Sunday, 24 June 2018

அபிராமி அந்தாதி - 32


                                            அபிராமி அந்தாதி - 32



                                                                                    


ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் எனும்வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்தாண்டு கொண்டநேசத்தை என் சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே.

அன்பரின் விளக்க உரை 


அபிராமி அந்தாதி – 31, 32 மற்றும் 33 , மூன்று பாடல்களும் மரணம் சம்பத்தப்பட்ட பாடல். சாவைக் கண்டு பயப் படாதவர் யாரும் இல்லை. 

ஆனால், இறப்பிற்குப் பின் முக்தி அல்லது பிறவாநிலை கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய அபிலாஷையாக இருந்து வருகிறது. மரண பயத்தை வெல்ல வேண்டுமென்றால் நமக்கு அன்னையின் அருள் துணை புரியும்.


லலிதா சஹஸ்ரநாமம் அன்னையை "காலஹந்த்ரீ - காலனை, ம்ருத்யுவை அழிப்பவள்னு சொல்றது.

"ஸர்வம்ருத்யு நிவாரிணீ" - எல்லாவித மரணங்களையும் தடுப்பவள். தன் ஸ்வரூபத்தை உணரச்செய்து , அம்ருத நிலையை அடையச் செய்து, ம்ருத்யுக்களிலிருந்து நம்மை அம்பாள் காப்பாற்றுகிறாள்.
மேலும் அன்னையை "ம்ருத்யுதாரு குடாரிகா" - மரணம் என்னும் மரத்தை வெட்டும் கோடாலியாக இருப்பவள்னும் சொல்றது.
"ம்ருத்யுமதனி" - பக்தர்களுக்கு மரண பயத்தை இல்லாமல் செய்பவள்.

ஆசைக்கடலில் அகப்பட்டு - ஆசையெனும் பெருங்கடலில் அகப்பட்டு
ஆசையைக் கடலுக்கு ஒப்பிடுவானேன்? கரையில் நின்று கொண்டிருக்கிறோம். வெண்ணிற அலைகள் பட்டுத்துண்டுகள் போல் காலை வருடி விட வருகின்றன. 'வா' என்கிறது சிற்றலை; தூய நிறமுடைய அலையாயிற்றே, அழகாக இருக்கிறதே, உடலைத் தொட்டு கிளுகிளுப்பூட்டுகிறதே, மனதில் மகிழ்ச்சியூட்டுகிறதே... என்றெல்லாம் எண்ணிக் கால் வைக்கிறோம். 'இன்னும் கொஞ்சம் தூரம் வா, கால் என்ன உடலையும் வருடுகிறேன்' என்கிறது அலை (கடல்); குளிக்கிறோம். 'முத்து, மீன் என்று பலவற்றையும் கொள்ளலாம் வா' என்று இன்னும் இழுக்கிறது; இன்னும் போகிறோம். திடீரென்று ஆழத்தை உணர்ந்து, 'அடடா இந்த ஆழம் அப்போது வந்த அலையில் புரியவில்லையே!' என்று திரும்ப நினைக்கிறோம். தாமதமாகி விட்டது; கடலின் ஆழத்தில் தத்தளிக்கத் தொடங்கிவிட்டோம். ஆசை எனபதும் அப்படித்தான். ஆசையின் போர்வைக்குள் மறைந்திருப்பது அழகான விரல்கள் மட்டுமல்ல என்பதை உணரும் பொழுது நிறைய இழந்து விட்டதைப் புரிந்து கொள்கிறோம். கபடமில்லாமல் நம்மைக் கவரும் ஆசை மெள்ள நம்மைக் கயவனாக்க வல்லது என்பதை முதலில் அறிய இயலாததால், ஆசை கடலைப் போன்றது. ஆசைக் கடலில் மூழ்கினால் முத்தோ மீனோ எடுக்கப் போவதில்லை; இருப்பதையும் இழக்கப் போகிறோம் என்பதனால் - ஆசைக்கடலில் மூழ்குவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்பதால் - ஆசைக்குத் துன்பக்கடல் என்றும் பெயர். 

அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை- கொஞ்சமும் கருணையில்லாத கூற்றுவனின் (யமனின்) பாசக்கயிற்றால் கட்டப்பட்டு எல்லா துன்பங்களும் அடைய இருந்த என்னை


அந்தகன் என்றால் எமன். எமன் அருளற்றவனா? எமனுக்கு அருளும் கிடையாது, வஞ்சமும் கிடையாது என்பார்கள். சமநிலையுடைவன் என்று கடவுளரில் எமனுக்கு ஒரு பெயர் உண்டு. அதனால் எமனை நீதிக்குத் தலைவனென்றும் பாடியிருக்கிறார்கள். தவறு செய்கிறோம். பெற்றோர், உற்றார், ஆசிரியர் என்று யாராவது நம்மை தண்டிக்கிறார்கள்; அந்த நேரத்தில் தண்டனை கொடுப்பவர்களுக்குக் கருணையே இல்லையா என்று நினைக்கிறோம். பட்டர் இங்கே சிறுபிள்ளை; தாயை எண்ணிக் கலங்குகிறார். அதனால் தண்டனை கொடுக்கும் எமன் கருணையற்றவனாகத் தோன்றுகிறான். அரசனை இங்கே அருளற்றவன் என்று தாக்குவதாகவும் நினைக்கிறேன். "அம்மா அபிராமி, அப்படியென்ன தவறு செய்து விட்டேன்? திருடினேனா? கொலை செய்தேனா? அமாவாசையைப் பௌர்ணமியென்றது அப்படியென்ன குற்றமாகி விட்டது? இதற்கு தலையை வெட்டுவேன் என்று சொல்லும் அரசனுக்கு கருணையே இல்லையா? இப்படிப்பட்ட கருணையே இல்லாதவனுக்குப் பணிந்து வாழ்வதும் ஒரு வாழ்வா?" அப்பபடின்னு கேக்கறாார் பட்டர்.

நின் பாதம் என்னும் வாசக் கமலம் - உன் திருவடிகள் என்னும் மணம் மிகுந்த தாமரைமலர்களை

தலை மேல் வலிய வைத்து - 


ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன் என் தலை மேல் நீயே வலிய வந்து வைத்துஎன்னை உன் அடியவனாக ஏற்றுக் கொண்ட உன் அன்பினை எப்படி புகழ்வேன்?

அம்பிகை தானே விரும்பி வந்து தன் தாளுக்கும் அன்பர் தலைக்கும் இணைப்பு ஏற்படுத்தி உறவாக்கி கொண்டது. இது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று. எதற்காக அன்பர்களாகிய அடியார்கள் முன்னே பலகோடி தவங்கள் செய்தனரோ, அதனால் ஏற்பட்ட புண்ணியபலன் இது. அபிராமிபட்டர் ' ஆண்டுகொண்ட நேசத்தை என் சொல்லுவேன்! ' - என்கிறார்.
இந்த அற்புத அருளை' நேசம் ' என்று குறிக்கிறார்.நேசம் என்பது தானே விரும்பி ஏற்படுத்திக்கொண்ட உறவு அல்லவா! எல்லோருக்கும் பயனளிப்பது போன்ற அருள்.

ஈசர் பாகத்து நேரிழையே - சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் அழகிய அம்மையே!
சிவனின் ஒரு பாகமாக விளங்கும் அழகிய அபிராமிப் பெண்ணே!

 இந்தப் பிறவியின் பந்தபாசத் தொடர்பினாலுண்டான கடல் போல் அளவில்லாத ஆசைகளுக்கு அடிமையாகி நான் செய்த செயல்களின் விளைவினால், கருணையில்லாத காலனின் கைப்பிடியில் சிக்கித் தவிக்க இருந்த என்னை, தக்க நேரத்தில் உன் மணமிகு தாமரை மலர்பாதங்களை நீயாகவே என் தலைமீது இட்டு என்னை நல்வழிப்படுத்திய உன் கருணையை எப்படிப் புகழ்ந்து பாடுவேன்?

நாமும் இந்த ஆசைக்கடல்ல அகபட்டுக்கொள்ளாம , ஈசனின் வாமபாகத்தில் எழுந்தரிளியிருக்கும் நுட்பமான அணிகலன்களை அணிந்துள்ள அந்த அபிராமியின் பேரன்பு கிடைக்க அவளின் சிவந்த மலர்ப்பாதங்களை கெட்டியா பிடிச்சுகலாமா!!
அபிராமி சரணம் சரணம்!!

                                                                 பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்

                                                                                                  

                                                                                                   அன்பர்கள் 


                                                                                                                                                                            
                                                         முருகா சரணம்                                            

No comments:

Post a Comment