Monday, 6 July 2015




                     திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 

                                                              (476 முதல் 503 வரை )

                                                                 கருவூர்  திருத்தலம் 


                                பசுபதிநாதர் திருக்கோயில் கருவூர் (கரூர்)

இக்கோயில் கரூர் நகரின் மத்தியில் உள்ளது. கோயமுத்தூர், ஈரோடு, திருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் ரயில் நிலையம் திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது


கி பி. 14ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர் இந்த பசுபதி நாதர் கோவிலில் உள்ள முருகனை பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 7 பாடல்கள் உள்ளன. நம் குருஜி ஐந்து பாடல்களை கையாண்டிருக்கிறார்.இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும், 12 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நினக கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின் பக்கம் உள்ளது 



பாடல் வரிசை எண் 12        புத்தக வரிசை எண் 216


ராகம் கீரவாணி                                                          தாளம்  ஆதி  2  களை


                                                   திருப்புகழ் பாடல் 



நித்தப் பிணிகொடு மேவிய காயமி
     தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
          நிற்பொற் ககனமொ டாமிவை பூதக ...... லவைமேவி


நிற்கப் படுமுல காளவு மாகரி
     டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
          நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு ...... மடவாண்மை


எத்தித் திரியுமி தேதுபொ யாதென
     வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
          டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி ...... லுழல்வேனை


எத்திற் கொடுநின தாரடி யாரொடு
     முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
          திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற ...... இனிதாள்வாய்


தத்தத் தனதன தானன தானன
     தித்தித் திமிதிமி தீதக தோதக
          டத்தக் குடகுகு தாகுட தீகுட ......


வெனபேரிச்சத்தத் தொலிதிகை தாவிட வானவர்
     திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட
          சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை ...... யெறிவோனே

வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
     சத்திக் கிடமருள் தாதகி வேணியர்
          வெற்புப் புரமது நீறெழ காணிய ...... ரருள்பாலா 

வெற்புத் தடமுலை யாள்வ
நாயகி
     சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள          வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய ...... பெருமாளே.ளி 

                                      சொல் விளக்கம் 

நித்த(ம்) பிணி கொடு மேவிய காயம் இது ...
நாள்தோறும்நோய்களுடன் கூடியது இவ்வுடலாகும்.

அப்புப் பிருதிவி வாயுவு(ம்) தேயுவு(ம்) நில் பொன் ககனம்ஒடு ஆம் இவை பூத கலவை மேவி நிற்கப்படும் ... 
இது நீர், மண்,காற்றுடன், நெருப்பும், உள்ளதான பொலிவுள்ள ஆகாயம் எனப்படும்ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டாகித் தோன்றி நிற்பதாகும்.

உலகு ஆளவும் மாகர் இடத்தைக் கொளவுமே நாடிடும்ஓடிடு(ம்) ..
உலகத்தை எல்லாம் ஆளவேண்டும், விண்ணவர் இருக்கும்இடத்தையும் கொள்ளவேண்டும் என்று ஆசை கொண்டு அதற்காகஎங்கும் ஓடி அலையும்
.
நெட்டுப் பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மைஎத்தித்
திரியும் ... 
செருக்குடன் அணி கலன்களையும் ஆடைகளையும்
அணிந்து நான் என்கின்ற முட்டாள்தனமான அகங்காரத்துடன்
ஏமாற்றித் திரியும்.

இது ஏது பொ(ய்)யாது என உற்றுத் தெளிவு உணராது மெய்ஞானமொடு இச்சைப் பட அறியாது பொய் மாயையில்உழல்வேனை ..
இது என்ன ஒருபோதும் பொய்யாகாமல்நிலைத்திருக்கும் என்று திடமாக நினைத்து, தெளிவான உண்மையைஉணராமல் மெய்ஞ்ஞானத்தை விரும்ப அறியாமல் பொய்யான உலகமாயைகளில் அலைச்சல் உறுகின்ற என்னை,

எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு உனதுஅருளால் உயர் ஞான அமுது இட்டுத் திருவடியாம் உயர்வாழ்வு உற இனிது ஆள்வாய் ... 
மாகவாவது ஆட்கொண்டு,உன் அடியார்களுடன் என்னைக் கொண்டு சேர்ப்பித்து, உன்திருவருளால் சிறந்த ஞான அமுதத்தைத் தந்து திருவடியாகிய சிறந்தவாழ்வை நான் அடையும்படி இனிதே ஆண்டருள்வாயாக.

தத்தத் தனதன தானன தானன
     தித்தித் திமிதிமி தீதக தோதக
          டத்தக் குடகுகு தாகுட தீகுட ......
என பேரிசத்தத்து ஒலி திகை தாவிட ...
(இத் தாளத்தில்) ஒலிக்கும்
பேரிகையின் பேரொலி திசைகளைக் கடந்து தாவிச் செல்ல,

வானவர் திக்குக் கெட வரு(ம்) சூரர்கள் தூள்பட சர்ப்பச் சதமுடி நாணிட வேல் அதை எறிவோனே ...
தேவர்கள் வாழும்சைகள் கலங்கிக் கெட, வந்த அசுரர்கள் தூளாகிப் பொடிபட,
(ஆதிசேஷனாகிய) பாம்பின் நூறு பணா முடிகள் அச்சம் கொள்ள, உனது
வேலைச் செலுத்தியவனே,தி

வெற்றிப் பொடி அணி மேனியர் கோகுல சத்திக்கு இடம்அருள் தாதகி வேணியர் வெற்புப் புரம் அது நீறு எழ காணியர்அருள் பாலா ...
வெற்றியைத் தரும் திருநீற்றை அணிந்த திருமேனியர்,ஆயர்பாடியாகிய கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணனாகிய திருமாலுக்குதமது இடது பாகத்தைத் தந்தருளியவர் (சங்கர நாராயணர்), ஆத்திமாலைச் சடையை உடைய சிவபெருமான் அருளிய குழந்தையே,

வெற்புத் தட முலையாள் வ(ள்)ளி நாயகி சித்தத்து அமர்குமரா ...
மலை போன்ற பெரிய மார்கங்களை உடைய வள்ளி நாயகியின்உள்ளத்தில் வீற்றிருக்கும் குமரனே,

எமை யாள்கொளவெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய ...... பெருமாளே.ளி 

எம்மைப் போன்ற அடியார்களை ஆட்கொள்வதற்காக,வெற்றிப் புகழ் விளங்கும் கருவூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.
குருஜியுடன் இணைந்து  அன்பர்கள்  பாடியுள்ள  பாடல்




முருகா சரணம் 

Saturday, 4 July 2015



            திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 

                                                         (476 முதல் 503 வரை )

                                                  அத்திப்பட்டு திருத்தலம் 

 புதுக்கோட்டைக்கு அடுத்த கந்தர்வ கோட்டையிலிருந்து 7 மைலில்
அத்திப்பட்டு உள்ளது.

பாடல்  வரிசை எண் 11          புத்தக வரிசை எண் 203
ராகம் பூர்வி கல்யாணி  அங்க தாளம் தகிடதக  தகிடதக தகதிமி  தகிட தக 
                                                             9 1/2                   2 1/2           2 1/2            2               1 1/2    1

                                                          திருப்புகழ்  பாடல் 

கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
     கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட
          கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி ...... லிடைபோடாக்

கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு
     கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்
          கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர் ...... வழியேபோய்

மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
     மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற
          மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் ...... மலராலே

மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக
     மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி
          வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் ...... தருவாயே

பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்
     புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல்
          புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி ...... லுறமேவும்

புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி
     புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்
          பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில் ...... மருகோனே

அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட
     லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற
          அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு ...... மிளையோனே

அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகு
     மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்
          அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறை ...... பெருமாளே.
  
                                           சொல் விளக்கம் 

கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கிக் கிளைஞர் கதறிஅழ ... 

உடல் கருகித் தீய்ந்தது போல் ஆகி, அறிவும் நீங்கி, உயிர்பிரிந்தவுடன் சுற்றத்தார் உள்ளம் நைந்து கதறி அழ,


விரவு பறை முட்டக் கொட்டி இட கனக மணி சிவிகையில்அமர்த்திக் கட்டையினில் இடை போடா ...

(இழவு வீட்டுக்கு)வந்து சேர்ந்த பறைகள் யாவும் சப்திக்க, பொன்னும் மணியும் துலங்கும்பல்லக்கில் அமர்த்தி, விறகுக் கட்டைகளின் நடுவில் போடப்பட்டு
,

கர மலர் கொடு அரிசியினை இட்டுச் சித்ர மிகு கலையை உரி செய்து ...


உறவினர்களின் மலரன்ன கைகளால் வாய்க்குஅரிசியிடப்பட்டு, அழகுள்ள மேல்துணியும் விலக்கப்பட்டு,

மறைகள் பற்றப் பற்று கனல் கண கண என எரிய உடல் சுட்டு ...

உடலின் மறைவான இடங்களிலும் பிடிக்கின்ற நெருப்புபற்றிக்கொண்டு கண கண என்று எரிய, உடல் இவ்வாறு சுடப்பட்டு,


கக்ஷியவர் வழியே போய் மருவு புனல் முழுகி மனை புக்குத்துக்கம் அறு ..

பக்கத்தில் இருந்தவர்கள் தாம் வந்த வழியே திரும்பிப்போய் நன்றாக நீரில் குளித்து, வீட்டுக்குப் போய் துக்கம் நீங்கினர்.

மனிதர் தமை உறவு நிலை சுட்டுச் சுட்டி உற மகிழ்வு செய்துஅழுது பட வைத்து ...

மனிதர்களை இன்ன உறவு இவர் என்று உறவின்முறையைக் குறித்து அத்தகைய குறிப்பால் மகிழ்ச்சி பூணவும்,அழுதிடவும் (என்னை) வைத்து,


அத் துட்டன் மதன் மலராலே மயல் விளைய அரிவையர்கள்கைப்பட்டு எய்த்து மிக மனம் அழியும் அடிமையைநினைத்து ... 

அந்தத் துஷ்டனாகிய மன்மதனுடைய மலர் அம்பால், காமஉணர்ச்சி உண்டாக, பெண்கள் கையில் அகப்பட்டு இளைத்து, மிகவும்மனம் நொந்து அழிகின்ற அடிமையாகிய என்னை நீ நினைத்து,

சொர்க்க பதி வழியை இது வழி என உரைத்துப் பொன்கழல்கள் தருவாயே

உன் பாதங்களாகிய பொன் உலகுக்குப்போகும் வழியை இதுதான் வழி என்று சொல்லிக் காட்டி, உனது அழகியதிருவடியைத் தந்தருளுக.

பொருவு இல் மலை அரையன் அருள் பச்சைச் சித்ர மயில்புரம் எரிய இரணிய தனுக் கைப் பற்றி ...

நிகர் இல்லாத பர்வதஅரசன் (இமவான்) பெற்ற பச்சைநிற அழகு மயில், திரி புரம் எரி படபொன் வில்லைத் தன் கையில் பற்றியவள்,

இயல் புதிய முடுகு அரிய தவம் உற்றுக் கச்சியினில் உற
மேவும் புகழ் வனிதை தரு புதல்வ ...

இடைவிடாத அன்புடன்அதிசயமான வகையில் ஊக்கத்துடன், அருமையான தவத்தை மேற்கொண்டு காஞ்சிப் பதியில் பொருந்தி விளங்கும் புகழ் பெற்ற தேவிபார்வதி பெற்ற மகனே,


பத்துக் கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ரக் கைக்கடவுள் பொறி அரவின் மிசை துயிலு(ம்) சுத்தப் பச்சைமுகில் மருகோனே ...

(ராவணனின்) பத்துக் கொத்தான தலைகளும்,இருபது புயங்களும் அற்று விழ அம்பைச் செலுத்தியவனும், சக்ராயுதத்தைஏந்தியவனுமாகிய கடவுள், புள்ளிகளைக் கொண்ட ஆதிசேஷன்என்னும் பாம்பின் மேல் பள்ளி கொள்ளும் சுத்தமான பச்சை நிற மேகவண்ணனாகிய திருமாலின் மருகனே,

அரிய மரகத மயிலில் உற்றுக் கத்து கடல் அது சுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டை அற ...


அருமையான மரகதப் பச்சைநிறமான மயில் மீது வீற்றிருந்து, ஒலிக்கும் கடல் வற்றும்படி,அசுரர்களின் கூட்டம் கட்டோடு ஒழிய,

அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே ...

தேவர்கள் தலைவனான இந்திரன் சுகத்துடன் குடி ஏறுதற்கு தக்கபடி
ஏற்பாடு செய்த, மிக்க இளையவனே.


அருண மணி வெயில் பரவு பத்துத் திக்கும் மிகும் அழகுபொதி மதர் மகுட

செம்மணிகள் பத்துத் திக்குகளிலும் ஒளி வீசும்,மிக்க அழகு நிறைந்து செழிப்புடன் விளங்கும் கிரீட மணி முடியைஉடையவனே,


தத்தித் தத்தி வளர் அணிய கயல் உகளும் வயல்அத்திப்பட்டில் உறை பெருமாளே. ...

தாவித் தாவி வளர்கின்றவரிசையாக உள்ள கயல் மீன்கள் குதிக்கும் வயல்கள் உள்ளஅத்திப்பட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே.


                                                 குருஜியின் குரலில் ஒரு விருத்தம்



                           குருஜியுடன் இணைந்து  அன்பர்கள்  பாடியுள்ள  பாடல்


முருகா சரணம்

Friday, 3 July 2015




ஆனிமூலம்  இசைவழிபாடு 2015

ஆனிமூலம்  இசைவழிபாடு மும்பை முலுண்டு வாணி வித்யாலயா வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது .மும்பையின் பல பகுதியிலிருந்தும் அன்பர்கள் திரளாக வந்து கலந்துகொண்டு பெருமானின் அருள் பெற்றனர்.

சில புகைப்பட காட்சிகள் 
















                      புகைப்பட உதவி ....அருளாளர் கே .ஆர். பாலசுப்ரமணியம்.

முருகா சரணம்.
               திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 


                                                        (476 முதல் 503 வரை )


                                                        விராலிமலை  திருத்தலம்


                                    

                                                                      தலச்சிறப்புக்கள்


வசிஷ்டரும் அவர்தம் இல்லாள்அருந்ததியும் தமது சாபம் நீங்க
இத்தலத்தில் தவமிருந்தனர்.இம்மலையில்தான் பரகாயப்பிரவேசம் 
என்னும்சித்தியைஅருணகிரிநாதருக்கும்பெம்மான்வழங்கியதாகப்
புராணம்உண்டு.

இத்தலத்தின்மீது,விராலிக்குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக்
கவிராயர் இயற்றினார்.

பங்குனி உத்திரம்,கந்த சஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்.

பிள்ளைச் செல்வம் வேண்டுவோருக்கு நேர்த்திக் கடன் கழிக்கும் பழக்கம்

இங்கு உள்ளது. பிள்ளை பிறந்ததும், அதை ஆறுமுகனாரிடமே அவரது 

பிள்ளையாகக் கொடுத்து விட்டுப் பிறகு பிள்ளையின் மாமன் அல்லது

சிற்றப்பன்மார்கள்ஆறுமுகனாருக்குத்  தவிட்டைக் கொடுத்து பெற்றுச் 

செல்லும் சடங்கு இங்கு பிரபலமானது 



                                                திருப்புகழ் பாடல்


பாடல் வரிசை எண்  10     புத்தக வரிசை எண்   200



ராகம் சஹானா      அங்க தாளம்      தக தகிட தகிட தகிட தக திமி 


                                                                   2 1/2         1 1/2    1 1/2      2



இப்பாடலுக்கு  பகுதி 5,6,7,8...3,4 வரிசையில் இசை அமைக்கப்பட்டுள்ளது 
 

1.பாதாள மாதி லோக நிகிலமு
     மாதார மான மேரு வெனவளர்
          பாடீர பார மான முலையினை ...... விலைகூறிப்

2.பாலோடு பாகு தேனெ னினியசொ
     லாலேய நேக மோக மிடுபவர்
          பாதாதி கேச மாக வகைவகை ...... கவிபாடும்

3.வேதாள ஞான கீனன் விதரண
     நாதானி லாத பாவி யநிஜவன்
          வீணாள்ப டாத போத தவமிலி ...... பசுபாச

4.வ்யாபார மூடன் யானு முனதிரு
     சீர்பாத தூளி யாகி நரகிடை
          வீழாம லேசு வாமி திருவருள் ...... புரிவாயே

5.தூதாள ரோடு காலன் வெருவிட
     வேதாமு ராரி யோட அடுபடை
          சோராவ லாரி சேனை பொடிபட ...... மறைவேள்விச்

6.சோமாசி மார்சி வாய நமவென
     மாமாய வீர கோர முடனிகல்
          சூர்மாள வேலை யேவும் வயலியி ...... லிளையோனே

7.கூதாள நீப நாக மலர்மிசை
     சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
          கோலால நாத கீத மதுகர ...... மடர்சோலை

8.கூராரல் தேரு நாரை மருவிய
     கானாறு பாயு மேரி வயல்பயில்
          கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.

                                   சொல் விளக்கம் 


பாதாளம் ஆதி லோக நிகிலமும் ஆதாரமான மேரு என
வளர் பாடீர பாரமான முலையினை விலை கூறி ...


 பாதாளம்முதலிய உலகம் எல்லாவற்றுக்கும் ஆதாரமான மேரு மலை போல்
வளர்ந்துள்ள, சந்தனம் அணிந்த பருத்த மார்பகத்தை விலை பேசி,


பாலோடு பாகு தேன் என இனிய சொ(ல்)லாலே அநேக
மோகம் இடுபவர் ... 


பால், சர்க்கரை, தேன் இவை போன்ற இனிப்பான
சொற்களால் நிரம்ப காம மோகத்தைத் தருபவர்களாகிய
விலைமாதர்களுடைய


பாத(ம்) ஆதி கேசமாக வகை வகை கவி பாடும் வேதாளன்
ஞான கீனன் விதரண நா தான் இலாத பாவி அநிஜவன் ...


கால் முதல் கூந்தல் வரை உள்ள உறுப்புக்களை பல விதமான
கவிதைகளைப் பாடும் நான் பேயன், ஞானம் குறைந்தவன், விவேகமுள்ளநாக்கே இல்லாத பாவி, உண்மை இல்லாதவன்,


வீண் நாள் படாத போத தவம் இலி பசுபாச வ்யாபார மூடன்
யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை
வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே ... 


வாழ்நாள் வீணாள்ஆகாமல் காக்கும் அறிவும் தவமும் இல்லாதவன், உயிரைப் பற்றியும்,உலகைப் பற்றியும் பேசிப் பொழுது போக்கும் பதி ஞானம் இல்லாதமூடன், இத்தகைய குணங்களை உடைய நானும் உன்னுடைய இரண்டுசிறப்பு வாய்ந்த பாதங்களின் தூளியாகும் பேறு பெற்று, அதனால் நரகில்விழாமல், சுவாமியே, திருவருள் புரிவாயாக.

தூதாளர் ஓடு காலன் வெருவிடவேதா முராரி ஓட அடு
படைசோரா வலாரி சேனை பொடி பட ... 


தன்னுடையதூதர்களோடு யமன் அஞ்சி ஓடவும், பிரமனும் திருமாலும் அஞ்சிஓடவும், கொல்ல வல்ல படைகள் சோர்ந்து போய் இந்திரனுடைய சேனை பொடிபட்டு அழியவும்,

மறை வேள்வி சோமாசிமார் சிவாய நம என மா மாய வீர
கோரமுடன் இகல் சூர் மாள வேலை ஏவும் வயலியில்
இளையோனே ...


 வேத வேள்விகள், சோம யாகம் செய்யும் பெரியோர்கள்
பஞ்சாக்ஷரத்தை ஓதித் துதித்து நிற்கவும், பெரிய மாயங்களும் வீரமும்
கோரமும் பொருந்தி போர் செய்த சூரன் இறக்கும்படி வேலாயுதத்தைச்
செலுத்திய, வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே,


கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல்
கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை ... 


கூதாளப் பூ,கடப்ப மலர், சுரபுன்னை மலர் இவைகளின் மீது சாதாரி (பந்துவராளி),தேசி (தேஷ்), நாமக்ரியை (நாதநாமக்கிரியை) முதலான ஆடம்பரமானராக இசைகளைப் பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகளும்,

கூர் ஆரல் தேரு(ம்) நாரை மருவிய கான் ஆறு பாயும் ஏரி
வயல் பயில் கோனாடு சூழ் விராலி மலை உறை
பெருமாளே. ...


 நிரம்பஆரல்மீன்களைக்கொத்தும்நாரைகள்பொருந்தியகாட்டாறுகள்பாய்கின்றனவும், ஏரிகளும் வயல்களும்நெருங்கியுள்ள கோனாடு* என்னும் நாட்டில் உள்ள விராலி மலையில்வீற்றிருக்கும் பெருமாளே.



                            உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல




                           குருஜியுடன் இணைந்து  அன்பர்கள்  பாடியுள்ள  பாடல்



முருகா சரணம் 

Wednesday, 1 July 2015



                                                                                                        திருப்புகழ்வழிபாடு புத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள்                                                                                                                                                                                                                                                              (476முதல் 503 வரை )



                                                      விராலிமலை திருத்தலம்
                            
கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு,காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது.இங்குதான் விராலிமலை உள்ளது 

விராலிமலை தமிழ்நாட்டின் திருச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவில் மணப்பாறைக்கு அருகே அமைந்துள்ளது.


விராலிமலையில் உள்ள குன்றின் உச்சியில் விராலிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பரத நாட்டியக் கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர். இந்நகரில் வாழ்வோரில் பெரும்பான்மையானோர் இசைவேளாளர்சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொடும்பாளூரின் தாக்கம் இங்கும் இருந்திருக்கலாம். சோழர் கால கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் வளமிக்க ஊராக இருந்திருக்க வேண்டும் என சாற்றுகிறது. 

விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையானகுறவஞ்சி நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும் 

இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. முருகன் கோவிலைச் சுற்றியும் சுற்றியுள்ள காடுகளிலும் இவை காணப்படுகின்றன. இம்மலைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது





                                                    திருப்புகழ்  பாடல் 


               வரிசை எண்  9             புத்தகவரிசை  எண்  199

 ராகம்  கீரவாணி                                                                       2 1/2             1 1/2     1 1/2         2


சீரான கோல கால நவமணி
     மாலாபி ஷேக பார வெகுவித
          தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்

சீராடு வீர மாது மருவிய
     ஈராறு தோளு நீளும் வரியளி
          சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
     ஜீமூத மூர்வ லாரி மடமகள்
          ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
     ஞானாபி ராம தாப வடிவமும்
          ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்
     மீதேறி மாறி யாடு மிறையவர்
          ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி
     லூடாடி யால வாயில் விதிசெய்த
          லீலாவி சார தீர வரதர ...... குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ
     னீடேறு மாறு பாநு மறைவுசெய்
          கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே

கோடாம லார வார அலையெறி
     காவேரி யாறு பாயும் வயலியில்
          கோனாடு சூழ்வி ராலி மலையுறை  பெருமாளே


                                    சொல் விளக்கம் 

சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார ...

வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற

பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும்,

வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் ..

பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு

முகங்களையும்,

சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் ... 

சிறப்பு உற்றுஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும்,


நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் ...

நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி

ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும்,

ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மடமகள் ...

முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம்

மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய
அழகிய பெண்ணாகிய தேவயானையும்,

ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் ... 

பக்தர்களின்பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும்உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும்,


ஆராயும் நீதி வேலும் மயிலும் ...

 நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும்உனது வேலையும் மயிலையும்,


மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் ...

ஞான ஸ்வரூபியானகீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும்,

ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் ... 

மிகக்கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் (மேற்சொன்ன

அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற
வேண்டுகிறேன்.

ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும்
இறையவர் ... 

அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில்,

வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி* ஆடிய இறைவராகிய

சிவ பெருமான் (இயற்றிய 'இறையனார் அகப் பொருள்' என்ற நூலுக்கு),

ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் ...

நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள்

அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக,

ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ..

 தகுதி உள்ள ஊமைப்பிள்ளை** போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி,


ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா ...

ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக்

காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக்
கொடுப்பவனே, குரு நாதனே,

முன் வீய நினைபவன் ஈடேறுமாறு கூர் ஆழியால் பாநுமறைவு செய் ... 

முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு

எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால்
சூரியனை மறைத்து வைத்த

கோபாலராய நேயம் உள திரு மருகோனே ... 

கோபாலர்களுக்குஅரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே,

கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும்
வயலியில் ..

தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும்
காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும்,




கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே. ...


கோனாடு** என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும்
வீற்றிருக்கும் பெருமாளே.


உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல








                           குருஜியுடன் இணைந்து  அன்பர்கள்  பாடியுள்ள  பாடல்
/



முருகா சரணம்