வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் தம் தமிழ்ப்புலமையால், சொற்பொழிவாற்றலால், எழுத்து வன்மையால், பக்தி நெறியால் புகழ் பெற்றவர். இறைவன் புகழைப் ‘பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே’ என்னும் திருமுறை மொழியை நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றி உறுதிப்படுத்தியவர் அவர்.
கந்தபுராணம், கந்தரலங்காரம், திருமுருகாற்றுப் படை, ஆகியவற்றின் விரிவுரைகளைத் தம் சொற்பொழிவுகளின் தொகுப்பாக நூல்களாக்கி வெளியிட்டுள்ளார். அவற்றுள் கந்தரலங்காரப் பாடல் ஒன்றின் விளக்கத்தைத் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நம் வாழ்க்கையில் நாம் பிறந்த நட்சத்திரம், நாம் பிறந்த கிழமை, நம் இருவினைகள், வினைத்தொகுப்பு, ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு இராசிகள், மரணம் ஆகியவை மொத்தம் அறுபத்தொன்றாகும். நட்சத்திரம் 27, வாரம் 7, வினை 2, வினைத்தொகுப்பு 3, கிரகங்கள் 9, இராசிகள் 12 மரணம் ஆகியவற்றின் கூட்டுத் தொகையே 61. நம் வாழ்வில் நன்மை, தீமைகளை நிர்ணயிக்கும் இவற்றைப் பற்றி அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் ஒரு பாடலில் கூறியுள்ளார். அந்தப்பாடல்
நாளென் செயும்வினை தானென்செயும் எனை நாடிவந்த
கோளென் செயும்கொடுங் கூற்றென் செயும்கும ரேசரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே!
என்பதாகும்.
இப்பாடலின் முதல் இரண்டடிகளில் நாள், வினை, கோள், கூற்று என்ற சொற்கள் மேலே காட்டிய அறுபத்தொன்றையும் குறிக்கின்றன.
நாளென் செயும் என்ற தொடருக்கு வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் விளக்கம் அளிக்கும்போது, “நாள் என்பது நாம் பிறந்த நாளைக் குறிக்கும். அஸ்வனி முதல் ரேவதி வரை உள்ள இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றில்தான் நாம் பிறந்திருப்போம். இந்த நட்சத்திரங்கள் நம் ஜன்ம நட்சத்திரங்களாகி, ஏற்றத் தாழ்வுகளை உருவாகுகின்றன. முருகப் பெருமானை ஒருமுறை அவர்தம் திருவடி முதல் திருமுடி வரை கண்ணாரக் கண்டு, வழிபட்டால் இந்த இருபத்தேழு நட்சத்திரங்களின் பாதிப்பும் நம்மைத் துன்புறுத்த மாட்டா. இந்தப் பாடலில் குமரேசர் இருதாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே! என்ற பகுதியில் இருதாள், இருசிலம்பு, இருசதங்கை, இருதண்டை, ஆறுமுகம், பன்னிரண்டுதோள்கள், ஒரு கடம்பமாலை ஆகியவற்றின் கூட்டுத்தொகை, இருபத்தேழாகிறது. இந்த இருபத்தேழையும் தரிசனம் செய்தால் நட்சத்திரங்களாகிய இருபத்தேழும் நம் ஜாதகப்படி தீமைதராமல், நன்மையே செய்யும் என்பது இந்தப் பாட்டின் “நாளென் செயும்” என்ற தொடருக்கு விளக்கமாகும்.
இதனைத் தம் சொற்பொழிவின் இடையே கி.வா.ஜ. அவர்கள் கூறி அவையோரின் கரவொலியையும் பாராட்டையும் பெறுவார். மற்ற பேச்சாளர்களும் இந்த விளக்கத்தை எடுத்துக் காட்டிப் பாராட்டுப் பெறுவது வழக்கம்.
கி.வா.ஜ அவர்கள் அப்பாடலில் நாளென் செயும் என்ற தொடருக்கு மட்டிலுமே விளக்கம் அளித்தார். அவர்களின் இலக்கிய நயம் உணரும் திறனை, அவர் வழியில் சிந்தித்து அவர்தம் ஆசியால் நானும் பெற்றேன். அப்பாடலில் உள்ள வினைதான் என் செயும் என்ற தொடருக்கும், அடுத்தடுத்த தொடர்களுக்கும் அடியேனால் இயன்ற விளக்கத்தை எழுதத்துணிந்தேன்.
‘நாளென் செயும்’ என்ற தொடரிலேயே நாம் பிறந்த வாரக்கிழமையாகிய ஞாயிறு முதலிய கிழமைகளும் புலனாகின்றன. ஞாயிறு முதல் சனிவரை உள்ள வார நாள்கள் ஏழு. இப்பாடலில் தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும் ஆகிய அவயவ அலங்காரங்களும் ஏழு. ஆகவே நாம் பிறந்த வாரக்கிழமைகளால் வரும் பாதிப்பை முருகப்பெருமான் திருமேனியில் காட்சியளிக்கும் தாள் முதல் கடம்பு ஈறாக உள்ள ஏழும் நீக்கி, நமக்கு நலம் தரும் என்ற புதிய விளக்கம் உருவாயிற்று.
அடுத்து ‘வினைதான் என் செயும்’ என்ற தொடர். நாம் செய்யும் செயல்கள் புண்ணியச் செயல், பாபச் செயல் என்ற இருவகையாகி நல்வினை, தீவினை எனப்படும். இவை இரண்டும் நம் முன்பிறவிகளில் செய்த வினைகளாகிய சஞ்சிதம்,கடந்த பிறவியில் செய்த வினையாகிய பிராரப்தம், இப்பிறவி வினைகளாகிய ஆகாமியம் என்ற மூன்று தொகுதிகளுள் அடங்கும். முருகப் பெருமானின் திருவடிகளில் அணியப்பெற்ற இரண்டு சிலம்பு, இரண்டு சதங்கை, இரண்டு தண்டை ஆகியவை மூன்று வகையில் விளங்குவதால் இருவினை, கர்மவினைகள் மூன்று என்ற வினைத் தொகுதிகளின் பாதிப்பு நமக்கு வாராமல் பாதுகாக்கும். ஆகவே முருகப் பெருமானின் திருவடிகளின் மூவகை அணிகலன்களையும் கண்ணாரக்கண்டு வணங்க வேண்டும்.
அடுத்து ‘நம்மை நாடிவந்த கோள் என்செயும்?’ என்ற தொடரில் ‘நாடிவந்த’ என்பது நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை ‘தினபுக்தி’ பலன்கள் என்ற வகையில் சூரியன் முதல் கேது வரை உள்ள நவகிரகங்களின் கிரகசாரம் நம்மை ஆண்டு தோறும் நாடிவந்து நிர்ணயிக்கும்.
முருகப்பெருமானின் திருப்பாதம் இரண்டு, திருமுகம் ஆறு, கடம்பமாலை ஒன்று ஆகிய ஒன்பதையும் கண்டு, வணங்கி தியானித்தால் கிரகசார பலன்கள் நன்மையாகவே அமையும் என்பதை ‘நாடிவந்த கோள் என்செயும்’ என்ற தொடரின் புதிய விளக்கமாகக் கொண்டு மகிழலாம். இதையே ‘ஆசறுநல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே’ என்றார் அப்பர்பெருமான்.
சூரியனின் போக்கில் சமஅளவில் பிரிக்கப்பட்ட பன்னிரண்டு இராசிகளின் போக்கும் வரவும் நம் இராசி பலனாக, சோதிடநூல்களில் குறிப்பிடப்படுகின்றன. முருகப்பெருமானின் பன்னிரண்டு திருக்கரங்களையும் இப்பாடல் ‘தோளும்’ என்ற சொல் குறிக்கிறது. இப்பன்னிரண்டு திருக்கரங்களையும் திருமேனியில் கண்குளிரக் கண்டு போற்றிப் பரவினால் பன்னிரண்டு இராசிகளின் பலன்களும் நன்மையாகவே விளங்கும்.
நிறைவாக இப்பாடலில் கொடுங்கூற்று என்செயும்? என்ற தொடர் அமைந்துள்ளது. நமக்கு வரும் அச்சங்களில் மரண பயமே மிகக்கொடியதாகும். ‘இன்று வருமோ, நாளைக்கே தான் வருமோ, என்று வருமோ அறியேனே’ என்று எப்போதும் நம்மை அஞ்சி நடுங்க வைப்பது மரணபயம்தான்.
இறைவன் திருவருளைப் பெற்றவர்கள் “யானேதும் பிறப்பஞ்சேன், இறப்பதனுக்கு என் கடவேன்?” என்று அஞ்சாமல் வாழ்வர். திருவருள் பெறாதவர் அடையும் மரணம், அடுத்த பிறவியை நோக்கி இடமாற்றம் பெறுவதற்குத்தான். ஆனால் முருகன் திருவருள் பெற்றவர்கள் நிரந்தரமாக இறைவன் திருவடிப் பேற்றைப் பெற்று அங்கே நிலைத்து நிற்பர்.
சிவபெருமான் யாரும் பொருட்படுத்தாத கொன்றைமலர் மாலையை அணிந்து கொண்டார். அம்மாலை அனைவராலும் வணங்கப்பெற்றது. அதுபோல முருகப்பெருமான் யாரும் அணிந்து மகிழாத எளிய கடம்ப மலரைத் தான் எடுத்து மாலையாக அணிந்து கொண்டான். எளிய குறவள்ளியை மணந்து கொண்டான். எளியோருக்கு உயர்வாழ்வுதரும் தெய்வம் ஒரே ஒரு கடம்ப மாலையை அணிந்து காட்சியளிப்பதை “உருளிணர்க்கடம்பின் ஒலிதாராயே” என்று சங்க இலக்கியம் போற்றுகிறது. முருகனுக்குக் கடம்பன் என்பதும் ஒரு பெயர். அந்தக் கடம்ப மாலையை ஒரே ஒரு முறை கண்டு வணங்கிப் பணிந்தால், ஒரு ஒரு முறை நமக்கு வரும் கூற்றுவனின் செயலாகிய மரணம் நமக்கு நிரந்தர விடுதலை தந்து, முருகன் திருவடிப் பேற்றை அடைவிக்கும். ஆகவே ‘கடம்பு எனக்கு முன்னே வந்து தோன்றிடின், கொடுங்கூற்றும் எனக்கு நிரந்தர விடுதலை தரும்’ என்ற விளக்கம் உதிக்கிறது.
இந்தப் பாடலால் நாள், வினை, கோள், கூற்று என்ற நான்கு வகைகளில் அறுபத்தொரு விதமாக நம்மைத் துன்புறுத்தும் அனைத்தும், முருகப் பெருமான் திருக்காட்சியை தீபாராதனையின் போது கண்டு, தனியே அமர்ந்து தியானிப்பவர் முன்நில்லாது நீங்கிவிடும். இந்த முழுமையான பொருளைக் கண்டு மகிழ நமக்குப் பாதை வகுத்த வாகீச கலாநிதியின் நினைவைப் போற்றுகிறேன்.
Anbargale,