பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார். பாப்பன் ஸ்வாமிகள். இதைப்பாடி பயனடைந்தவர் பலர் உள்ளனர். முருகப் பெருமானுக்கும் இந்தப் பாடல்கள் மேல் அளவு கடந்த ஆசை உண்டு. எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் அநுமன் இருப்பான் என எவ்வாறு ஸ்ரீராமர் சொன்னாரோ அப்படியே முருகனும், இந்தப் பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களில் மயங்கி, “இந்தப் பாடல்கள் எங்கெல்லாம் பாடப் படுகிறதோ அங்கெல்லாம் நான் எழுந்தருளுவேன்.” என்று கூறியதாகக் குறிப்புகள் சொல்லுகின்றன என்பர் முருகனிடம் பற்றுள்ள ஆன்றோர் பலரும். என்றாலும் இது வெளித் தெரியும்படி நடந்த ஒரு நிகழ்வும் உண்டு.
திருச்செந்தூரில் ஆலய அர்ச்சகர் அநந்த சுப்பையருக்கு இந்தப் பரிபூர்ண பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ராகமும், தாளமும் இவரை மயக்கி இருந்தது. இதைப் பாராயணம் செய்த வண்ணமே இருப்பார். அவருடைய நண்பரான சுப்ரமண்ய ஐயர் என்பவரும், இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அவரும் இந்தப் பாராயணத்தில் கலந்து கொண்டார். மண்டபம் ஒன்றில் அமர்ந்து இருவரும் விடிய விடிய இந்தப் பாடல்களை ராகத்துடன் பாடி வந்தார்கள். தினமும் இது நடந்து வந்தது. ஒருநாள் இந்த மண்டபம் வழியே சென்ற முத்தம்மை என்னும் 80 வயதான பெண்மணி பாடல்களால் கவரப்பட்டு மண்டப்த்தினுள்ளே நுழைந்து இருவரும் இசையுடனும்,ஒருமித்த சிந்தனையுடனும் பாடுவதைக் கண்டு மனம் பறி கொடுத்தார். தினமும் அவரும் வந்து பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்?பாடல் புனைந்தவருக்கோ, அல்லது பாடிப் பாடி உருகினவர்களுக்கோ காக்ஷி கொடுக்காமல் முத்தம்மைக்குக்காக்ஷி கொடுக்க எண்ணி இருக்கிறான் முருகன். அவன் திருவிளையாடலின் காரணமும், காரியமும் யார் அறிய முடியும்? ஒருநால் அது 1918-ம் ஆண்டு சித்திரை மாதம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி. வழக்கம்போல் பாராயணம் நடக்க முத்தம்மை கேட்டுக் கொண்டிருந்தார். மண்டபத்துக்குள் தன்னைத் தவிர இன்னொரு இளைஞனும் நுழைவதை முத்தம்மை கண்டார். நேரில் வராமல் யாரும் அறியா வண்ணம், தூணின் மறைவில் நின்று பாடலாய் ரசித்தான். அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார் முத்தம்மையார். யாராய் இருக்கும்? குழம்பிப் போனார். அவனை விசாரிக்கலாமா? அவனருகே சென்றால்! ஆஹா, அவனைக் காணோமே! இப்போது இங்கே இருந்தானே! எங்கே போனானோ? பாராயணம் முடிந்ததும், அவர்கள் இருவரிடமும் இது குறித்துச் சொன்னார் முத்தம்மை.
மறுநாளும் பாராயணம் தொடந்தது. விடிய விடிய நடந்த அந்தப் பாராயணத்தின் போது அதிகாலை சுமார் நாலு மணிக்கு முதல்நாள் வந்த அதே இளைஞன் மண்டபத்தினுள் வர,இப்போது இவனை விடக் கூடாது என முத்தம்மை அவனருகே சென்று, “நீ யாரப்பா?”என்று கேட்டார்.அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தீரென்றால் நான் இருக்கும் இடக் காட்டுவேன்.” என்றான். முத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்ல, வீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கொண்டு கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்க, முத்தம்மை தொடரக் கோயில் வந்தது. இளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “ அந்த அந்தணர்கள் இருவரும் இசைத்துக் கொண்டிருந்த பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தது. மகிழ்வைத் தந்தது. ஆனால், இன்னும் இசை சேர்க்கப் பாடவேண்டும் என அவர்களிடம் சொல்லு.இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோ, அங்கெல்லாம் நான் வருவேன். என் இருப்பிடம் இந்த திருக்கோயில்தான்,” என்று சொல்லியவண்ணம் இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தம்மை விதிர்விதிர்த்துப் போனார். தன்னுடன் பேசியது சாக்ஷாத் அந்த முருகப் பெருமானே அல்லவா? ஆஹா, என்ன தவம் செய்தேன்!” என்று மனம் உருகிப் போனார்.
Rajans
No comments:
Post a Comment