Tuesday, 4 June 2013

சேய்த் தொண்டர்: பாம்பன் சுவாமிகள்

ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிறு அன்று மாகான் ஒடுக்கத்தூர் மடத்தில் இசை வழிபாடு ஏற்பாடு செய்தால் '12 மணிக்குள் முடித்துக் கொள்ளுங்கள். பாம்பன் சுவாமிகள் குழு வரவிருக்கிறது' எனச் சொல்லக் கேட்டிருக்கோம். 'பாம்பன் ஸ்வாமிகள்' - அவர் யார்? பெரும் பாலருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் வலயப்பட்டி கிருஷ்ணன்  எழுதியிருப்பதைப் படிக்கலாமா?

Rajans

முருகனின் தொண்டர்கள்! - 29
சேய்த் தொண்டர்: பாம்பன் சுவாமிகள்
மயூரப்ரியா

'நான் நாளைக்குப் பழநி மலைக்குச் செல்லப்போகிறேன்'' என்றார் அப்பாவு. அதைக் கேட்ட அங்கமுத்துப்பிள்ளை, ''எப்போது திரும்பி வருவீர்கள்?'' என்றார்.
''எப்போது வருவேன் என்றெல்லாம் சொல்ல முடியாது'' என்றார் அப்பாவு.
இப்படிச் சொன்ன அப்பாவு, வீட்டுக்குத் திரும்பி வராமலேயே சந்நியாசியாகப் போய்விடுவாரோ என்ற அச்சத்தில், ''இது குமரக் கடவுளின் கட்டளையோ?'' என்று வினவினார் பிள்ளையவர்கள்.
பழநிக்குச் செல்லவேண்டும் என்ற உந்துதலும் ஆர்வமும் அதிகரிக்க, ''ஆம்'' என்றார் அப்பாவு.
அப்பாவு இப்படிச் சொன்னது, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளான கந்தவேளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. 'தான் உத்தரவு ஏதும் கொடுக்காதபோது, தன்னுடைய உத்தரவு என்று அவர் (அப்பாவு) எப்படிப் பொய் சொல்லலாம்? இவர் போன்ற உத்தமர்களிடம் இந்தப் பொய்த்தனம் சிறிதும் வரக்கூடாது. இதனை உடனே களைய வேண்டும்’ எனத் திருவுள்ளம் கொண்ட ஆறுமுகப் பரம்பொருள், அப்பாவுவின் கண்களுக்குப் புலப்படும்படியாக காட்சி தந்தார். தமது வலது கை ஆள்காட்டி விரலை நிமிர்த்து அசைத்து, பற்களைக் கடித்து, கண்களில் கோபப் பார்வையை வீசினார்.
''என் கட்டளை என்று ஏன் பொய் கூறினாய்?' என்று கந்தப் பரம்பொருள் கேள்வி எழுப்ப... நடுநடுங்கிப் போனார் அப்பாவு. ''எம்பெருமானே! என்னை மன்னித்துவிடுங்கள். நிலம் நீச்சு, பொன் பொருள் வேண்டி நான் பொய் கூறவில்லை. ஆன்ம லாபத்துக்காகக் கேட்டேன். பொறுத்தருள்க!'' என்று மனத்தினாலே பதிலுரைத்தார்.
''அது என்னால் முடியாதா? அந்த ஆன்ம லாபம் உனக்கு எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போது தவறாமல் நானே கொடுப்பேன். இனி, நான் கூறும்வரை நீ பழநி மலைக்கு வரக்கூடாது. வரமாட்டேன் என்று சொல்!'' என்று அதட்டினார் கந்தப் பெருமான்.
''அப்படியே செய்கிறேன்'' என்று அப்பாவு கரம் கூப்பிப் பதிலுரைத்தார். அதோடு, முருகனின் திருக்காட்சி மறைந்தது. (ஆனால், அப்பாவுவின் இறுதிக் காலம் வரை பழநிக்கு வரச் சொல்லி கந்தவேளின் உத்தரவு கிடைக்கவில்லை. அதனால் அவருக்கும் பழநிக்குச் செல்லும் பாக்கியம் கிட்டவில்லை).
இப்படி, கந்தனே கோபம் கொண்டு அதட்டி, ஆட்கொண்ட அடியார் யார் தெரியுமா?
அவர்தான் அத்தியாச்சிரம சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். நாம் எல்லோரும் 'பாம்பன் சுவாமிகள்’ என்று அழைக்கிறோமே, அவரேதான்!
ராமேஸ்வரத்துக்கு தென்மேற்கில், பாம்பன் என்னும் சிற்றூரில் உள்ள சிவாலயத்தில் பணிசெய்தவர் சாத்தப்பா பிள்ளை. இவரது மனைவி செங்கமலத்து அம்மாள். இந்தத் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் பாம்பன் சுவாமிகள். குழந்தைக்குப் பெற்றோர் சூட்டிய பெயரே அப்பாவு.
இளமையில் முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் கல்வி பயின்ற அப்பாவுக்கு அவ்வப்போது தெய்விகக் காட்சிகள் தெரிவதுண்டு. ஒருநாள், தன் நண்பர் களுடன் குந்துகால் என்ற இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த ஜோதிடர் ஒருவர் அப்பாவுவின் கைரேகைகளை ஆராய்ந்து பார்த்தார். ''குழந்தாய்! எதிர்காலத்தில்  நீ பெரிய ஞானியாகவும், வாக்கு வன்மை உடையவனாகவும் பிரகாசிப்பாய்'' என்று ஆசி கூறினார். அதன்பிறகு, அப்பாவுவே அதை மறந்து போனார்.
அவருக்கு வயது 13 வயது இருக்கும் போது, அந்தப் பகுதியில் உள்ள நாகநாதர் கோயில் திருவிழாவுக்குச் சென்றிருந்தார். அங்கே கிடைத்த 'கந்த சஷ்டி கவசம்’ நூலைத் தொடர்ந்து நாள்தோறும் பாராயணம் செய்து வந்தார். அதன் தொடர்ச்சியாக, சண்முகப் பெருமானைத் தாமும் செந்தமிழ்ப் பாடல்களால் பாடித் துதிக்க வேண்டும் என்கிற உந்துதல் அவருக்கு உண்டாயிற்று.அப்படி இருக்கையில், ஒருநாள் விடியற்காலையில் அவரது உதடுகள் 'கங்கையைச் சடையிற் பரித்து’ என்னும் மங்கல வரியை உச்சரிக்க, தொடர்ந்து ஒரு பாட லைப் பாடி முடித்தார்.
''பெருமானே! இந்தப் பாடலை ஏற்றருள வேண்டும். நான் பாடும் ஒவ்வொரு பதிகத்தையும் அருணகிரிநாதரின் பெயரை வைத்தே முடிப்பேனாக. அவரது வாக்குத் திறம் எனக்கும் வருமாறு அருள வேண்டும்'' என்று கந்தவேளிடம் வேண்டினார்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் பாடும் வழக்கத்தை மேற்கொண் டார் அப்பாவு. ராமேஸ்வரம் கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்த சேதுமாதவ ஐயர் என்ற முருகனடியார் அப்பாவுவின் பாடல்களின் அருமை பெருமைகளைப் படித்து உணர்ந்தார். அதன் தொடர்ச்சியாக, அவருக்கு அக்னி தீர்த்தக் கரையில் விஜயதசமி அன்று ஆறெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அத்துடன், சம்ஸ்கிருத நூல்களையும் கற்கும்படி அறிவுறுத்தி னார். அதன்படி ஜப, தப அனுஷ்டானங்களைத் தொடர்ந்தார் அப்பாவு.
ஒருநாள், இவரது கனவில் சிவனடியார் ஒருவர் தோன்றினார். ஓரிடத்தில் வாழை இலை விரித்து, அதில் அன்னமும் பாலும் இட்டுப் பிசைந்து இவரை உண்ணும்படி கூறினார். கந்தவேளே சிவனடியாராக வந்து பாற் சோறு பிசைந்து உண்ணச் செய்த இந்த அருள் அனுபவத்தின் விளைவாக, அப்பாவுவின் கவிபாடும் ஆற்றல் பன்மடங்கு அதிகரித்தது. வேதம், ஆகமம், உபநிடதம், இதிகாசம், புராணம், நிகண்டு என்று அனைத்தையும் பயின்றதால், அவரது ஞான ஆற்றல் பெருகியது.
இந்நிலையில் பெற்றோரின் விருப்பப்படி, 1878-ல் காளிமுத்தம்மாள் எனும் நங்கையை மணந்தார் அப்பாவு. இந்தத் தம்பதிக்கு சிவஞானாம்பாள், முருகையன், குமரகுருதாசர் என மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
அப்பாவு வியாபாரப் பணிகளை கவனித்துக் வந்தாலும், அவர் மனம் என்னவோ முருக சிந்தனையிலும் ஞானத் தேடலிலுமே சென்றது. துறவு நோக்கமும் விரக்தி மனப்பான்மையும் மேலோங்கி இருந்த தால், பழநிக்குச் சென்று துறவு நிலை மேற்கொள்ள விரும்பினார். அப்போதுதான் பழநி முருகன் அவரை தடுத்தாட் கொண்டார். இனி, அவரை பாம்பன் சுவாமிகள் என்றே நாமும் அழைப்போம்.
ஒருநாள், தமது தென்னந்தோப்பு வழியாகப் பாம்பன் சுவாமிகள் சென்றபோது, முள் ஒன்று இவரது காலில் குத்தி ரத்தம் வழிந்தது. வலி தாங்க முடியாமல் கண்களில் நீர் கசிந்து வருந்தினார். ''இந்த  முள் குத்திய வலியையே தாங்க முடியவில்லை என்றால், உயிர் விடும்போது இந்த உடல் எத்தனை துன்பம் தருமோ பெருமானே!'' என்று கண்ணீர்விட்டார்.
பாம்பன் சுவாமிகள் தமது காலில் பாதக் குறடு (காலணி) இல்லாமல் சென்றதால்தான் முள் குத்தியது. அதனால் அவர் அடைந்த வேதனையை உணர்ந்த கந்தவேள், அன்றிரவு அந்தப் பகுதியைச் சேர்ந்த தச்சர் ஒருவரின் கனவில் தோன்றி, ''என் அன்பனான அப்பாவுக்குப் பாதக் குறடு செய்து கொடு'' என்று கட்டளையிட்டார். தச்சரும் அவ்வாறே பாதக் குறடு செய்து அளித்ததுடன், கந்தவேள் தனக்கு இட்ட உத்தரவையும் சொன்னார். அதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனார் பாம்பன் சுவாமிகள்.
ஒருமுறை, தமக்கு ஏற்பட்ட துன்பத்திலிருந்து விடுபட, 'சண்முக கவசம்’ என்னும் அற்புதமான ஸ்தோத்திர நூலைப் பாடியருளினார் பாம்பன் சுவாமிகள். உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18 ஆக 'அ’கரம் முதல் 'ன’கரம் இறுதியாக 30 பாடல்கள் அமைந்த இந்த அற்புதக் கவசத்தின் மகிமையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. 1891-ஆம் ஆண்டில் சுவாமிகள் பாடியதுதான் இந்த அற்புத ஸ்தோத்திரம். அதே ஆண்டில், திருவனந்தபுரம் நா.சுப்ரமண்ய பிள்ளை என்பவரின் வேண்டுகோளின்படி 'பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்’ என்னும் அமுதமயமான வண்ணப் பாமாலை யையும் கந்தப்பெருமானுக்குச் சூட்டினார் சுவாமிகள்.
இந்நிலையில் ஒருநாள், அந்தப் பகுதியில் உள்ள பிறப்பன் வலசை என்ற ஊரில், மயானத்தில் 35 நாட்கள் சதுரக் குழியில் இருந்தபடி தவம் செய்தார். அந்த தவத்தின்போது, 6-வது நாள் அவரது மனம் அடங்கியது. 7-வது நாள் இரு முனிவர்களும் (அகத்தியர் மற்றும் அருணகிரி நாதர்), ஓர் இளைஞரும் இவர் முன்னே தோன்றினர். ரகசிய மொழியில் இவருக்கு உபதேசம் செய்தார் இளைஞனாக வந்த முருகன். 35-வது நாள் இவர் தலைக்கு மேல் பேரொலி உண்டாயிற்று. ஓர் ஒளியும் பரவியது. உடனே, உச்சி மேல் கைகுவித்து அந்த இடத்தை மும்முறை வலம் வந்து வணங்கி எழுந்தார்.
இந்த நிஷ்டையில் இருந்தபோது கிடைத்த உபதேச நிதியே பின்னர் 'தகராலய ரகசியம்’ என்னும் நூலாக சுவாமிகளால் பாடப்பெற்றது (1894-ஆம் ஆண்டு நடந்த இந்த அற்புத நிகழ்வுக்குப் பிறகு, 1969-ல் சுவாமிகள் தவமிருந்த இந்த இடம் முருகனருளால் அடியார் களுக்குத் தெரியவந்து, நினைவுக் கோயில் கட்டும் பணி தொடங்கி, 1971-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது).
இதன் பிறகு ஸ்தல யாத்திரை மேற்கொண்டார் பாம்பன் சுவாமிகள். அவ்வாறு பல தலங்களைத் தரிசித்துப் பாடி வருகையில், காஞ்சிபுரத்தில் உள்ள பல ஆலயங்களை வழிபட்டார். ஓர் இளைஞர் இவரை நோக்கி, ''குமரக்கோட்டம் தரிசித்தீரா?'' என்று வினவினார். ''அது எங்கே உள்ள கோயில்?'' என்று சுவாமிகள் கேட்க... ''என் பின்னே வருக!'' என்று கூறி, அந்தக் கோயிலுக்கு அழைத்துச்சென்ற இளைஞர் திடீரென்று மறைந்தார். கந்தக் கடவுளே இளைஞராக வந்து தமக்கு வழிகாட்டினார் என்பதை அறிந்த சுவாமிகள், அந்தக் கோயிலையும் தரிசித்துப் பாடி மகிழந்தார்.
இவர் காசி யாத்திரை மேற்கொண்டபோது, வெள்ளை ஆடையுடன் சென்ற சுவாமிகளுக் குக் காசி குமரகுருபர சுவாமிகள் மடலாயத்தில் காவியுடை அளிக்கப்பெற்றது. கயா, ஹரித்வார், அயோத்தி, பிருந்தாவனம், மதுரா முதலிய பல தலங்களைத் தரிசித்தார். பிறகு, சென்னை திரும்பிய சுவாமிகள், கந்தபுராணத்தை 'ஸ்ரீமத் குமார சுவாமியம்’ என்னும் காவியமாகப் பாடி முடித்தார்.
1923-ஆம் ஆண்டு, ஒருநாள் சென்னை தம்பு செட்டித் தெருவில் சுவாமிகள் வரும்போது ஒரு குதிரை வண்டிச் சக்கரம் இவரது இடது கணுக்கால் மீது ஏறி, கால் எலும்பு முறிந்துவிட்டது. சென்னை பொது மருத்துவ மனையில் இவரைச் சேர்த்தார்கள். கால் எலும்பு இணைவது கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சுவாமிகளின் சீடரான சுப்ரமண்ய தாசர் என்பவர் அவரது கால் குணமாக வேண்டி சண்முக கவச பாராயணத்தை திடபக்தியுடன் செய்தார். அப்போது, சுவாமிகளின் முறிந்த கால் எலும்புகளை இரண்டு வேல் முனைகள் இணைந்து நிற்பதுபோலும், அடியிலே ஒருவேல் முனை தாங்கி நிற்பதுபோலும் தாசருக்கு அற்புதக் காட்சி கிடைத்தது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11-ஆம் நாள் இரவு சுவாமிகளின் படுக்கை அருகில் இரண்டு மயில்கள் நடனமாடுவதை சுவாமிகள் மனக்காட்சியில் கண்டார். கைகூப்பித் தொழுதபோது, அவரது படுக்கையில் ஒரு செந்நிறக் குழந்தை அவரது அருகில் கால் நீட்டிப் படுத்து மறைதலையும் கண்டார். கந்தனின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
இதன்பிறகு, மருத்துவர்கள் சுவாமிகளுக்குக் கால் முறிந்த இடத்தை எக்ஸ்-ரே படம் எடுத்தனர். என்ன ஆச்சரியம்! முறிந்த கால் பொருந்தியிருந்தது. அதைக் கண்டு வியந்த மருத்துவர்கள், சுவாமிகளை வணங்கினர்.
தாம் கண்ட மயில் வாகன அற்புதக் காட்சியை, 'அசோக சால வாசம்’ என்னும் பெயரில் எட்டு பதிகங்களாகப் பாடியுள்ளார் சுவாமிகள். இந்த அருட்காட்சியை நினைவுகூரும் வகையில் 'மயூரவாகன சேவனம்’ என்ற பெயரில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் விழா நடத்தினார். தற்போதும் அது நடைபெற்று வருகிறது.
பாம்பன் சுவாமிகள் பாடியுள்ள மொத்தப் பாடல்கள் 6,666. இவை 6 மண்டலங்களாக வகுக்கப்பெற்றுள்ளன. இவர் இயற்றியுள்ள உரைநடை நூல் 32. சுவாமிகள் தம் எழுத்துப் பணியால் சுயமாகச் சம்பாதித்துச் சேர்த்திருந்த தொகையைக் கொண்டு, இன்றைய சென்னை யில் உள்ள திருவான்மியூரில் ஓர் இடத்தை வாங்கச் செய்தார். சுக்கில வருடம் வைகாசி மாதம், வியாழக்கிழமை (30-5-1929) அமர பட்ச சஷ்டி திதி, அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் அவரது ஆன்மப் பேரொளி முருகன் திருவடியில் கலந்தது. திருவான்மியூரிலேயே (கலாக்ஷேத்ரா அருகில்) அவருக்குச் சமாதி எழுப்பப்பட்டது.
'முருகப்பெருமானை பாடிப் பரவுவார் யாவரும் மகாதேஜோ மண்டலத்தார்’ என்னும் குகநெறி ஒருமைப்பாட்டை உருவாக்கிய பாம்பன் சுவாமிகள், இன்றும் தம்மை நாடிவரும் அடியார்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

-நன்றி - சக்தி விகடன்

No comments:

Post a Comment