத்தால் நிறைந்தவள். ) நடராசப்பெருமானுடன் நின்று விளங்குவதால் ' அவளைப் பூங்கொடியே ' என்றார்.


நின் புதுமலர்த் தாள்

அவளுடய பாதங்கள்...மிகமிகமென்மையானவை...ஈரமானவை...மணம் வீசுபவை ....இப்படி சொல்லிக் கொண்டே போவதை விட ...அப்போது தான் மலர்ந்த மலர் போல் இருக்கும் அவளுடைய பாதங்கள்....
அல்லும் பகலும் தொழுமவர்க்கே
அப்படிப் பட்ட உன் பாதங்களை இரவென்றெண்ணாது, பகலென்றெண்ணாது எந்நேரமும் தொழுகின்ற அடியவர்களுக்கு....

என்னவெல்லாம் கிட்டும்?


அழியா அரசும் செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே 
வேறென்ன கிட்டும்? செல்லும் தவநெறி.. எங்கே செல்வதற்கான தவநெறி.? இறப்புக்குப் பின்னான உலகு சொர்க்கமா? அல்லது நரகமா? என்பதைத் தீர்மானிப்பவை நாம் செய்யும் புண்ணிய பாவங்களே.. எனவே நல்லுலகமான சொர்க்கத்துக்குச் செல்வதற்குரிய அரும்பணியான தவநெறிகள் அன்னையைத் தொழுவோர்க்கு வந்து சேரும்.
வேறு? சிவலோகம்... அம்மையுடன் அப்பன் அருளாட்சி செய்யும் சிவலோகத்தில் வாழக்கூடிய வாய்ப்பு.. சிவலோக பதவியடைந்தார் என்று நாம் மரித்த பின்னர் நமது நினைவிடத்தில் கல்வெட்டில் எழுதிவைத்தால் மட்டும் சிவலோக பதவி நமக்குக் கிட்டிவிடுமா? இல்லவே இல்லை... அன்னையின் கருணை நமக்குக் கிட்டினால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார் அபிராமிப் பட்டர்..
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திலயும்
சிவபரா - தன் பக்தர்களுக்கு சிவனைக் காண்பிப்பவள்னு சொல்லியிருக்கு.
பவதாவஸுதாவ்ருஷ்டி. பவதா + வஸுதா + வ்ருஷ்டி என்றும் பிரிக்கலாம். பவதா - சிவனை தருபவள். வஸுதா - செல்வங்களைத் தருபவள். அதாவது மோட்சத்தையும், போகத்தையும் அளிப்பவள்.
ராஜ்யதாயினீ - ராஜ்யத்தைக் கொடுப்பவள்.
ஸாம்ராஜ்யதாயினீ - ஸாம்ராஜ்யத்தைக் கொடுப்பவள்.
ராஜபீடநிவேசித நிஜாச்ரிதா - தன்னை அண்டியவர்களை அரசபீடத்தில் அமர்த்துபவள்.
இந்த அந்தாதில பட்டர் அடியாருக்கு என்ன என்னவெல்லாம் கிடைக்கும் என்று பட்டியல் போடுவதும்கூட மிக அழகாக இருக்கிறது. முதலில், நாம் வாழப், பொருள் வேண்டும். அந்தப் பொருள் வேண்டும் போகத்தின் எல்லை தான், ராஜ போகம். அந்த ராஜ போகத்தினையே தந்து விடுகிறாள் எம் அன்னை. பின்னர், போகம் கசந்து, மனம் இசைந்து, நல் வழிப்பட்டு, தவ நெறி தேடும்போதும், அருள்பவள் அந்த அன்னைதான். அந்தத் தவநெறியின் பயனேயாக, முக்தியினை, அந்தச் சிவத்தினை, நல்குவதும் கூட, எம் அன்னையே என்று அழகாக உணர்த்துகிறார் பட்டர்.                                                                                                                                          பொழிப்புரை

தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும், நடராஜப் பெருமானுடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்




                                                                பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்


                                                                                               

                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHON

                                        https://youtu.be/-8oq2Rae4qk?t=3

                            
                                                                        அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                                       


                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 



                                      https://youtu.be/mFmYi4hrAjk?t=2 



                                              அபிராமி சரணம் சரணம்!!
                                                        முருகா சரணம் 

Monday, 19 February 2018



புதிய வரிசை எண் 498 வழிபாடு புத்தக எண் வரிசை 422



குருமஹிமை   இசை  புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள்  476-503

 புதிய வரிசை எண்  498 வழிபாடு புத்தக எண்  வரிசை  422

"அதிமதங்க "என்று  தொடங்கும் பாடல் 


                                                                  பாடலும் பொருளும் காண குறியீடு




                                                        http://www.kaumaram.com/thiru/nnt0309_u.html



                                                                                 பாடல் இசையுடன் 

                                                                      17.10.2010 விஜய தசமி வழிபாடு 

                                                                                              



                                                                 Utube  Link for ANDROID  and   IPAD   PHONE  


                          https://www.youtube.com/watch?v=Dwguf1tIJT0&feature=youtu.be


                                                                                           அன்பர்கள் 


                                                                                                    


                                                                 Utube  Link for ANDROID  and   IPAD   PHONE  




                            https://www.youtube.com/watch?v=2Sk6TtJ7GdQ&feature=youtu.be

                                                                      அன்பர்கள் வழிபாட்டில் 


                                                                                              


                                                                 Utube  Link for ANDROID  and   IPAD   PHONE  





                                            முருகா சரணம் 















Tuesday, 23 January 2018

மும்பை படிவிழா


                                                                                                    


                                        மும்பை படிவிழா 


                  திருசெம்பூர் திரு முருகன் திருக்கோயில் 




                                                                                                            







வழக்கம்போல் 38 ம்ஆண்டு  படிவிழா செம்பூர் முருகன் ஆலயத்தில்   26.1.2018  வெள்ளி கிழமை அன்று  காலை 7.30 மணிஅளவில் தொடங்கி  108  திருப்புகழ்பாக்களுடன்படிவிழா வைபவம் நடைபெறஉள்ளது.

அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.

மும்பை,,புனே வாழ் அன்பர்களும் நகருக்கு விஜயம் செய்யும் அன்பர்களும் பெருமளவில் கலந்து கொண்டு முருகப் பெருமானின் திருவருளை பெற வேண்டுகிறோம்.





                                                                                                       





                                     முருகா சரணம் 
                                                                                                   

Tuesday, 9 January 2018

புதிய வரிசை எண் 497 வழிபாடு புத்தக எண் வரிசை 290



குருமஹிமை   இசை  புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள்  476-503

 புதிய வரிசை எண்  497 வழிபாடு புத்தக எண்  வரிசை  290

"தலங்களில் " என்று தொடங்கும் பாடல் 


                                                                  பாடலும் பொருளும் காண குறியீடு

                                               http://thiruppugazhamirutham.blogspot.in/2016/12/290.html

பெருங்குடி திருத்தலம் 

இத்தலம் வயலூர் செல்லும் வழியில் சோமரசம் பேட்டைக்கு அருகில் அமைந்துள்ளதாக அறிகிறோம்.மற்ற விபரங்கள் தெளிவாக இல்லை.அன்பர்கள் தெரிவிக்கலாம்.

                                                                                     பாடல் இசையுடன் 

                                                                      17.10.2010 விஜய தசமி வழிபாடு 


                                                                                                       


                                                                 Utube  Link for ANDROID  and   IPAD   PHONE  

                                                                     https://youtu.be/C-zHWp9pacY

                                                                              அன்பர்கள் வழிபாட்டில் 

                                                                                                      


                                                                 Utube  Link for ANDROID  and   IPAD   PHONE  

                                                                     https://youtu.be/E4V14n8xkQQ


                                                                   முருகா  சரணம் 




Friday, 5 January 2018

சுப்ரமண்ய புஜங்கம் 13



                                                                   சுப்ரமண்ய  புஜங்கம்   13

                                                                                                    


சுப்ரமண்ய  புஜங்கம்   13

ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு:

ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத் |

ஸதா பூர்ணபிம்பா: கலங்கைஸ்ச ஹீனா

ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் ||


அன்பர் தொகுத்தளித்துள்ள விளக்க உரை 


ஸ்லோகம்  2 ல் 

"ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்

ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம் |

சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே


முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் ||"


  ‘என் மனதில் உன் ஆறுமுகங்களோடு கூடிய ஒரு ஜோதி, ஒரு ஒளி பிரகாசிப்பதனால் தான், ஒண்ணுமே தெரியாத எனக்கு, எழுத்தும் தெரியாது, சொற்களும் தெரியாது, பொருளும் தெரியாது, கவிதையும் தெரியாது, உரைநடையும் தெரியாது. என் வாக்குல ஸ்லோகம் வறது, நான் இந்த ஸ்தோத்ரத்தை பண்றேன்ன்னு துதித்த ஆதி சங்கரர்  அந்த ஆறு முகங்களையும் மீண்டும்  வர்ணிக்கிறார்.

ஹே ஸ்கந்தா! நான் உன்னுடைய முகங்களுக்கு ஸாம்யமா சந்திரனை சொல்லணும்னு ஆசைப் படறேன்.

 ஆனால் ‘ஸதா’ – எப்பொழுதும், 

‘சாரதா:’ சந்திரன் சரத் காலத்துல இருக்கிற மாதிரி, சரத் காலத்துல சந்திரன் மேகங்கள்லாம் இல்லாம ரொம்ப ஸ்வச்சமாக அழகாக இருக்கும். அந்த சரத்காலத்துல இருக்கிற மாதிரி, 

‘ஷண்ம்ருகாங்கா:’ ஷஷாங்கா: ம்ருகாங்கா: இதெல்லாம் சந்திரனுக்கு பெயர். ஷஷம்-ன்னா முயல். அந்த சந்திரன்ல ஒரு அடையாளம் இருக்கே, அது முயல் மாதிரி இருக்கு. 

ம்ருக: ன்னா மான், மான் போன்ற அடையாளம், கருப்பா ஒரு அடையாளம் இருக்கு இல்லையா சந்திரன்ல. அதனால அதுக்கு ம்ருகாங்கா: ன்னு பேரு. ‘‘ஷண்ம்ருகாங்கா:’ ஆறு சந்திரன்கள்,

 ‘பூர்ணபிம்பா:’ பூர்ண சந்திரன்கள், பிறை சந்திரன்லாம் இல்லை. முழு நிலவாக ஆறு சந்திரன்கள், மான் மாதிரி அடையாளத்தை உடைய சந்திரன்கள், 

‘ஸமந்தாத்’ – எல்லா பக்கங்களிலேயும் சேர்ந்து 

‘ஸமுத்யந்த ஏவ:’ உதிச்சுதுன்னா 

‘ஸ்த்திதா: சேத் யதி ஸ்யு:’ எப்பொழுதும் ஸ்திதமா அந்த ஆறு சந்திரன்களும் உதிச்சு, அது எல்லாம் முழுச் சந்திரனா இருந்து, அந்த ஆறும் எப்பவும் பிரகாசிச்சிண்டு இருந்துதுன்னா, அப்ப உன்னுடைய முகத்துக்கு உவமை சொல்லலாமான்னு நான் நினைப்பேன்.

 அது கூட உன் முகத்துல ஒரு கஸ்தூரி திலகமோ, அது மாதிரி உன் முகத்துலேயும் ஒரு அடையாளம் இருந்து, சந்திரன்லேயும் ஒரு களங்கம் இருக்குன்னா சரி. இது ஒரு உவமைன்னு சொல்லலாம் 

‘ஸாம்யம் ப்ருவே’ ஸமமாக சொல்லலாம்னு ஆரம்பிப்பேன்.

உன்னுடைய முகத்துல கஸ்தூரி திலகம் மாதிரி எதுவும் இல்லாமலே, சாதாரணாமாவே, எப்பொழுதும் உன் முகம் பிரகாசிக்கறது. எந்த அலங்காரமும் இல்லாமல் இருக்கும் அந்த ஆறுமுகங்களுக்கு நான் ஏதாவது சொல்லணும்னா

 ‘கலங்கைஸ்ச ஹீனா: பூர்ணபிம்பா:ததா த்வன்முகானாம்

 சந்திரன் எப்பயாவது இந்த களங்கமே இல்லாம, பூர்ண சந்திரனாக, ஆறு சந்திரன்கள் உதிச்சுதுன்னா, அப்போ நான் அதை உவமையாக சொல்வேன். சந்திரனோ எப்பொழுதும் களங்கத்தோடு தான் இருக்கு, ஒரே ஒரு சந்திரன் தான் இருக்கு, அது மாசத்துக்கு ஒரு நாள் தான் பூரண சந்திரனாக இருக்கு, அதுவும் சரத்காலத்துல தான் நன்னா ப்ரகாசிக்கறது, மத்த காலங்கல்லாம் மேகத்துகுள்ள போயிடறது. இப்படி இருக்கும் போது உன்னுடைய முகத்துக்கு நான் எப்படி சந்திரனை உவமையாக சொல்ல முடியும்ன்னு வேடிக்கையா சொல்றார்.

உன்னுடைய முகம் உவமை சொல்ல முடியாத அளவுக்கு அழகா இருக்கு. நிருபமான முகங்களா இருக்குன்னு சொல்ல வரதை, இந்த மாதிரி ஆச்சார்யாள் வேடிக்கையா சொல்ற மாதிரியும், அவ்வளவு அழகு அந்த முகத்தினுடைய ஜோதி என்று அப்படி சொல்றார்.


முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் ||"

அப்பேற்பட்ட அந்த ஆறுமுகங்களுக்கு சந்திரனையெல்லாம் உவமையா சொல்ல முடியாது ன்னு முடிச்சுடறார்.

அருணகிரிநாதர் 

தண்டையணி எனத்தொடங்கும் திருப்புகழில் 

கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்றன் முன் சந்தியாவோ என்கிறார்.

முருகா சரணம் 

Monday, 1 January 2018

அபிராமி அந்தாதி 27



                                                                                 அபிராமி அந்தாதி  27

                                                                                                   

உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை,
பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை
, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,-
சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே :
அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 
உடைத்தனை வஞ்சப் பிறவியை,
உடைத்தனை வஞ்சப்பிறவியை - என்னை வஞ்சிக்கும் ஆறுவித எதிரிகளான ஆசை, சினம், மயக்கம், பேராசை, செருக்கு, வெறுப்பு ஆகியவற்றை அழித்து அவற்றால் தோன்றிய பிறவிப் பிணிப்பை உடைத்தாய். அன்னை என்னவெல்லாம் செய்கிறாள்? சங்கிலித் தொடராய் வரும் இந்தப் பிறவித் தொடரினை உடைத்து எறிகிறாள். பிறவி எடுப்பதே தன்னை அறிந்து, தான், இந்த உடல் அல்ல, ஆன்மாவே என்று உணர்ந்து, அவள் அடி சேர்வதர்காகத்தான். ஆனாலும், இந்தப் பிறவி, நம்மை வஞ்சித்து விடுகிறது. நாம், நம்மை உண்ர முடியாதபடி செய்து விடுகிறது. அப்படிப்பட்ட வஞ்சப் பிறவியை, அவள் உடைத்து எறிகிறாள்.
பிறப்பு ஒரு வஞ்சனை என்பது அபிராமிப் பட்டரின் கருத்து.. எனவேதான் பெரும் மகான்கள் எல்லோரும் மீண்டும் பிறவியே வேண்டாம் என்றுரைத்தனர்.. பிறந்த பின்னர் உலகில் பல்வேறு கட்டுக்களால் நாம் கட்டப்பட்டு வஞ்சனைக்குள்ளாகிறோம். ஆசை, ஆணவம், சினம், மாயை இவற்றால் கட்டுண்டு நம் பிறவிப் பயனை மறந்து போகிறோம்... ஆனால் என் அபிராமி அன்னையே.. நீ இவ்வஞ்சனையை உடைத்து என்னைக் காத்தாய்னு வியக்கிறார் பட்டர்.
நாம் எடுக்கும் பிறவி ஒன்றா, இரண்டா? எண்ணிக் கணக்கிட்டுச் சொல்ல முடியாதது. " என் பிறவி எண்ணத் தொலையாதே" என்று அலுத்துக் கொண்டார் காளமேகப் புலவர். 

" எழுகடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி" என்று ஏழுகடல் மணல்களைக் காட்டிலும் என் பிறவி அதிகம் என்று கண்டு, கணக்கிட்டுக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.


 இதுவரை எடுத்த பிறவிகள் எண்ணத் தொலையாதவை; இனி எத்தனை பிறவிகள் எடுக்கப் போகிறோம் என்பதும் தெரியாதவை. இந்தப் பிறவி எடுக்கும் தொடரினை உடைத்து எறிய யாரால் இயலும்? எவ்வாறு இயலும்? அது இயல நாம் என்ன செய்ய வேண்டும்?
அபிராமியால்தான் அது முடியும். அது முடிந்திட நம்முடைய நாவில் தங்கிய புன்மொழிகளாலேனும், அன்னையின் மணம் வீசும் இணை அடிகளைப் புகழ வேண்டும்னு சொல்லித்தறார்.
வஞ்சப்பிறவி என்று சொல்லுவது சாலப் பொருந்தும். தாயுமானவரும், ' இறப்பும் பிறப்பும் பொருந்த என்கெவ்வண்ணம் வந்ததென்றெண்ணியான் பார்க்கில் மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயாமனத்தால் வளர்ந்தது தோழி ' - என்பர். ( அதாவது வஞ்சம் என்பதற்கு மாயை என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்துலையும் அன்னையை இப்படித்தான் வர்ணனை பண்ணியிருக்கு.
880. ஸம்ஸாரபங்க நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதா : -
ஸம்ஸார சகதியில் ( சேற்றில்) முழுகியவர்களை தூக்கி வெளியே எடுப்பதில் திறமைசாலி. ஒரு முறையாவது சரணமடையும் எண்ணத்துடன் அம்பாளை நினைப்பவர்கள் முடிவில்லாத ஸம்ஸார ஸாகரத்தில் விழுவதில்லை.
பகவத் கீதை ( 12.7 ) - " தோஷமஹம் ஸமுத்தர்த்தா " இதே கருத்துடையதாய் உள்ளது.
842. பவரோகக்னீ - ஸம்ஸாரம் என்ற நோயை அகற்றுபவள்.
175. பவநாசினீ - ஸம்ஸார பந்தத்தை அழிப்பவள்.
742. பவதாவோஸுதா வ்ருஷ்டி -
ஸம்ஸாரமாகிய காட்டுத் ' தீ ' க்கு அம்ருத வர்ஷமாக இருப்பவள்.
பவ - ஸம்ஸாரம்.
தாவ - காட்டுத் தீ.
இதை அணைப்பதற்குப் பொழியும் அம்ருதமயமான மழை.
" உள்ளம் உருகும் அன்பு படைத்தனை"
உன்னையே எண்ணி உருகிக் கொண்டிருக்கும் அன்பு உள்ளத்தை என்னுள் படைத்தாய்... அன்னையை எண்ணி உருகிக் கொண்டிருக்கும் உள்ளம் அன்பு செய்ய மறுக்குமோ?
பின்னர் ஏன் அபிராமிப் பட்டர் இங்க இப்படி சொல்றார்?
இறைவனை வணங்குதலும், அவனுக்குத் தொண்டு செய்தலும், அவன் ஆலயத்திருப்பணிகளை மேற்கொள்வது மட்டுமே இறைப்பணி என்றாகி விடுமா? உள்ளத்து அன்பு வேண்டாமா? யார் மீது அன்பு வேண்டும்? எல்லார் மீதும் வேண்டும்... அன்னையைத் தொழுவோர், அன்னையை மறுப்போர் என்று அனைவர்பாலும் அன்பு செலுத்தும் உள்ளம் வேண்டும்.
அன்னையை உண்மையாக எண்ணி உருகும் உள்ளத்தில் மட்டுமே இத்தன்மை கொண்ட அன்பு பெருகி வரும்.. அன்னை மேல் அன்பு கொள்ளும் உள்ளம் எல்லார் மீதும் அன்பு செலுத்தும். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றுரைத்த வள்ளலார் உள்ளத்திலுள்ள அன்பு கிடைக்கும்.
அவளை உணரும் விதத்தில், இந்த கல்லாய் இருக்கும் உள்ளம் உருகும் விதத்தில் அன்பு நமக்குள் ஊற்றெடுக்கும்படிச் செய்கிறாள்
" பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை "
நின் திருவடித் தாமரைகளுக்கே பணிசெய்யும் பணியை எனக்கு அளித்தாய்.. எத்தனை பாக்கியம்... ! அன்னையின் திருப்பாதங்களுக்குத் திருத்தொண்டு செய்யும் பணியை மட்டுமே தன் பணியாகக் கொண்டிருந்தார் அபிராமிப் பட்டர். வேறெந்த பணியும் இல்லை.. காலை கண் விழிக்கும் வேளை முதல் இரவு கண் அயரும் வேளை வரை அன்னையைக் காண்பது, அவள் நினைவுகளால் தியானத்தில் மூழ்கியிருப்பது, அவளை அலங்கரிப்பது, அவளைத் தொழுவது என்று என்றென்றும் அவளது திருவடிகளுக்கே திருத்தொண்டு புரிந்து கொண்டிருந்தார். அதனை சற்றே கர்வத்தோடு இவ்விடத்து உரைக்கிறார்.
"நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை"
என் மனம் பல்வேறு அழுக்குக்களால் நிரம்பி வழிந்தது.. கோபம், வஞ்சகம், பொறாமை, காமம், களவு, .... இன்னுமிது போன்ற பல்வேறு அழுக்குக்களால் நிரம்பி வழிந்த என் மனத்தை நீ உன் அருளென்னும் நீரால் துடைத்து அழித்தாய்.. அன்னையின் அருள் மனத்துள் வந்துவிட்டால், அவ்விடம் குடிகொண்ட கசடுகள் மாயமாகி விடும்.. இதுவே அன்னை தரும் பேரருள்..
மனதிலே இருக்கும் ஜன்ம ஜன்மமாக வந்த வாசனைகளை, அழுக்குகளை, தனது அருள் என்னும் ஆற்றுப்பெருக்கினால், துடைத்து எறிகிறாள். அப்படிப்பட்ட அருள் புனல் இல்லாது, இந்த வாசனைகளைக் களையத்தான் முடியுமா என்ன? அவளே மனது வைத்து, நமது அழுக்குகளை எல்லாம் துடைத்து விட்டால்தான் உண்டு. அவள் அருளாலே, அவள் அருள் இருந்தால் மட்டுமே, அவள் தாளிணைப் பெற முடிகிறது.

- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே :
பேரழியே.. உன் பேரருளை என்னவென்றுரைப்பேன்..அவள் பெருமையெல்லாம் சொல்லிவரும் அபிராமிப் பட்டருக்கு அன்னையின் அருளாட்சியால் அவளது பல்வேறு பெருமைகள் நினைவுக்கு வருகின்றன. இத்தனைதான் சொன்னோம்...இன்னும் சொல்லவேண்டியன பல உள்ளனவே... அன்னையே... இதனை நான் எங்ஙனம் உரைப்பேன்.! என்று வியந்து பாடுகிறார் பட்டர்.

பொழிப்புரை 

பேரழகியே! என் மனதிலிருந்த ஆசை, பற்று, ஆணவம் போன்ற மாசுகளை உன் அருள் வெள்ளத்தால் கழுவித் துடைத்தாய்; மாசு நீங்கிய என் உள்ளத்தில் உன்னையே எண்ணி உருகுமளவுக்கு அன்பைப் படைத்தாய்; அந்த அன்பின் காரணமாக உன் தாமரைப் பாதங்களை காலம் காலமாகப் போற்றி வணங்கும் பணியை அளித்தாய்; அந்தப் பணியின் பயனாக இந்தப் பிறவியெனும் மாயத்தை உடைத்தெறிந்த (மாயையிலிருந்எது ன்னை விடுவித்த) உன் கருணையை எப்படி புகழ்ந்து பாடுவேன்? (அளவிட முடியாதது இல்லையா தாயின் கருணை, 
அபிராமி சரணம் சரணம்!!
                     

                                                                பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்


                                                                                  

                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 
                                                                                                   
                                             https://youtu.be/jm00EhgYJ78                                                                                                 
                                                                        அன்பர்கள் இசைக்கிறார்கள் 


                                                                                                                                                                                    
                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE   


                                        https://youtu.be/QKO3R8jqAVE



                                              அபிராமி சரணம் சரணம்!!
                                                        முருகா சரணம்