Monday, 27 May 2013

குருஜி இராகவன்



600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரிநாதர் தன் திருப்புகழ் பாடல்கள் மூலம் முருகன் புகழ் இந்த தரணியில் பரவச்செய்தார். அவர் விட்டுச் சென்ற பணியையை இந்த நூற்றாண்டில் தொடர்ந்தவர் காலம் சென்ற இராகவன் அவர்கள். அவர் செய்த பணி மறக்கமுடியாததுமட்டுமல்ல மலைக்ககூடியதுமாகும். இளம் வயதிலேயே திருச்செந்தூர் முருகனினால் ஆட்கொள்ளப்பட்டார். உத்தியோக நிமித்தம் தலை நகர் டில்லியில் வசித்த போதிலும் தன் நண்பர்களுக்கு திருப்புகழ் கற்று தர ஆரம்பித்த முயற்சி இன்று ஆலமரமாய் விரிந்து பாரெங்கிலும் பரவி அருணகிரியாரின் வாக்கின் படி ‘பூர்வ பச்சிம உத்தர தக்ஷிண’ திக்குகளிலெல்லாம் ஒலிக்கின்றது. ‘கங்கையை பாரினில் கொண்டு வந்த பரதனின் முயற்சி போன்றுதான் இது என்பார் ஒரு அன்பர். ‘என் முயற்சி ஒன்றும் இல்லை. எல்லாம் செந்தில் ஆண்டவன் இச்சை’ என்பது இராகவன் அவர்களின் கூற்று. பக்தியால் எதனையும் சாதிக்கலாம். அதற்கு திருப்புகழ் இசை மிகச் சிறந்த சாதனம். திருப்புகழ் சந்த பா வகையில் அமைத்தொன்றாகும். அந்த சந்த பாடல்களை சந்தம் சிதையாமல் இராக தாளம் தவறாமல் பிழையின்றி திருப்புகழ் கற்று தந்து ‘திருப்புகழ் அன்பர்கள்’ என்ற அமைப்பின் மூலம் இன்று 5000க்கும் மேற்பட்டவர்கள் திருப்புகழ் இசைப்பணி புரிந்து வருகிறார்கள் என்பது இராகவனின் மகத்தான சாதனை. ‘அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழ் பாடல்களை எப்படி பாட வேண்டுமென்று விருப்பட்டிருப்பாரோ அந்த விதத்தில் பாட இராகவனைத்தவிர இந்த தலைமுறையில் வேறு ஒருவரும் இல்லை’ என்பது கர்நாடக இசை விமர்சகர் காலம் சென்ற சுப்புடு அவர்களின் கருத்து. சமீபத்தில்  (2008) இந்த அமைப்பு  ‘பொன் விழா’ கண்டது. ‘திருப்புகழ் தொண்டர்’, ‘திருப்புகழ் சக்ரவர்த்தி’, ‘குகஸ்ரீ, ‘பக்த ரத்னா’ என்ற பட்டங்கள் அவரை சென்றடைந்தாலும் அவருக்கு பக்தர்களால் கொடுக்கப்பட்ட ‘குருஜி’ என்ற பட்டமே என்றும் நிலைத்திருக்கும் எண்பது திண்ணம். குருஜி இராகவன் அவர்கள் தன் ஸ்தூல சரீரத்தை உதறிவிட்டு முருகனின் பாதகமலத்தை அடைந்து விட்டாலும் அவர் திருப்புகழ் அன்பர்கள் மனத்தில் என்றும் நீக்கமற நிறைந்திருப்பார் என்பதுதான் நிரந்தர உண்மை .


-Rajans

(On the request of an anbar form Banglaore this letter was wriiten for publication in "Dinamlar")

No comments:

Post a Comment