சென்ற ஸ்லோகத்துல இந்த ஆறு முகங்களை சந்திரனோட ஒப்பிட முடியாதுன்னு ஒரு கவித்துவமா சொன்னார்.ஆனால் இந்த ஸ்லோகத்துல அவற்றை தாமரையோட ஒப்பிடலாம் ன்னு சொல்றார். பார்ப்போம்
ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்
கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி
ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ
தவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி
அன்பர் தொகுத்தளித்துள்ள விளக்க உரை நன்றிகள் பல
‘ஹே ஈஷஸூனோ’
பரமேஸ்வரனுடைய புத்ரனான ஷண்முகக் கடவுளே
‘ஸ்புரன் மந்தஹாஸை’ஸஹம்ஸானி
உன்னுடைய முகத்துல மந்தஹாசம் ஒளிவிடுகிறது என்கிறார்.
மந்தஹாசம் என்றவுடன் எப்பயுமே மஹான்கள் வெண்மையா இருக்கு, வெள்ளையா சிரிக்கறது எங்கறதை வெச்சுண்டு, தூய்மையான புன்சிரிப்பு என்பதைப் பத்தி வர்ணித்துள்ளார்கள்.
அதனால இங்க முகத்தை தாமாரைன்னு சொல்லும் போது இந்த ஜொலிக்கின்ற புன்சிரிப்புங்கற ஹம்ஸங்கள், தாமரைக்கு பக்கத்துல ஹம்சம் இருக்கும். அந்த மாதிரி இந்த முகமாகிய தாமரைக்கு பக்கத்துல அந்த புன்சிரிப்புங்கற வெண்மையான ஹம்ஸங்கள் இருக்குங்கறார்.
அடுத்தது ‘சஞ்சத் கடாக்ஷாவலீ ப்ருங்க ஸங்கோ ஜ்வலானி’
தாமரைன்னா அதுல வண்டுகள் இருக்கணும். முகத் தாமரையில் என்ன வண்டுன்னா, கடாக்ஷாவலீ, கடாக்ஷம்-ன்னா கண்கள் கிடையாது. அந்த கண்களிலிருந்து வர்ற பார்வை. அந்த பார்வை வந்து ஆவளி போல ஒரு வரிசையா கண்களிலேருந்து அந்த பார்வை வந்துண்டே இருக்கு. கறுப்பு தானே கண்ணோட பார்வைங்கறது. அது இப்படியும், அப்படியும் சலிக்கறது.
‘சஞ்சத்க டாக்ஷாவலீ’ கண்ணோட பார்வை இங்கேயும் அங்கேயும் போகும் இல்லையா?
அது ‘ப்ருங்கங்கள்’ வண்டு போல இருக்கு. வண்டு தாமரை மேல வட்டமிடற மாதிரி, உன்னுடைய முகமாகிய தாமரையில இந்த கண்களில் இருந்து வெளி வரும் அந்த கடாக்ஷ வரிசைகளுடைய ப்ருங்கங்கள் இருக்கு, வண்டுகள் இருக்குங்கறார்.
அப்புறம் தாமரைன்னா தேன் இருக்கணுமே.
இதுல ‘ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீ’
உன் பிம்ப அதரங்கள், கோவைப்பழம் போன்ற உன்னுடைய உதடு முகத்துல செக்க செவேல்னு இருக்கு. அதுல அந்த சிகப்பழகு தாமரையில இருக்கற தேன் மாதிரி அமிர்த ப்ரவாகமா, அந்த அழகு உதடுலேர்ந்து வந்துண்டிருக்கு.
‘தவ ஷண்முகாம்போரு ஹாணி’
உன்னுடைய ஆறு முகங்கள் என்ற ஆறு தாமரைகளை நான் பார்க்கிறேன்னு இந்த அழகானா ஸ்லோகம்.
இந்த ஆறு முகங்கள் பத்தி மஹான்கள் எல்லாம் ரொம்ப, திரும்ப திரும்ப அதை த்யானம் பண்ணி, தர்சனம் பண்ணி சந்தோஷப் பட்டிருக்கான்னு தெரியறது. கச்சியப்ப சிவாச்சாரியார் முருகனுடைய அவதாரத்தை சொல்லும் போது,
"கருணை கூர் முகங்கள் ஆறும்" என்று வர்ணிக்கிறார்
அருணகிரிநாதர் பல திருப்புகழில் ஆறுமுகங்களையும் பன்னிரு புயங்களையும் தரிசித்து , அனுபவித்ததையெல்ல்லாம் கொட்டி கொட்டி எழுதி இருக்கிறார் என்று அடிக்கடி குருஜி கூறுவார்கள்..
1) அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்கு அசைந்தாடு குழை என்கிறார்
2) சுவாமிமலை பாடலான
"ஒருவரையும் ஒருவர் அறியாமலும்" எனத் தொடங்கும் திருப்புகழில்
தண் தரு மா மென் கருணை பொழி கமல முகம் ஆறும்
3) ஆறுமுக வித்தகனும் ஆறிரு புயத்தரசும்" என்று திருவேளைக்காரன் வகுப்பிலே குறிப்பிடுகிறார்.
4) கந்தரலங்காரத்தில் 47 வது பாடலில்
பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்திருக்கும் அமுது கண்டேன் என்கிறார்.
5) நமது குருஜியை மனதில் தியானித்து கந்தரலங்காரம் 102 வது பாடலை பார்ப்போம்.
திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.
அப்படீன்னு அந்த மருவடிவான வதனங்கள் ஆறும், மலர்க் கண்களும் குருவடிவாய் வந்து என் உள்ளத்தில் குடி கொண்டவே, வந்து தங்கியாச்சு, என் உள்ளத்துலதான் இருக்கார்ன்னு சொல்லியிருக்கார் .
6)."வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து தெளியேனே "என்ற பாடலில்
"ஆதியோடு அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகமென்று தெரியேனே" ன்னு பாடறார்.
அப்படி மஹான்கள் எல்லாம் அந்த ஆறுமுக தரிசனத்துல ரொம்ப சந்தோஷப் பட்டிருக்கா. ஆறுமுகம், ஆறுமுகம்-ன்னு இதே ஒரு மந்த்ரமா ஆறுமுகம், ஆறுமுகம், ஆறுமுகம்ன்னு ஒரு பாடல் இருக்கு. முன்னமே நாம அதைப் பார்தோம்.
7) கந்தர் அநுபூதியிலோ
"முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே " என்கிறார்.
சொல்லிக் கொண்டே போகலாம்.
முருகா சரணம்