Thursday, 24 May 2012

நினது திருவடி சத்தி



முருகா,
நினது திருவடி சத்தி, மயில் கொடி
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழம் அப்பமும்
நிகழ், பால், தேன் நெடிய வளைமுறி
இக்கொடு, லட்டுகம், நிறவில்
அரிசி, பருப்பு, அவல், எள், பொரி
நிகரில் இனி கதலிக்கனி வர்க்கமும்
இளநீரும், மருவு மலர்புனை
தோத்திர சொற்கொடு வனஜ
பரிபுர பொற்பத அர்ச்சனை
மறவேனே!

இதை படித்தவுடன் இசைவழிபாட்டின் நிறைவில் பூசையில் நைவேத்தியம் செய்யும் தருணத்தில் பாடுவது நினைவிற்கு வரும். வயலூர் பொய்யா கணபதியின் முன் நின்று கொண்டு தன்னை மறந்த நிலையில் தன்னை ஆட்கொண்ட அந்த முருகபெருமானை உளமாற நினைத்து அவன் ஆணையின் படி திருப்புகழ் பாட வேண்டிய பிறகு முருகனை முன் நிருத்தி பாடின விநாயகர் துதியாகும் இது.

முருகனின் திருவடி வேல், மயில், சேவல் இவைகளை நினைவில் கருதுவதற்கான பேறறிவை பெருவதற்கு இவைகளை நைவேதனம் செய்கிறேன் கணபதி பெருமானே. நீ எப்படி சாப்பிட போகின்றாய் என்பது எனக்கு தெரியாதா?

அந்த துதிக்கையினால்தானே! எப்பேற்ப்பட்ட துதிக்கை!

அந்த பிரளய காலத்தில் கடல் நீரை உன் துதிக்கையினால் உறிஞ்சி வற்ற செய்தவன் இல்லையா நீ (மகர சலநிதி வைத்த துதிக் கர வளரும் கரி முக). மாகத ரிஷியின் மகன் கஜாமுகாசுரன். அவன் ரிஷி புத்திரனாக இருந்தாலும், அவன் தோழர்கள் அனைவருமே அரக்கர்களாக இருந்தமையால் அவனுக்கும் அரக்க குணமே மேலோங்கி இருந்தது. அனைவரையும் துன்புறுத்தி வந்தான்.. இந்த கஜாமுகாசுரன். ஒரு முறை விண்ணில் பறந்து கொண்டிருந்த போது, தன் வலிமையைக் காட்டுவதற்காக அண்டச் சுவர் ஒன்றை இடித்துத் தள்ள, ஆகாய கங்கை பொத்துக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்தது. அத்தனை வெள்ளமும் அனைத்து உலகங்களையும் மூழ்க அடிக்க, உலகே ஜலப் பிரளயத்தில் மிதந்தது. அண்ட சராசரமும் வெள்ளத்தில் மூழ்க அனைவரும் கதி கலங்கினார்கள். என்ன செய்வது எனத் திகைத்தனர். விநாயகரை வேண்ட  விநாயகரும் தம் துதிக்கையால் அனைத்துப் பிரளய நீரையும் உறிஞ்ச, வெள்ளம் வடிந்தது. தேவர்கள் கஜாசுரனைப் பற்றிச் சொல்ல விநாயகர் அவனுடன் போரிட்டு வென்று, அவனைத் தன் வாகனமாக மாற்றிக் கொண்டார். திருப்புறம்பியம் ஊரில் பிரளயம் காத்த விநாயகரை தரிசிக்கலாம் ( புரம் என்றால் வெளி, பயம் என்றால் நீர். நீரைக்கடந்து இருந்ததால் இந்த இடத்துக்கு திருப்புறம்பியம் எனப் பெயர் பெற்றது. 
வியாசர் பகவான் (மகாபாரதம்) சொல்ல அந்த வேகத்திற்கேற்ப விரைவில் எழுத ஏதுவாக உன் தந்தத்தை ஒடித்ததானால் நீ ஒற்றை மருப்பனையானாய்.
உன்னை வலமாக வருகிறேன்.
உனக்கு
என் காதை இரு கைகளினால் பிடித்துக்கொண்டு தோர்பி கர்ணம் போடுகிறேன். வாயினால் தோத்திரங்கள் சொல்லுகிறேன். உன் பாதங்களில் பூக்களினால் அர்ச்சிக்கிறேன். அதை என்றைக்கும் செய்ய மறக்க மாட்டேன்,
எதை நைவேதனம் செய்கின்றார்? பட்டியலை திரும்பவும் படியுங்கள், எல்லாமே சாத்வீக உணவு வகைகள். அரிசி, பருப்பு, அவல் பொரி – எல்லாமே ஒரு தத்துவத்தை குறிக்கிறது. இவைகள் விதைத்தால் முளை விடாது. பிறாவாத பெருநிலை வேண்டுவதை குறிப்பால் உணர்த்தப்படுகிறது. எந்த அளவுக்கு இடிபடுகிறதோ அந்த அளவுக்கு அவல் ருசியாக இருக்குமென எங்கள் பாட்டிமார் சொல்வார். எந்த அளவுக்கு நமக்கு சோதனைகள் வருகின்றதோ அந்த அளவுக்கு பக்குவபட்டவர்களாவோம் என்கிறது அவல். மொட்டாகி, காயாகி கனியாகி என்று சொல்வோமே அது ஒரு வளர்சியை காண்பிக்கிறது. கனி முதிர்ந்த வளர்சியான மன பக்குவத்தைக் காட்டுகிறது. மனித வாழ்வின் நோக்கம் பிறவியிலிருந்து முக்தி அடைவது. உலக பந்தத்தை விட்டு இறவனை அடைய காம்பாகிய இந்த பந்தத்திலுருந்து கனியாகி விடுபட வேண்டும். (ஓம் திரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான்...)  அதுதான் கனியை நைவேதனம் செய்வதன் நோக்கம். அப்பத்தின் மாவும், முறுக்கின் (முறி) மாவும் பச்சையாக இருக்கும் போது கொதிக்கும் எண்ணையில் சத்தம் செய்து கொண்டிருக்கும். வெந்ததின் அடையாளம் ஓசை அடங்குவது. வெந்துவிட்டால் ஒரு பூரண அமைதி. வேகாத மாவாக இராதே; வெந்த அப்பமாகவும் முறுக்காகவும் மாறிவிடு என்பதின் அடையாளமே அப்பமும் முறுக்கும்.
தோப்புக்கர்ணம் போடும் வழக்கம் அந்த காலத்திலேயே வழக்கில் இருந்திருக்கவேண்டும். கைகளினால் நெற்றியை குட்டிக்கொளவதும் தோப்புக்கர்ணம் போடுவதும் மிக சிறந்த யோக பயிற்சியாகும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் இன்று சொல்வது அவர்களுக்கு ஒரு புதிய தகவலாக இருக்கலாம்.

ஆனால் நாம் காலம் காலமாய் கடைபிடித்து வந்த ஒரு நெறி முறை. இரு காது நுணிகளை பிடித்துக்கொள்ளும் பொழுது அந்த அழுத்தத்தில் நரம்புகள் தூண்டப்பட்டு ஞாபக சக்தியும், அறிவும் பெருகும் என்பது விஞ்ஞான உண்மை. அதைத்தான் அருணகிரிநாதர் இங்கு குறிப்பிடுகிறார். நம்முடைய அந்த இரு நெற்றிப்பொட்டுக்களிலும் இருக்கும் சுறுசுறுப்பைத் தூண்டும் நரம்பு மணடலம் ரத்த ஓட்டத்தினால் சுறுசுறுப்பைப் பெறும். அதுவும் இரு நெற்றிப்பொட்டுகளிலும் இரண்டு கைகளையும் மாற்றி வைத்துக்கொண்டு வலது கையால் இடது பக்கத்திலும் வலது கையால் இடது பக்கத்திலும் குட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக்கொண்டு ‘தோர்ப்பி கரணம்” போடவேண்டும். யோக முறையில் ஒன்றான இதன் பெயர் சம்ஸ்கிருதத்தில் உல்ளது. கர்ணம் என்ற சம்ஸ்கிருத பதத்திற்கு காது என்று பொருளாகும். ‘தோர்பி:’ என்றால் கைகளால் பிடித்துக் கொள்ளுவது.  இதுதான் வழக்கத்தில் மருவி தோப்புக்கர்ணம் என்றாகியது. இவ்வாறு  தோர்ப்பி கர்ணம் போட்டு வழிபடுவதால் நம்முடைய உடலில் மூலாதாரம் என்று சொல்லப்படும் இடுப்பின் பின் பகுதியில் உள்ள சக்தி மேலெழும்பி உடல் எங்கும் பரவி சுறுசுறுப்பைக் கொடுக்கிறது. மனம் அமைதி அடையும், உடல் சுறுசுறுப்படையும்.
முன்பு ஒருகாலத்தில் அகத்தியர் பொதிகை மலை வந்து தவமிருந்தார். அவர் வத்திருந்த கமண்டலத்தை காக்கை வடிவத்தில் வந்த விநாயக பெருமான் அதை உருட்ட அதிலிருந்த நீர் பெருக்கமெடுத்து காவிரியாக விறிந்தது. தவம் கலைந்த அகத்தியர், கமண்டலத்தை உருட்டிய காகத்தைக்காண, அது ஒரு சிறுவன் வடிவாக நிற்க, கோபத்தில் அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்டினார். அதன் பின், கோபம் மறைந்து தனது ஞானக் கண் திறக்க அங்கே ஸ்ரீ விநாயகர் நிற்பதைக் கண்டு மனம் பதைத்து மன்றாடினார். தலையில் ஒரு முறை குட்டியதற்கு பிராயச்சித்தமாக தனது இரு கைகளாலும் குட்டிக்கொண்டு, நமஸ்காரம் செய்யும் பாவனையில் தனது இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு அமர்ந்து எழுந்தார். இச்செய்கையில் மனம் மகிழ்ந்த விநாயகர் அவருக்கு பல வரங்கள் தந்து அருளினார். இன்னொரு புராணக்கதையும் வழக்கத்தில் இருக்கிறது. இந்தத் தோப்புக்கரணத்தை ஆதியில் உண்டாக்கியவர் மஹாவிஷ்ணுதான் என்பார் மகாஸ்வாமிகள்.  ‘தெய்வத்தின் குரலில்’ மகாஸ்வாமிகள் கூற்றாக ஸ்ரீ நா கணபதி அவர்கள் எழுதுவது.

விஷ்ணுவின் கையில் இருந்த சக்கரத்தை விநாயக பெருமான் விளயாட்டாக விழுங்கி விட்டார். அப்போது தான் மஹாவிஷ்ணு யுக்தி பண்ணி, இப்படிக் காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட்டார். அதைப் பார்த்ததும், எப்போதுமே சிரித்த முகமாயிருக்கும். 'ப்ரஸன்னவதன'க் குழந்தை விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்கிறது. சிரிக்கிறபோது வாயில் அடக்கிக் கொண்ட சக்ரமும் குபுக்கென்று வெளியிலே வந்து விழந்தது. சடக்கென்று அதை மஹாவிஷ்ணு எடுத்து வைத்துக் கொண்டுவிட்டார். குட்டிக்கரணம் என்கிற மாதிரி இங்கே கரணம் இல்லை கர்ணம் என்று சொல்ல வேண்டும்.

முதலில் யாரோ மநுஷாள் இதை ஆரம்பிக்காமல் மஹாவிஷ்ணுவே ஆரம்பித்தார் என்பதற்கும் 'தோர்பி  கர்ணம்' என்ற வார்த்தையிலேயே 'எவிடென்ஸ்' (சானறு) இருக்கிறது. அதைப் புரிய வைப்பதற்கு கொஞ்சம் ஸ்ம்ஸ்க்ருத இலக்கணம் சொல்லித் தரணும்.

தமிழ், இங்கிலீஷ் முதலான பாஷைகளில் ஒருமை, பன்மை, ஸிங்குலர்-ப்ளூரல் என்று இரண்டுதான் இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட எல்லாம் பன்மை, ப்ளூரல் என்று வைத்துவிடுகிறோம். ஸ்ம்ஸ்க்ருதத்தில் மட்டும் ஏகவசனம், த்வி வசனம், பஹுவசனம் என்று மூன்று இருக்கின்றன. ஏகவசனம் என்பது ஒருமை. த்விவசனம் என்பது தமிழிலும் இங்கிலீஷிலும் இல்லாதது. அதை 'இருமை' என்று வேண்டுமானால் சொல்லலாம். இரண்டு பேர் அல்லது இரண்டு வஸ்துவை மட்டும் அது குறிக்கும். இரண்டுக்கு மேலே போகிற எல்லாம் பஹு வசனம். சிவம் - சக்தி, பரமாத்மா - ஜீவாத்மா, பகவான் - பக்தன், ஸதி - பதி, குரு - சிஷ்யன் என்றிப்படியும், ஒரு மநுஷ்ய ஜீவனை எடுத்துக்கொண்டால் அவனுக்கு இரண்டு கண், இரண்டு காது, இரண்டு கை, இரண்டு கால் என்றெல்லாமும் இருப்பதாலோ என்னவோ இரண்டு என்பதற்குத் தனி ஸ்தானம் தந்து 'த்வி வசனம்' என்ற ஒன்றை வைத்திருக்கிறது.

மநுஷ்யர்களால் தோப்புக்கரணம் ஆரம்பிக்கப்பட்டிருந்தால், 'கைகளால் காதைப் பிடிப்பது' என்பதில் 'கைகளால்' என்பதற்கு த்வி வசன வார்த்தைதான் இருக்கவேண்டும். ஏனென்றால் மநுஷ்யனுக்கு இருப்பது இரண்டு கைதானே? 'தோஸ்' என்பது கை. முதல் வேற்றுமை ஒருமையில் ஒரு கையை 'தோ' என வேண்டும். 'கைகளால் ' என்பது மூன்றாம் வேற்றுமை 'ஒரு கையால்' என்பதற்கு தோஷா என்று சொல்ல வேண்டும். 'இரண்டு கைகளால்' என்பதற்க்கு தோர்ப்யாம். மநுஷ்யர்களான நாம் 'இரண்டு கைகளால் போடும் தோப்புக்கரணத்தை 'தோர்ப்யாம் கர்ணம்' என்று தான் சொல்ல வேண்டும். இது பேச்சு வழக்கில் திரிந்தால்கூட 'தோப்பாங்கரணம்' என்றுதான் ஆகியிருக்கும். "தோர்பி:" என்பதோ இரண்டுக்கும் மேற்பட்ட பல கைகளைக் குறிக்கும் பஹுவசனமாயிருக்கிறது. தோஷா ஒரு கையால்; தோர்ப்யாம் - இரண்டு கைகளால்; தோர்பி - இரண்டு மேற்பட்ட கைகளால் விஷ்ணுவுக்கு எத்தனை கை? நாலு கை. இரண்டுக்கு மேற்பட்ட நாலு கைகளால் அவர் காதைப் பிடித்துக் கொண்டதால் தான் தெளிவாக பஹுவசனத்தில் "தோர்பி’  என்று சொல்லி, அது 'தோப்பி' என்று ஆகிவிட்டிருக்கிறது.

இந்த புராண சம்பவத்தை மையமாகக் கொண்டே பிள்ளையார் குட்டிக்கொள்வதும், தோப்புக்கர்ணம் போடுவதும்  விநாயகர் வழிபாட்டுக்கு முக்கியமானதாகின்றது. அதை நினைவு கூறுகிறார் அருணகிரி பெருமான்.
நாமும் அந்த விநாயக பெருமானை  சிலம்பணிந்த தாமரை மலர்போன்ற பாதங்களில் அர்ச்சனை (வனச பரிபுர பொற்பத அர்ச்சனை) செய்ய மறவாமல் இருக்க பிரார்த்திப்போம். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பதுபோல் அவன்தாள் தொழ, முருகனை நினவில் வைத்துப் பாட (நினது திருவடி சத்தி, மயில் கொடி  நினைவு கருதிடு புத்தி கொடுத்திட) அவன் அருளை வேண்ட வேண்டும் என்கிறார்.

சாந்தா  and  சுந்தரராஜன்

3 comments:

  1. மரியாதைக்குரிய சுந்தர்/சாந்தா அன்பர்களே ,மலைத்துப்போகும் அளவுக்கு
    அரும் பெரும் கருத்துக்களையும் ,அறிய விஷயம்களையும் தங்களிடமிருந்து
    பெற்று வெளியிடுவதில் நாங்கள் பாக்கியசாலிகள் என்றே கருதுகிறோம்
    .உங்களோடு சேர்ந்து நாங்களும் விநாயகரை சுற்றி சுற்றி வருகிறோம் .கணக்கு
    கிடையாது .மற்றஅன்பர்களும் இதுபோல் தன்களது படைப்புக்களை அளிக்க
    வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை.
    -ஆசிரியர் குழு

    ReplyDelete
  2. Sri Sundararajan and Smt. Sundararajan have beautifully explained the meaning of the song "Ninathu Thiruvadi" which I have been rendering for years without knowing its meaning. They have beautifully explained the background in which Arunagirinathar had sung this song and what offerings the devotees give to Lord Poyya Ganapathi and the qualities of the trunk by which Lord accepts these offerings. If two words 'Makara Sala Nidhi" can contain such a vast meaning, what about the rest? Sri Sundararajan and Smt. Sundararajan have convincingly explained why different cereals like rice are offered. They have also given us wonderful explanation for the matured fruit being offered to God; to liberate ourselves from this world of attachment. Most of us do Thoppukaranam by gently striking our two palms on both side of our head, quite unaware of its underlying principle. Rajans have explained all of them in vivid details. If one single song of Arunagirinathar can give such a vast meaning, think of the vast number of songs he has rendered and what a vast knowledge Thiruppugazh can give us. Let us all join together and help flourish the Thiruppugazh culture. May Lord Muruga's blessings be showered on Rajans. May his family prosper. I consider Sundarajan and Santha as two bodies in one soul or in one Atman. We look forward to their continued guidance in our journey to the path of Thiruppugazh.

    ReplyDelete
  3. Respected Krishnan Sir,before digesting the PRAVAGAM of Rajan Anbars your inspiring (,we cannot say comments),we can only say that GREAT MEN THINK ALIKE.Particularly your expression"Two bodies in one soul or one Athman."is beyond explanation.Similarly we feel many bodies in one soul during VAZHIPADU.We onlypray for such divine status. Editors Team.

    ReplyDelete