Thursday, 8 June 2017

அபிராமி அந்தாதி வரிசை 4



                                         அபிராமி அந்தாதி  வரிசை ....பாடல்  4 
                                                                                



                                                         பாடல் 
மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே


                                                             அன்பரின்  விளக்கவுரை 

மனிதர்களும் தேவர்களும், என்றும் அழியா அமரத்தன்மை படைத்த முனிவர்களும் வந்து தலை வணங்கும் சிவந்த பாதத் தாமரைகள் படைத்த அபிராமியே! தன்னுடைய நீண்ட ஜடாமுடியில் கொன்றை மலரையும், பனி போன்ற குளிர்ச்சி பொருந்திய நிலவினையும் பாம்பினையும் பகீரதி எனப்படும் கங்கையையும் கொண்டிருக்கும் சிவ பெருமானும் நீயும் என் மனதில் என்றும் இருந்து அருள வேண்டும் என்று வேண்டுகிறார் பட்டர்.
 மனிதரும், தேவர்களும், முனிவர்களும் என்று வரிசைப் படுத்துவதில் ஏதேனும் உள்ளதோ? மனிதர்களை விட மேலானவர்கள் தேவர்கள். அப்படி என்றால், தேவர்களை விட மேலானவர்கள் முனிவர்களா என்ற கேள்வி எழுகிறது. அதுவும், சாதாரணமான முனிவர்கள் இல்லை. 'மாயா' முனிவர்கள். தேவர்களைக் காட்டிலும் மேலான, 'மாயாத - இறவாத தன்மை கொண்டவர்கள்' என்றுதான் பொருளாகிறது. அப்படி இறவாத தன்மை கொண்ட முனிவர் யார்? அவர்கள் எப்படி தேவர்களிலும் மேலானவர்கள்.
முனிவர் என்பது நீண்டகாலம் சூட்சும வடிவில் வாழும் முனிவர்களைக்குறிக்கும்.அதேநேரம், திருக்கடவூரில் மரணமில்லாத சிரஞ்சீவி நிலைபெற்றமார்க்கண்டேயரின் நினைவு எழுகிறதல்லவா. அந்தப் பரமனின் காலைப் பற்றிய பாத்திரத்தில், அந்த ஈசனது இடது கால் எமனை உதைத்துத் தள்ளிய காட்சி நம் கண்முன் விரிகிறது. இடப்பக்கம் அமர்பவள் அந்த தேவியே அல்லவா? அதனால், தனது பதியின் காலைப் பற்றிய பக்தனைக் காத்து அருளியவள் அவளே என்றும் புலனாகிறதே! அம்பிகையை அன்றாடம் வணங்குபவர்கள் பட்டியலில் மார்க்கண்டேயர்இடம் பிடித்திருப்பதில் ஒரு சுவாரசியமான காரணம் உண்டு.

தேவர்கள் அழிவற்றவர்கள் என்று சொல்லப்பட்டாலும், அவர்களும், மஹாப் ப்ரளய காலத்தில் அழிந்துதான் போகிறார்கள். ஆனால், மரணமே இல்லாத சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் போன்ற முனிவர்கள், தேவியின் சரணங்களைப் பற்றியதால், என்றும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிடுவதால்தானோ என்னவோ, இங்கே, மனிதர் - தேவர் - மாயா முனிவர் என்று வரிசைப் படுத்துகிறார் அபிராமி பட்டர்.
இப்பாடலில் அன்னையும் தந்தையும் எந்நாளும் எம்மனதில்நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். மனிதர்கள் வந்து உன்னைவணங்குகின்றார்கள் தாயே... அமரர்களும் உனைத் தேடி வந்து வணங்குகின்றார்கள். மரியாது வாழும் வாழ்வு பெற்ற தவசீலர்களும் உன்னை வந்து வணங்குகின்றார்கள்.தலைகுனிந்து உனது செம்மை நிறப் பாதங்களை வணங்குகின்றார்கள் தாயே...அப்படிப்பட்ட சேவடிகளைப் பெற்ற தாயே... கோமளவல்லியே... என்று அன்னையைஅழைக்கிறார் அபிராமிப் பட்டர். அம்பிகையின் திருவடித் தாமரைகளை எத்தனைபேர் வணங்கினாலும் அது வாடுவதில்லை.”சேவடிக் கோமளமே” என்பதற்கு திருவடித்தாமரை என்றும்பொருள். அனைவராலும் வணங்கப்படும் திருவடிகளைக் கொண்ட தாமரையேஎன்றும் பொருள். கொன்றைப்பூக்களை அணிந்த சடையிலேயே குளிர்தரும்நிலவையும், பாம்பையும், வற்றாத உயிரூற்றான கங்கையையும் அணிந்த புனிதரும் என்றுஅபிராமிப் பட்டர் சிவனைக் குறிப்பிடுங்காலை
"மாசறு திங்கள் கங்கை முடிமேல்அணிந்து என் உளமே புகுந்த ..." என்று தென்னாடுடைய சிவனைக் கொண்டாடியசம்பந்தரின் வரிகள் இவ்விடத்து நினைவுக்கு வருகின்றன. கொன்றைத்தார் சூடிய தன் சடாபாரத்தில் குளிர்ந்த நிலவையும், நாகத்தையும் கங்கையையும் சூடியவராகிய சிவமெருமானும் அம்பிகையும் தன்னுள்ளத்தில் வந்துபொருந்தி நிற்க வேண்டுமென்று கேட்கிறார் அபிராமிபட்டர்
அந்த தேவியின் பக்கத்தில் இருக்கும் அந்த தேவனோ, கொன்றை மலர் சூடிய நீண்ட கூந்தலை உடையவன். அந்தக் கூந்தலின்மேல் நிலவினை அணிந்தவன். அதுவும் எப்படிப்பட்ட நிலவு ? பனிபொழியும் நிலவு. குளிர்ச்சி தரும் நிலவு. அது போதாதென்று பாம்பினையும் அணிந்து இருக்கிறான். இது இரண்டும் போதாது என்று பகீரதி எனப்படும கங்கையையும் அணிந்து இருக்கிறான்.
இப்படி, குளிர்ச்சியே உருவாக - பனி தரும் நிலவினையும், சில் என்று இருக்கும் குளிர்ச்சி பொருந்திய பாம்பினையும், சிலீர் என்று ஒடும் குளிர்விக்கும் கங்கையையும் அணிந்து, நெருப்புப் பிழம்பான அந்த ஈசன், அந்தப் புனிதன் நிற்கிறான்.
"பனிதரும் திங்களும், பாம்பும் பகீரதியும் படைத்த புனிதன்" என்று அடுக்கடுக்காக குளிர்ச்சியானவற்றைப் பற்றி, பட்டர் அடுக்கிக் கொண்டு போவதைப் பார்க்கும்போது, அப்பைய தீக்ஷிதர் ஒரு பாடுல சிவனை இப்படி வர்ணிச்சு பாடியிருக்காராம்.

உன்னுடைய நீண்ட ஜடாமுடியினில், கங்கையையும், சந்திரனையும் கொண்டிருக்கிறாய். உனது தாளிலும், தோளிலும், குளிர்ச்சி பொருந்திய நாகங்களை ஆபரணமாய் அணிந்திருக்கிறாய்; உனது வாம பாகத்திலோ, அந்தக் குளிர் மலையாம் இமயத்தின் மகளையே வைத்துக் கொண்டிருக்கிறாய்; இதற்கும் மேலாய், குளிர்ந்த சந்தனத்தை உடல் முழுதும் தடவிக் கொண்டிருக்கிறாய்! எப்படியப்பா நீ இந்தக் குளிர்ச்சியை எல்லாம் தாங்குகிறாய்?
எனக்குப் புரிந்து விட்டது! நீ என்னுடைய மனதிலே, பாவங்களே செய்து கொதித்துப் போயிருக்கும் என் மனதிலே வந்து அமர்ந்து கொண்டிருக்கிறாயில்லையா, அதனால்தான் உனக்கு அந்த சக்தி வந்திருக்கிறது" என்று சொல்லுகிறார் அப்பைய தீக்ஷிதர்!
அந்த அப்பைய தீக்ஷிதரின் வரிகளை ஞாபகப் படுத்தும் அதே "குளிர்ச்சி பொருந்தியவற்றை அந்த ஈஸ்வரன் சூடி நிற்பதை "பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும்" என்னும் அடுக்குத் தொடர்கள் நினைவு படுத்துகின்றன!!
அந்தப் புனிதரும், நீயும், என் புத்தியிலே என்னாளும் பொருந்தி இருக்க வெண்டும் என்று பிரார்த்திக்கிறார் பட்டர்.
'பகீரதியும் படைத்த புனிதர்' என்ற வரியும் மிக அழகான ஒன்று.
பகீரதன் தவம் செய்கிறான். எதற்காகத் தவம் ? கங்கையை வரவழைப்பதற்காக. கங்கை எங்கே இருக்கிறாள்? அவள் வானுலகில் மட்டுமே ஒடும் ஒரு நதியாக இருந்தாள். விண்ணவர்க்கு மட்டுமே சொந்தமானவளாக இருந்தாள். எதற்காக கங்கை வர வேண்டும்? பகீரதனின் முன்னோர்கள் கடைத்தேறுவதற்காக. முனிவர் ஒருவரின் சாபத்தால் சாம்பலாய்ப்போன தம் முன்னோர் நல்ல கதி அடைய வேண்டும் என்பதற்காக பகீரதன் தவம் செய்கிறான். தனக்காக இல்லை. தன் சுய லாபத்திற்காக இல்லை.
ப்ரம்மனின் வரமும் கிடைத்தது. கங்கை வருவாள். ஆனால், அவள் வரும் வேகத்தைத் தாங்கிப் பிடித்து அவளை வழிமுறை செய்து விடுவது யாரால் முடியும் ? ஈசனால் மட்டுமே முடியும் என்று சொல்லுகிறார் ப்ரம்மா. இப்பொது பகீரதன் மறுபடியும் ஈசனை நோக்கி தவம் செய்கிறான். ஈசனும் மனமிரங்கி வருகிறார். கங்கை வருகிறாள். விண்ணுலகில் இருந்த தன்னை மண்ணுலகிற்கு வரவழைக்கப்படுவது யாரால் என்ற கேள்வியுடன் கோபமாய் வருகிறாள்.
வந்தவளை ஈசன் தன் தலையில் தாங்குகிறார். அந்த வேகத்தை, காட்டாற்று வெள்ளமெனப் பெருகி வந்த அந்த பகீரதன் வரவழைத்த கங்கையை, பாகீரதியை, தன் தலையில் தாங்கி இந்த பூவுலகையே காத்து அருளினவர் அந்தப் புனிதர்.
அதனால்தான், "பகீரதியைப் படைத்த புனிதர்" என்று சொல்கிறார் பட்டர்.
அப்படிப்பட்ட புனிதரும் நீயும் என் உள்ளத்தில் வாருங்கள் எங்கிறார். இதுவும் மிக அழகான ஒரு இடம். “அம்மா நீ வா” என்று சொல்லவில்லை!!
“அம்மா, நீ எனக்கு, என்னுடைய தந்தையான அந்தப் பரமேஸ்வரனுடன் சேர்ந்து வந்து, அருள் செய்வாயாக” என்று கேட்டுக் கொள்ளுகிறார்.
“ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ” என்று காளிதாஸன் சொன்னாற்போல, தாயொடு தந்தையும் சேர்ந்து வந்து அருள்செய்யுமாறு வேண்டுகிறார் பட்டர்.
அப்படி உலகையே காத்து அருளிய அந்தப் புனிதரும், நெருப்புப் பிழம்பென நின்றாலும், நிலவினை அணிந்து, பாம்பினை அணிந்து, அந்த பகீரதியையும் அணிந்து சற்றே குளிர்ந்து இருக்கும் அந்த ஈசனும், உலகிலே அனைவரும் வந்து வணங்கும் அந்த கோமளமென தாளிணை உடைய அந்த தேவியும் நம் மனதில் பொருந்தி அமர்ந்து அருள் செய்யட்டும்.
இந்த அந்தாதி சொல்றதுனால எல்லாருக்கும் அந்த பராம்பிகை உயர்ந்த பதவி கொடுப்பா நிச்சயம்.
அபிராமி சரணம் சரணம்..


                                                                           குருஜி கற்பிக்கிறார் 

                                                                                 
                                                                                 அன்பர்கள் 
                                                                                  

                                                       அபிராமியே சரணம் 

                                                           முருகா  சரணம்                                               

No comments:

Post a Comment