Monday, 1 January 2018

அபிராமி அந்தாதி 27



                                                                                 அபிராமி அந்தாதி  27

                                                                                                   

உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை,
பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை
, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,-
சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே :
அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 
உடைத்தனை வஞ்சப் பிறவியை,
உடைத்தனை வஞ்சப்பிறவியை - என்னை வஞ்சிக்கும் ஆறுவித எதிரிகளான ஆசை, சினம், மயக்கம், பேராசை, செருக்கு, வெறுப்பு ஆகியவற்றை அழித்து அவற்றால் தோன்றிய பிறவிப் பிணிப்பை உடைத்தாய். அன்னை என்னவெல்லாம் செய்கிறாள்? சங்கிலித் தொடராய் வரும் இந்தப் பிறவித் தொடரினை உடைத்து எறிகிறாள். பிறவி எடுப்பதே தன்னை அறிந்து, தான், இந்த உடல் அல்ல, ஆன்மாவே என்று உணர்ந்து, அவள் அடி சேர்வதர்காகத்தான். ஆனாலும், இந்தப் பிறவி, நம்மை வஞ்சித்து விடுகிறது. நாம், நம்மை உண்ர முடியாதபடி செய்து விடுகிறது. அப்படிப்பட்ட வஞ்சப் பிறவியை, அவள் உடைத்து எறிகிறாள்.
பிறப்பு ஒரு வஞ்சனை என்பது அபிராமிப் பட்டரின் கருத்து.. எனவேதான் பெரும் மகான்கள் எல்லோரும் மீண்டும் பிறவியே வேண்டாம் என்றுரைத்தனர்.. பிறந்த பின்னர் உலகில் பல்வேறு கட்டுக்களால் நாம் கட்டப்பட்டு வஞ்சனைக்குள்ளாகிறோம். ஆசை, ஆணவம், சினம், மாயை இவற்றால் கட்டுண்டு நம் பிறவிப் பயனை மறந்து போகிறோம்... ஆனால் என் அபிராமி அன்னையே.. நீ இவ்வஞ்சனையை உடைத்து என்னைக் காத்தாய்னு வியக்கிறார் பட்டர்.
நாம் எடுக்கும் பிறவி ஒன்றா, இரண்டா? எண்ணிக் கணக்கிட்டுச் சொல்ல முடியாதது. " என் பிறவி எண்ணத் தொலையாதே" என்று அலுத்துக் கொண்டார் காளமேகப் புலவர். 

" எழுகடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி" என்று ஏழுகடல் மணல்களைக் காட்டிலும் என் பிறவி அதிகம் என்று கண்டு, கணக்கிட்டுக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.


 இதுவரை எடுத்த பிறவிகள் எண்ணத் தொலையாதவை; இனி எத்தனை பிறவிகள் எடுக்கப் போகிறோம் என்பதும் தெரியாதவை. இந்தப் பிறவி எடுக்கும் தொடரினை உடைத்து எறிய யாரால் இயலும்? எவ்வாறு இயலும்? அது இயல நாம் என்ன செய்ய வேண்டும்?
அபிராமியால்தான் அது முடியும். அது முடிந்திட நம்முடைய நாவில் தங்கிய புன்மொழிகளாலேனும், அன்னையின் மணம் வீசும் இணை அடிகளைப் புகழ வேண்டும்னு சொல்லித்தறார்.
வஞ்சப்பிறவி என்று சொல்லுவது சாலப் பொருந்தும். தாயுமானவரும், ' இறப்பும் பிறப்பும் பொருந்த என்கெவ்வண்ணம் வந்ததென்றெண்ணியான் பார்க்கில் மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயாமனத்தால் வளர்ந்தது தோழி ' - என்பர். ( அதாவது வஞ்சம் என்பதற்கு மாயை என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்துலையும் அன்னையை இப்படித்தான் வர்ணனை பண்ணியிருக்கு.
880. ஸம்ஸாரபங்க நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதா : -
ஸம்ஸார சகதியில் ( சேற்றில்) முழுகியவர்களை தூக்கி வெளியே எடுப்பதில் திறமைசாலி. ஒரு முறையாவது சரணமடையும் எண்ணத்துடன் அம்பாளை நினைப்பவர்கள் முடிவில்லாத ஸம்ஸார ஸாகரத்தில் விழுவதில்லை.
பகவத் கீதை ( 12.7 ) - " தோஷமஹம் ஸமுத்தர்த்தா " இதே கருத்துடையதாய் உள்ளது.
842. பவரோகக்னீ - ஸம்ஸாரம் என்ற நோயை அகற்றுபவள்.
175. பவநாசினீ - ஸம்ஸார பந்தத்தை அழிப்பவள்.
742. பவதாவோஸுதா வ்ருஷ்டி -
ஸம்ஸாரமாகிய காட்டுத் ' தீ ' க்கு அம்ருத வர்ஷமாக இருப்பவள்.
பவ - ஸம்ஸாரம்.
தாவ - காட்டுத் தீ.
இதை அணைப்பதற்குப் பொழியும் அம்ருதமயமான மழை.
" உள்ளம் உருகும் அன்பு படைத்தனை"
உன்னையே எண்ணி உருகிக் கொண்டிருக்கும் அன்பு உள்ளத்தை என்னுள் படைத்தாய்... அன்னையை எண்ணி உருகிக் கொண்டிருக்கும் உள்ளம் அன்பு செய்ய மறுக்குமோ?
பின்னர் ஏன் அபிராமிப் பட்டர் இங்க இப்படி சொல்றார்?
இறைவனை வணங்குதலும், அவனுக்குத் தொண்டு செய்தலும், அவன் ஆலயத்திருப்பணிகளை மேற்கொள்வது மட்டுமே இறைப்பணி என்றாகி விடுமா? உள்ளத்து அன்பு வேண்டாமா? யார் மீது அன்பு வேண்டும்? எல்லார் மீதும் வேண்டும்... அன்னையைத் தொழுவோர், அன்னையை மறுப்போர் என்று அனைவர்பாலும் அன்பு செலுத்தும் உள்ளம் வேண்டும்.
அன்னையை உண்மையாக எண்ணி உருகும் உள்ளத்தில் மட்டுமே இத்தன்மை கொண்ட அன்பு பெருகி வரும்.. அன்னை மேல் அன்பு கொள்ளும் உள்ளம் எல்லார் மீதும் அன்பு செலுத்தும். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றுரைத்த வள்ளலார் உள்ளத்திலுள்ள அன்பு கிடைக்கும்.
அவளை உணரும் விதத்தில், இந்த கல்லாய் இருக்கும் உள்ளம் உருகும் விதத்தில் அன்பு நமக்குள் ஊற்றெடுக்கும்படிச் செய்கிறாள்
" பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை "
நின் திருவடித் தாமரைகளுக்கே பணிசெய்யும் பணியை எனக்கு அளித்தாய்.. எத்தனை பாக்கியம்... ! அன்னையின் திருப்பாதங்களுக்குத் திருத்தொண்டு செய்யும் பணியை மட்டுமே தன் பணியாகக் கொண்டிருந்தார் அபிராமிப் பட்டர். வேறெந்த பணியும் இல்லை.. காலை கண் விழிக்கும் வேளை முதல் இரவு கண் அயரும் வேளை வரை அன்னையைக் காண்பது, அவள் நினைவுகளால் தியானத்தில் மூழ்கியிருப்பது, அவளை அலங்கரிப்பது, அவளைத் தொழுவது என்று என்றென்றும் அவளது திருவடிகளுக்கே திருத்தொண்டு புரிந்து கொண்டிருந்தார். அதனை சற்றே கர்வத்தோடு இவ்விடத்து உரைக்கிறார்.
"நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை"
என் மனம் பல்வேறு அழுக்குக்களால் நிரம்பி வழிந்தது.. கோபம், வஞ்சகம், பொறாமை, காமம், களவு, .... இன்னுமிது போன்ற பல்வேறு அழுக்குக்களால் நிரம்பி வழிந்த என் மனத்தை நீ உன் அருளென்னும் நீரால் துடைத்து அழித்தாய்.. அன்னையின் அருள் மனத்துள் வந்துவிட்டால், அவ்விடம் குடிகொண்ட கசடுகள் மாயமாகி விடும்.. இதுவே அன்னை தரும் பேரருள்..
மனதிலே இருக்கும் ஜன்ம ஜன்மமாக வந்த வாசனைகளை, அழுக்குகளை, தனது அருள் என்னும் ஆற்றுப்பெருக்கினால், துடைத்து எறிகிறாள். அப்படிப்பட்ட அருள் புனல் இல்லாது, இந்த வாசனைகளைக் களையத்தான் முடியுமா என்ன? அவளே மனது வைத்து, நமது அழுக்குகளை எல்லாம் துடைத்து விட்டால்தான் உண்டு. அவள் அருளாலே, அவள் அருள் இருந்தால் மட்டுமே, அவள் தாளிணைப் பெற முடிகிறது.

- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே :
பேரழியே.. உன் பேரருளை என்னவென்றுரைப்பேன்..அவள் பெருமையெல்லாம் சொல்லிவரும் அபிராமிப் பட்டருக்கு அன்னையின் அருளாட்சியால் அவளது பல்வேறு பெருமைகள் நினைவுக்கு வருகின்றன. இத்தனைதான் சொன்னோம்...இன்னும் சொல்லவேண்டியன பல உள்ளனவே... அன்னையே... இதனை நான் எங்ஙனம் உரைப்பேன்.! என்று வியந்து பாடுகிறார் பட்டர்.

பொழிப்புரை 

பேரழகியே! என் மனதிலிருந்த ஆசை, பற்று, ஆணவம் போன்ற மாசுகளை உன் அருள் வெள்ளத்தால் கழுவித் துடைத்தாய்; மாசு நீங்கிய என் உள்ளத்தில் உன்னையே எண்ணி உருகுமளவுக்கு அன்பைப் படைத்தாய்; அந்த அன்பின் காரணமாக உன் தாமரைப் பாதங்களை காலம் காலமாகப் போற்றி வணங்கும் பணியை அளித்தாய்; அந்தப் பணியின் பயனாக இந்தப் பிறவியெனும் மாயத்தை உடைத்தெறிந்த (மாயையிலிருந்எது ன்னை விடுவித்த) உன் கருணையை எப்படி புகழ்ந்து பாடுவேன்? (அளவிட முடியாதது இல்லையா தாயின் கருணை, 
அபிராமி சரணம் சரணம்!!
                     

                                                                பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்


                                                                                  

                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 
                                                                                                   
                                             https://youtu.be/jm00EhgYJ78                                                                                                 
                                                                        அன்பர்கள் இசைக்கிறார்கள் 


                                                                                                                                                                                    
                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE   


                                        https://youtu.be/QKO3R8jqAVE



                                              அபிராமி சரணம் சரணம்!!
                                                        முருகா சரணம் 

No comments:

Post a Comment