Thursday, 13 July 2017

அபிராமி அந்தாதி வரிசை ...9 அபிராமி அந்தாதி வரிசை ...9



                                                           அபிராமி  அந்தாதி வரிசை ...9


                                                                                                     
                                                                                                   

                                                      அம்மையே என் முன் காட்சி தருவாயாக 


கருத்தன, எந்தைதன் கண்ணன் வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்,
திருத்தன பாரமும், ஆரமும் ,செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தன மூரலும், நீயும் அம்மே! வந்து என் முன் நிற்கவே

அன்பரின் விளக்க உரை 

எந்தை தன் ............................என் தந்தையான சிவபெருமானின்

கருத்தன ................................ உள்ளத்தில் தங்கியிருப்பதும்

கண்ணண   .... ..................... அவர் கண் முன் தோன்றுவதும்

வண்ண கனக வெற்பில் ..அழகிய பொன் மலையாகிய மேருவைப் போல்

பெருத்தன .............................பருத்தனவாம் 

சிவனின் சங்கல்ப மாத்திரத்தில் தோன்றியவள் சக்தி (கருத்தில்)
சிவபெருமான் எல்லா உலகிலும் தலை சிறந்த யோகியாக விளங்குபவர். இவர் யாருக்காக யோகம் புரிய வேண்டும்? அவரோ அழிவற்றவர். உலகத்து உயிர்கள் எல்லாம் உய்ய வேண்டுமானால் அருள் மலர வேண்டும். அருளின் வடிவம் அன்னை. அவள் உடன் இல்லா விட்டால் ஏதும் செய்ய முடியாதவர். ஆகையால் தம் உள்ளத்திலே எப்போதும் இவர் தன் காதலியாகிய காமேசுவரியையே எண்ணி யோகம் செய்கிறார். என்ன அவர் கருணை உள்ளம்!
அம்பிகையின் நகில்கள் கருணையும், அருளும் சொரிபவை. அதனாலேயே சிவபெருமான் அம்பிகையின் தனபாரத்தில் கண்ணும் கருத்தும் உடையவள். இதனையே ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் " காமேஸ்வர ப்ரேமரத்ன மணி ப்ரதிபணஸ்தனீ " என்கிறது.
காமேஸ்வரருடைய அன்பெனும் ரத்ன மணிக்கு பதிலாக அல்லது விலையாகக் கொடுக்கிற ஸ்தனங்களை உடையவள். சிவபெருமான் அம்பிகையின் தனபாரத்தை முதலில் தன் கருத்திலே அன்புடன் நினைக்கிறார் . பின் தன் திருவிழிகளால் பார்க்கிறார் .

பாலழும் பிள்ளைக்கு ..பால் வேண்டி அழுத பிள்ளைக்கு 

நல்கின ..............................பாலை புகட்டிய 

பேரருள்கூர் .....................பேர் அருளை சொரியும் 

அழுகிற பிள்ளைக்கு வேண்டிய அளவில் ஞானப் பாலை நல்கும் பரிவும் பக்குவமும் அம்பிகைக்குத்தான் உண்டு. உபமன்யு என்ற குழந்தை பாலுக்கழுதபோது சிவபெருமான் ஒரு பாற்கடலையே கொடுத்துவிட்டார். “பாலுக் கழுத பிள்ளைக்குப் பாற்கடல் ஈந்த பிரான்” என்று இதில் பெருமை வேறு!! ஆனால்திருமுலைப்பாலில் திருஞானத்தையும் குழைத்துத் தருபவள் அம்பிகைதான்.
சிவபெருமானின் ஆறு பொறிகளால் உண்டான ஆறு குழந்தைகளுக்கும் அன்னை சரவணப் பொய்கையில் அன்றே ஞானப்பால் அளித்தாள். ஆறு குழந்தைகளும் பால் அருந்துகையில் சிதறிய துளிகளை சரவணப் பொய்கை மீன்கள் பருகினவாம். பராசர முனிவரின் சாபத்தால் மீன் உருக்கொண்ட முனி குமாரர்கள், அத் தெய்வப் பால் பருகியதால் சாபம் நீங்கினார்களாம் .

இதையேதான் ஆதி சங்கர பகவத்பாதாள் சௌந்தர்ய லஹரியில் ( 75) அன்னை அழும் பிள்ளைக்குப் பால் அளித்ததை " தயாவத்யா தத்தம் தவ ஸ்தன்யம் ஆஸ்வாத்ய த்ரவிடசிசு" என்கிறார். பால் அருந்திய "த்ரவிட சிசு " என்பது  திருஞான சம்பந்தரைக் குறிக்கும்.

 திருஞான சம்பந்தர் முருகப் பெருமானின் அவதாரம் என்பது நாம் அறிந்ததே.

அருணகிரியார்  இதையே 

திருஎழுகூற்றிருக்கையில் உணர்த்தியுள்ளார்.


ஒருநாள் உமை இரு முலை பால் அருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவனென
எழுதரும் அழகுடன் கழுமலத்து *  உதித்தனை

* கழுமலம் =சீர்காழி 

எனவே தான் 'பேர் அருள்கூர்' திருத்தனங்கள் அவைனு சொல்றார் பட்டர் இங்கே 

திரு ................................. அழகிய 

தன பாரமும் 

அபிராமி அந்தாதியில் அம்பிகையின் திருமுலைகள் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடங்களில் தென்படுகின்றன. அவை பிரபஞ்சத் தாய்மையின் பெருஞ்சின்னங்கள். பரஞானம் அபரஞானம் ஆகியவற்றின் அடையாளங்கள். அம்பிகையின் அளப்பரிய கருணைப் பெருக்கத்தின் குறியீடுகள். அதன் பேரருட்தன்மையைத் தாங்கும் திறன் யாருக்கும் இல்லாததால் அவள் உண்ணாமுலை யம்மை என்று கூறப்படுகிறாள்.
அன்னையின் திருமுலைப்பாலை அவளே குழைத்து ஊட்டி ஞானக்குழந்தைகளை உய்விக்கிறாள். அன்னையின் திருமுலைகள் கருத்திருக்கின்றன. சிவபெருமானின் திருவிழிகளை ஒத்திருக்கின்றன. இங்கொரு கேள்வி எழலாம். சிவபெருமானுக்கு மூன்று திரு விழிகளாயிற்றே! அதிலும் ஒரு பொருத்தம் இருக்கத் தான் செய்கிறது.
மதுரையில், பாண்டியனின் திருமகளாய் தடாதகைப் பிராட்டி என்னும் திருநாமத்துடன் அம்பிகை தோன்றியபோது அவளுக்கு மூன்று திருமுலைகள். சோமசுந்தரக் கடவுளை நேருக்கு நேராக பார்த்ததில் மூன்றாம் திருமுலை மறைந்தது.

ஆரமும் செங்கை சிலையும் அம்பும் ......மார்பில் துலங்கும் முத்துமாலையும்சிவந்த கைகளில் (தாங்கும்)கரும்பு வில்லும் புஷ்ப பாணங்களும்


முறுத்தலும்     பற்கள் முருந்தைப் போல( மயில் இறகின்  அடிக்குருத்தைப் போல் )

மூரலும் ........ புன்  சிரிப்பும் கூடியவளாய் 

இந்த புன்முறுவலுக்கு நூறு பாடல்கள் அளித்துள்ளார் மூக கவி 

அவ்வாறு கடைசிவரை புன்முறுவல் தருவாள் என்பதை 

'வெண்ணகையும், உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே' ( பாடல் 100) என்றல்லவா ஓதி உணர்த்தி உள்ளார்.

அம்மே வந்து என் முன் நிற்கவே 

பாசம் ,அங்குசம், கரும்புவில், ஐங்கணை கொண்ட அம்பிகையை எண்ணிப் பலநாள் வழிபட்டால், அவள் 'முருத்தன மூரல்' காட்டுவாளாம்,  .
அம்மே! என்று அம்பிகையை அழைத்தார் அல்லவா! 'அம்மே' என்று அழும் எந்தப் பிள்ளைக்கும் பால் தருபவள். நம் அழைப்புக்காக அவள் காத்திருக்கிறாள்.
 சதாசர்வ காலமும் தங்கள் இஷ்ட தெய்வத்தின் தியானத்திலேயே இருப்பவர்கள் அந்த அபூர்வ தரிசனத்திற்காக எப்போது தயாராகத்தான் காத்திருப்பார்கள்.
“நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் ஏந்த நேரத்திலும்
கோலக் குறத்தியுடன் வருவான்”
என்பார் அருணகிரிநாதர். 

அபிராமி சரணம்! அபிராமி சரணம்!

சொல் விளக்கம் 

வெற்பு        =மலை 
முறுத்தன =மயில் இறகின் அடிப் பகுதி 
மூரல்         =பல் ,புன்னகை 
சிலை         =வில் 


                                                                        பாடல் இசை வ
டிவில் 
                                                                       குருஜி கற்பிக்கிறார் 

                                                                                                           

                                                               Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                                 https://youtu.be/_6UYyEmVVX



                                                                          அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                                                       


                                                           Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                                   https://youtu.be/gwjMiNiiqs0




                                                               அன்னை   அபிராமியே சரணம் 


                                                                                    முருகா சரணம்                                                                                                     

No comments:

Post a Comment