சில வருடங்களுக்கு முன் 'அபிராமி பதிகம் எங்கள் பார்வையில்' என்ற நூல் வெளியிட்டிருந்தோம். அதில் நாம் கற்றிருக்கும் அபிராமி பதிகங்களுக்கு பத உரை தந்திருந்தோம். அதன் மின் வடிவத்தை எங்கள் blog ல் ஏற்றிருக்கிறோம். அன்பர்கள் படித்து இன்புறலாம். தற்சமயம் முதல் 13 பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது.மற்றவை கூடிய விரைவில் இடம் பெறும். Link http:// thiruppugazhamirutham. shutterfly.com/abiramipadigam
காப்பு செய்யுளின் பதவுரை
விநாயன் துணை
தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதன்நால்
வாய்ஐங் கரன்றாள் வழுத்துவாம் - நேயர்நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி
நண்ணும்பொற் பாதத்தில் நன்கு
நேயர் நிதம் - அன்பர்கள் தினந்தோறும்
எண்ணும் - நினைக்கும்
புகழ்க் கடவூர் - புகழ் பெற்ற திருக்கடவூரில்(எழுந்தருளிருக் கும்)
எங்கள் அபிராமவல்லி - எங்கள் அபிராமவல்லி(யை)
நண்ணும் - அணுகி
பொற்பாதத்தில் - பொன்போன்ற திருப்பாதத்தில்
நன்கு - நன்றாக
தூயதமிழ்ப் பாமாலை - புனிதமான செந்தமிழ் பாக்களால் தொடுக்கப்பட்ட மாலையை
சூட்டுவதற்கு - அணிவிப்பதற்கு
மும்மதன் - இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்று சக்திகளை உடைய
நால்வாய் - தொங்கும் வாயுடைய
ஐங்கரன் தாள் - ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற தொழில்களை புரியும் ஐந்து கரங்களை உடைய விநாயகப் பெருமானின் பாதக் கமலங்களை
வழுத்துவாம் – வணங்குவோம்
எந்த செயல் தொடங்குவதற்கு முன் கணபதியைத் தோத்திரம் செய்து வணங்குவது என்பது தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ஒரு மரபாகும். அந்த வகையில் தான் இயற்றப் போகும் இந்த பதிக ஆரம்பத்தில் விநாயகப்பெருமானை துதித்து தூய தமிழ்ப் பாமாலைஅணிவிப்பதற்கு வேண்டுகிறார். நாமும் அவருடன் வேண்டிக்கொள்கிறோம்.
திருக்டையூர்த் திருத்தலத்தில், பிள்ளையார் “கள்ள வினாயகர்”என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். அபிராமி பட்டர் இவ்விநாயகரையும் தன் பதிகத்தால் துதி செய்துள்ளார். “பங்கயத்தாளும்” என்ற சொற்றொடருடன் ஆரம்பிக்கும் இப்பதிகம் மிக்க இனிமையானதொன்றாகும். ஒவ்வொரு நான்காவது அடியும் “கடவூர் வாழும் கள்ள விநாயகனே” என்ற சொற்றொடருடன் முடிகின்றது. அதன் விளக்கம் பின்னொரு சமயம் தருவதற்கு அந்த கள்ள விநாயகன் அருள வேண்டும்.
சாந்தா
சுந்தர ராஜன்
No comments:
Post a Comment