புணே தேஹு ரோடு முருகன்
பழைய அடியவர் தின வழிபாடு நிறைவு
பெருமானின் கட்டளைப்படி டிசெம்பர் 25ம் நாள் நடைபெறும் வழிபாட்டை
"பழைய அடியவர் தினம் " என்று கொண்டாடி அடியவர்களை நினைவில் கொண்டு ,போற்றி பொன்னான புனித தினமாக நிலை நிறுத்தியுள்ளார்கள்.அது மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் கடைபிடிக்க வேண்டும் என்ற மரபையும் வலியுறுத்தியுள்ளார்.அவர்களின் நல்லெண்ணத்தையும்,உணர்வையும் நாம் போற்றி க்கடைபிடிக்க வேண்டியது எல்லா அன்பர்களின் கடமையாகும்.
அடியவர்கள்அதிலும்பழையஅடியவர்கள்ஆழ்வார்கள்,நாயன்மார்கள்,அருணகிரியார்,வள்ளிமலை ஸ்வாமிகள் பாம்பன் ஸ்வாமிகள்,நம் குருஜி போன்றவர்கள்தான்.நாம் அறிந்தது சிலர் .அறியாதது பலர்.
அருணகிரியார் ஒரு பாடலில் எப்படி போற்றுகிறார்? பெருமானை" நீ மட்டும் காட்சி அளித்தால் போதாது.பழைய அடியவர்களுடன் சேர்ந்து காட்சி தர வேண்டுகிறார்.
பாடல்
பழய அடியவ ருடனிமை யவர்கண
மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும்
பாடல்
பழய அடியவ ருடனிமை யவர்கண
மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும்
பொருள்
"பழமையான அடியார்களுடன்,தேவர் கூட்டம் இருபுறமும்மிகுந்த தமிழ்ப்
பாடல்களையும்வேதகீதங்களையும்பாடிவணங்க,முன்னொருமுறைதிருவண்ணாமலையில் என்முன் வந்ததுபோலஇன்னொரு முறை வந்தருளல் வேண்டும்."
மற்றொரு பாடலில் "தூய்மை வாய்ந்தஅழகிய சுத்தமான உன் அடியார்களின் திருவடி சேரும் பாக்கியத்தைப்பெற உனது திருவருளைத் தர வேண்டுகிறேன்.""
தூசின் பொற்சர மோடுகு லாயுல
கேழும் பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய்
பொருள்
"நல்ல ஆடைகளாலும், தங்கச்சங்கிலிகளாலும் அலங்கரித்து மகிழ்ந்து,ஏழு உலகங்களும்எனக்குப் பிற்பட்டதாக எண்ணி முந்தி ஓடிடும் மூடனாகிய நான்,தூய்மை வாய்ந்தஅழகிய சுத்தமான உன் அடியார்களின் திருவடி சேரும் பாக்கியத்தைப்பெற உனது திருவருளைத் தர வேண்டுகிறேன்."
நம் அமைப்பின் பெயரே "திருப்புகழ் அன்பர்கள் " உயிரோட்டமுள்ள வாழையடிவாழையாகவந்ததொருதிருக்கூட்டம்.எல்லோரும் அடியார்கள் ,தொண்டர்கள்.நம் அமைப்பை உருவாக்கியவர்கள் இறை தூதர்கள்.நம்மை சத்சங்கத்தில் ஈடு படுத்தியவர்கள்.இறை உணர்வை ஊட்டியவர்கள்.செம்மைப் படுத்தியவர்கள்.நம்மை எல்லா வகையிலும் உயர்நிலையில்நிறுத்தியவர்கள்.மரணபயத்தைஒழித்தவர்கள்.மரணமில்லா பெருவாழ்வு தத்துவத்தை உணர்வித்தவர்கள்.உடல் உபாதைகளால் மனம் தளராது இறைபணி ஆற்ற நம்மை இயக்கியவர்கள் .அவர்களை என்றென்றும் நினைவில் கொண்டும் போற்றியும் வணங்கியும் சரணடைவது நம் கடமை.
புணே வழிபாட்டில் அன்பர் ,ஆலய அறக்கட்டளையாளர் சுந்தரராஜன் கடந்த 11 ஆண்டுகளாக மும்பை அன்பர்கள் பல இன்னல்களுடன் வழிபாட்டில் கலந்து கொண்டு வருவதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிப்பிட்டார்.அது அவர்களுக்காக வேண்டும் பிரார்த்தனையாகவே கருதுகிறோம்..அன்பார் ஜவகர் ,இன்றும் நம்மை ஆட்டுவிக்கும் அமரர்களான அன்பர்களை நினைவு கூர்ந்தார்.
அவர்களில் மும்பை ராதாகிருஷ்ணன் அவர்கள் 2012ம் ஆண்டு வழிபாட்டில் தேஹுரோடு முருகன் மீது சூட்டியுள்ள பாமாலையை சமர்ப் பித்தத்தை யம் நினைவூட்டினார்.
அன்பர்களின் நினைவுக்காக .கவிதை நயத்தோடு காப்பு,குருவணக்கம்,நூல்,பலன் என்ற மரபோடு சம்பிரதாயமாக அமைந்துள்ள அந்த பாமாலையை அளிக்கிறோம்.
காப்பு
தாயாய் உருவெடுத்து தண்டமிழ்த் தேன் பாலூட்டி
சேயாய் எனை அணைத்து சீரிணக்கம் செய்வித்து
மாயாப் பிறவிதனை மாற்றழிக்க நெறிசெய்தென்
ஆயாகி நின்றானை ஐங்கரனை வாழ்த்துவனே // 1.
குருவணக்கம்
வால வயதினிலே நல்லதமிழ் பயிற்றுவித்து
சால சீர்செய்த சற்குருமார் பொற்பதமும்
சீல மிகு குருஜி இராகவனின் வழிநடத்தும்
பாலமணி ராஜி பதமும் பணிவேனே
நூல்
தலம் பலவும் சென்றுநான் சேவித்தேன் -ஆறுபடைத்
தலம் பலவும் கண்குளிரக் கண்டுகொண்டேன் என்றன்மனம்
பலம்பெறவே கைதொழுது நிற்கின்றேன் நற்றேவர்
நலம் பரவும் சந்நிதியே தேஹுரோடின் நாயகனே // 3.
பார் காக்கும் காவலனின் பன்னிருகைக் கோமகனின்
சீர்போற்றி நல்லடியார் பாடிமகிழ் வேளையிலே
கார்போல் கருணைமழை பொழிவித்து எங்கள் மனத்
தேர்மேல் வலம் வருவாய் தேஹுரோடின் நாயகனே // 4.
புவிநாடி வலம்வரு நல புள்ளிமயில் வாகனனைக்
கவிபாடிச் சிறு துதியால் வணங்குகிறேன் பார்புகழும்
தவஞானியார் பலரும் தொழுதேத்தும் பெருங்கோவே
சிவஞானம் தெளிவிப்பாய் தேஹுரோடின் நாயகனே // 5.
பூவினுளே சிறப்புளது புண்டரிகம் செம்மைதமிழ்ப்
பாவினுளே பொற்புளது அருணகிரி திருப்புகழே - என்றன்
நாவினுளே நின்றுளது நல்லடியார் பாதமலர்
தேவருளே தேவன் நீ தேஹுரோடின் நாயகனே // 6.
இருமலிலும் சருமலிலும் காய்ந்து எந்தன் உளம அலையும்
பொருமலையும் பெருமலையும் போக்கி அருள்புரிவாய் - வான்
தருமலையும் தனிமலையும் சேர்ந்தணைந்த இப்புவியில்
திருமலை போல் தொல்மலிசீர்த் தேஹுரோடின் நாயகனே // 7.
பலன்
அண்டமெலாம் தொழுதேத்தும் தேஹுரோடின் நாயகனைத்
தெண்டனிடு வோர்க்குச் சித்திக்கும் சிவபதமே
மண்டு துயரிலா வாழ்வும் மாண்பு திருசேர் வாழ்வும்
பெண்டுபிள்ளை யுடன்வாழ்வும் மகிழ்வோடு பெறுவாரே // 8.
ஆலய நிர்வாகிகளுக்கு நாம் வைக்கும் விண்ணப்பம்.
ஆலயத்தின் சரித்திரத்தில் இடம் பெற்ற அந்த பாமாலையை ஆலய கல்வெட்டில் பொறிக்க வேண்டும்.
அல்லது வண்ண மயத்த்தில் பெரிய படமாக ஆலய வளாகத்தில் அன்பர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
நிர்வாகிகள் செயலில் இறங்குவார்கள் என்று நம்புவோமாக.அதுதான் பழைய அடியவர் அமரர் ராதாகிருஷ்ணனுக்கு செலுத்தும் கௌரவ மாகும்.
நடந்த வழிபாட்டின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறார் ஜானகி ரமணன் மாமி
" தெகு ரோடு குன்றக் குமரன் கோயிலில் இன்று , மும்பை,புனே திருப்புகழ் அன்பர்கள் இணைந்து கொண்டாடிய , "பழைய அடியவர் தினம்" தந்ததோ புத்தம் புது உணர்வு. அருணகிரியாலிருந்து , குருஜி ராகவன், வரையிலான அடியவர் நினைவுகளை அள்ளிக் கொண்டு வந்து, பக்தியால் பன்னீர் தெளித்த தினம். அவர்கள் காட்டிய வழிகள் அல்லவா நம் விழிகளுக்குத் துணை ! அவர்கள் ஏற்றிய தீபங்கள் அல்லவா ஆன்மீகத் தேடலுக்குத் துணை! சந்தம் எனும் தேனூற்று .ராகம் எனும் தென்றல் . பாவம் (Bhavam) என்னும் கனிவு - எனத் திருப்புகழின் சாரம், பொங்கி வந்ததாலே, நேரம் ஓடியது தெரியவில்லை.. பாடியது மட்டும் தான் நெஞ்சை நிறைத்தது.வடிவழகனோ , தேவியர் இருவருடன் விழி நிறைத்து நின்றான். மொழி மறந்து நின்றோம். அடியார்கள் மூலமாய் அவன் அனுப்பி வைத்த அருள் கொடை அல்லவா இது! விடை பெற மனமின்றி வந்தோம். இனிய நாள் தந்த கந்தா சரணம். அனைவருக்கும் நன்றி . ஜானகி ரமணன்."
சில புகைப்பட தொகுப்புக்கள்
கந்தன் கருணையினால் புனே இசைவழிபாட்டில் மனைவியுடன் பங்கு கொள்ளும் வாய்ப்புப் பெற்றேன் . செவிக்கும் மனதிற்கும் இனிய விருந்து. கந்தனின் அலங்காரம் கண் கொள்ளாக் காட்சி,
ReplyDelete