Thursday, 21 March 2019

அபிராமி அந்தாதி.... 39


                                            அபிராமி அந்தாதி....  
39

                                                                                       


ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே


அன்பரின் விளக்கவுரை 
ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு - 

என்னை ஆள்வதற்கு உந்தன் திருவடித்தாமரைகள் உண்டு
வாழ்விலே, மேலாக வாழ்வதற்கு, ஆளுமையோடு வாழ்வதற்கு, அந்த அம்பிகையின் அடித்தாமரைகள் இருக்கின்றன. வாழ்விலே நம்மைக் கைதூக்கிவிடும் அந்த தேவியின் பாதங்கள்.

ஆளுக்கைக்கு அடித்தாமரையும் யமன் கையினின்று மீளுகைக்கு கடைக்கண்ணும் என்பதை ஆதிசங்கரர் ' ஜன்ம ஜலதௌ நிமக்னானாம் முரரிபு வராஹஸ்ய த்ஷ்ட்ராபவதி ' - என்கிறார். ( ஸௌ.ல. 3 )
உயிர்கள் சம்சாரக்கடலில் மூழ்கித் தவிக்கும் போது அம்பாளின் இருபாதங்களும் வராஹமூர்த்தியின் இருகோரைப்பற்கள் போல இருக்கின்றன என்கிறார். தண்ணீரில் மூழ்கிக் கிடந்த ' பாசிதூர்ந்த பார்மகளை ' வராஹ அவதாரம் எடுத்துத் தனது கோரைப் பற்களில் தாங்கி வெளிக் கொணர்ந்தது போல அம்பாளின் திருவடிகள் ஸம்ஸாரக் கடலில் மூழ்கிய ஜீவர்களைக் கரையேற்றுவன என்பது பொருள்.
அந்தகன்பால் மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு 

எமனிடமிருந்து மீள்வதற்கு உந்தன் கடைக்கண்ணின் கருணைப்பார்வை உண்டு

அந்த தேவியின் கடைக்கண் பார்வையோ, அந்தகனின் வாய்க்குள் சென்றவனைக்கூட மீட்டுவிடும் சக்தி வாய்ந்தவை. இப்படி வாழ வைக்கவும், சாவிலிருந்து மீட்கவும் அந்த தேவியின் அருள் காத்துக் கிடக்க, ஒருவன் கடைத்தேற முடியாமல் போனால், அது அவனுடைய குறையே அல்லவா? இதைத்தான், பட்டரும், 'என் குறையே அன்றி, நின் குறை அன்று' என்று பேசுகிறார்.

அம்பிகையின் விழிகளிலாவது நாம் பட்டோமா? அதுவும் இல்லை. அதுவும் நம் குறையே! இயமனின் பிடிப்பிலிருந்து மீண்டிட அவளது திருவிழிகளின் கடைக்கண் பார்வை போதும். அந்த அரும் பார்வையைப் பெற்றிடவும் நாம் முனைந்தோமில்லை. திருவடிகளைப் பற்றிச் சிந்திக்காததும் அவற்றைப் பற்றி நெஞ்சில் வந்திக்காததும் நம் குற்றம். நமது கர்மவினையும் ஆணவ மலமும், மாயையுமே காரணம். இவற்றை ஒழித்து, இவற்றினின்று விட்டு விலகித் தள்ளி நிற்க முடியும். ஆனால் நாம் முனைந்தோமா? இல்லை. அன்னையைப் பற்றி எண்ணினோமா? இல்லை.
கடைக்கண் பார்வை விழுந்தால் எமனை வெல்லலாம். எமனது குறிப்பை முன்னர் சில இடங்களில் சொன்னார். இங்கும் சொன்னார். இனியும் இயம்புவார். ஏன் தெரியுமா? எமனை மார்க்கண்டேயன் வென்ற திருத்தலம் திருக்கடவூர். எமனது இடரை அபிராமிபட்டர் வெல்லப்போகும் இடமும் அவ் ஊரே. அங்கே வாழ்பவள் அபிராமி ; அதனால்தான் அடிக்கடி அதனை அபிராமி பட்டர் நினைவு கூர்கிறார். இவ்வளவு கருணையுள்ளம் கொண்ட அன்னையினது கருணையைப் பெற்றிடாமை நம்ம குறைதான்னு சொல்றார்.
மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று 

இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையே; அது உன் குறை இல்லை.

கடைசி இரண்டு அடிகளுக்கு வேறு வகையிலும் பொருள் சொல்வதுண்டு.
 இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையாக இருக்கலாம்; ஆனால் அது உன் குறையும் கூட (ஏனெனில் நான் உன் பிள்ளை; உன் அடியவன்/அடியவள். என்னைக் காப்பது உன் கடன்.
முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே 


 முப்புரங்கள் அழியும் படி அம்பு தொடுத்த வில்லை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே!

அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிக ஸ்தல சோபிதா - அஷ்டமியில் தோன்றும் அரைவட்ட சந்திரனைப்போல் பிரகாசிக்கும் நெற்றியுடன் சோபிக்கிறவள். இதையே - வாணுதல் ( வாள் - நுதல்) என்கிறார் அபிராமபட்டர்.


16. முகசந்த்ர - கலங்காப - ம்ருகநாபி - விசேஷகா - சந்த்ர மண்டலத்தில் களங்கம் காணப்படுவது போல தேவியின் முகமாகிற சந்த்ர மண்டலத்தில் நெற்றியின் கஸ்தூரி திலகம் களங்கம் போல் அழகு கூட்டுகிறது
இந்த அந்தாதியில் எம்பெருமானை "அம்பு தொடுத்த வில்லான்" என்கிறார். எல்லோரும் அறிந்த கதைதான். திரிபுரம் எரித்த கதை.
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் இரும்பு,வெள்ளி, பொன் ஆகிய மூன்று உலோகங்களால் ஆன கோட்டைகளை ஆண்டு கொண்டிருந்தனர். அக் கோட்டைகள் வானில் பறக்க வல்லவை. அம்மூன்று கோட்டைகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றாய்க் கூடும். " மூன்றும் ஒன்றாய்ச் சேருங்கால் ஒரே அம்பினால் அவற்றை எய்தால் மட்டுமே அழிய வேண்டும் " என்னும் வரங்கள் அவர்கள் பெற்றிருந்தனர்.
மூன்று கோட்டைகளையும் பறக்க விட்டு அவற்றைக் கீழே இறக்கி ஆங்காங்குள்ள ஊர்களையும் உயிரினங்களையும் அழித்து வந்தனர். தேவர்கள் அஞ்சிச் சிவனிடம் வேண்டினர். அடுத்த முறை மூன்று மலைகளும் ஒன்று சேர்ந்து வானில் உலா வந்தன. சிவபிரான் மேரு மலையை வில்லாக்கித் திருமாலை அம்பாகவும், அக்கினியை அம்பின் முனையாகவும் கொண்டு நின்றார். கையில் வில், வாள், அம்புடன் நின்றனன்.
திருமாலும், அக்கினியும், மேருவும் தம்மால் கோட்டைகளைச் சிவன் அழிப்பார் என இறுமாந்தனர். அதுகண்டு அத்தன் சிரித்தான். முப்புரங்கள் அழிந்தன .
அந்த ஈசனின் இடப்பாகம் அமர்ந்த வாள் போன்ற நுதல் கொண்ட எம் அன்னையே அல்லவா முப்புரங்களும் அழிபடக் காரணமாயிருந்தவள்!


                                                      பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்



                                                                                         


அபிராமி சரணம் சரணம்!
முருகா சரணம் 



U Tubes published  by us are available in the following link

Monday, 18 March 2019

பங்குனி உத்திரம்


                          
                                             பங்குனி உத்திரம்   

                                   மும்பையில் இசை வழிபாடு                                
                                                                                                         



தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு.

12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.


 இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வீகத் திருமணங்கள் 

நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. தெய்வீக திருமணங்கள் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்த பங்குனி உத்திரத்தன்றுதான்.

மணக்கோலத்தில் காட்சி உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. 


சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.

ரதி - மன்மதன் சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்


முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார்.


அவதாரங்கள் நிகழ்ந்த நாள் நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது;


அய்யப்பன் அவதரித்த  நாளும் இந்நாளே. 


ஆண்டாள் திருக்கல்யாணம் வைபவமும் நிகழ்ந்தது இந்நாளில் தான்

சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான். 


மகாலட்சுமி அவதாரம் அன்னை மகாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.


 கல்யாண விரதம் ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன.


 பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான்.


இத்தகைய சிறப்புகள் கொண்ட நன்னாளில்  திருப்புகழ் இசை வழிபாடு மும்பை செம்பூர் சங்கராலயம் ஆலயத்தில் வரும் மார்ச் 21 ம் நாள் பிற்பகல் 3.45 அளவில் தொடங்கி விமரிசையாக நடைபெற உள்ளது.மும்பை மற்றும் புனே அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு முருகப்பெருமான் அருள் பெற வேண்டுகிறோம்.
அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.

                                                                               
m


முருகா சரணம் 

Tuesday, 5 March 2019

சுப்ரமண்ய புஜங்கம் 26


                             சுப்ரமண்ய புஜங்கம்  26
                                                                                   


दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्ति-
र्मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् ।
करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं
गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥ २६॥
த்ருசி ஸ்கந்த மூர்த்தி: ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி:
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம் |
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா: ||
அன்பரின் விளக்கவுரை 

‘த்ருசி’‘ஸ்கந்த மூர்த்தி:
 என் கண்களுக்கு எதிரில் முருகப் பெருமானுடைய உருவம்.
ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி:

காதுகளில் அவன் கீர்த்தி ஒலிக்கட்டும் 

எப்போதும் முருகப் பெருமானுடைய கதைகளையே நான் கேட்க வேண்டும்.
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்’
நான் ஏதாவது பேசினேன்னா, எல்லாரையும் தூய்மை படுத்தக்கூடிய, பேசறவா உட்பட எல்லரையும் தூய்மை படுத்தக் கூடிய முருகப் பெருமானுடைய அந்த திவ்ய சரித்திரத்தை மட்டுமே நான் பேச வேண்டும். 
‘கரே தஸ்ய க்ருத்யம்’ 
கையை வச்சுண்டு முருகப் பெருமானுடைய அர்ச்சனையை பண்ண வேண்டும்.
ஒரு அர்ச்சனை பண்ணனும்னாக் கூட புஷ்பம் வேணும். அப்படி இல்லேன்னாக் கூட ‘ஸ்தவைஹி அர்ச்சேந் நரஸ் ஸதா’ அப்படின்னு பீஷ்மாச்சார்யாள் சொன்ன மாதிரி இந்த ஸ்தோத்ரத்தினாலேயே பகவானை அர்ச்சனை பண்ணலாம். அதுல அதிகமா திருப்தி ஆகிறார்ன்னு வேற சொல்றார். அருணகிரி நாதரும்,
“ஆசைகூர் பத்தனேன் மனோ பத்ம
மான பூ வைத்து …… நடுவேயன்
பான நூலிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டியொரு ஞான
வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப
மாசிலோர் புத்தி யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ர
வாள பாதத்தில் அணிவேனோ ………
ன்னு ஒரு அழகான பாடல். என்னுடைய ஆசையோடு கூடிய ‘மனசு’தான் தாமரை. அந்தப் பூவை வச்சுண்டு ‘அன்பு’ என்கிற நூலிட்டு (என்னோட அன்புதான் நூல்), என் நாக்கைக் கொண்டு மாலையாகக் கட்டறேன். சித்ரக் கவி மாலையாக அதைக் கட்டி, ஞானம் தான் அதோட வாசனை, ‘மாசிலோர் புத்தியளி பாட’, தூய்மையான புத்தி உள்ளவர்கள் என்ற தேனீக்கள் இந்த மாலையில வந்து குடி இருக்கிறார்கள். மாத்ருகா புஷ்ப மாலை. 51 அக்ஷரங்களுக்கு மாத்ருகா அக்ஷரங்கள் ன்னு பேரு. அந்த மாத்ருகா அக்ஷரங்களைக் கொண்டு ஒரு புஷ்ப மாலை பண்ணி ‘கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ’ உன்னோட அழகான பாதத்தில நான் போட மாட்டேனா’ அப்படின்னு இங்க வேண்டிக்கறார்.
கந்தர் அநுபூதியில ‘நெஞ்சக் கனகல்லு’ ன்னு ஆரம்பிச்சு 51 பாடல்கள் இருக்கு. அந்த 51 பாடல்களும், இந்த 51 மாத்ருகா அக்ஷரங்களைக் கொண்டு செய்தது. ஒவ்வொரு பாட்டுலயும் ஒரு பீஜாக்ஷரம் இருக்குன்னு மஹான்கள் சொல்லுவா. முன்ன வேண்டிண்ட மாதிரியே அருணகிரி நாதர் அந்த கந்தர் அநுபூதியைப் பாடி, மாத்ருகா புஷ்ப மாலையை முருகப் பெருமானுடைய கோல ப்ரவாள பாதத்தில் அணிவித்தார் ன்னு மஹான்கள் சொல்லுவா. 
‘வபுஸ்தஸ்ய ப்ருத்யம்’ 
என் உடம்பு அவனுக்கு அடிமை தொழில் செய்ய வேண்டும் .உடம்பு அவனுக்கு வேலைக் காரனாக இருக்கட்டும்.ஸ்வாமி தூக்கறா இல்லையா! அந்த மாதிரி பகவானோட காரியத்தைத் தான் என் உடம்பு பண்ணனும்
மம அசேஷ பாவா:
என்னுடைய எல்லா காரியங்களும் 
‘குஹே ஸந்து லீனா’ 
முருகப் பெருமானிடத்துலேயே லயித்திருக்க வேண்டும், அப்படீன்னு ஒரு ப்ரார்த்தனை. அவன் நாம ஸ்மரணை தவிர வேறு ஒன்றும் இந்த உடலுக்கு தெரிய வேண்டாம். நம் அவயவங்கள் உலக காரியத்தில் ஈடு படாமல் அவனுக்கே தொண்டு செய்யட்டும் என்கிறார். நாமும் மனதால் அவனை நினைத்து,  தலையால் வணங்கி அவன் புகழ் பாடுவோம் அவனுக்கு தொண்டு செய்வோம். இப்பிறவி எடுத்ததே அதற்காகத்தானே.  
திரு அங்க மாலை ன்னு தேவாரத்துல அப்பர் பெருமான் ‘தலையே நீ வணங்காய்’, அப்படீன்னு ஆரம்பிச்சு
தலையே நீவணங்காய் – தலைமாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்
கண்காள் காண்மின்களோ – கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண் தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ – சிவன் எம் இறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ
மூக்கே நீமுரலாய் – முது காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்
வாயே வாழ்த்துகண்டாய் – மத யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்துகண்டாய்
நெஞ்சே நீநினையாய் – நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்
கைகாள் கூப்பித்தொழீர் – கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகள் கூப்பித்தொழீர்
ஆக்கை யாற்பயனென் – அரன் கோயில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இல் ஆக்கையால் பயன் என்
கால்களால் பயன் என் – கறைக்கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்
உற்றார் ஆர் உளரோ – உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்து உறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ
இறுமாந்து இருப்பன்கொலோ – ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச்சென்று அங்கு இறுமாந்து இருப்பன்கொலோ
தேடிக் கண்டுகொண்டேன் – திருமாலொடு நான்முகனுந்
தேடித் தேட ஒணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்
ன்னு பாடறார். அப்படி என் உடம்பு உன்னுடைய காரியத்தையே பண்ணணும்னு வேண்டிக்கறார்.
அருணகிரி நாதரும்,
“கோடாத வேதனுக்கு யான்செய்த குற்றமென் குன்றெறிந்த
தாடாளனே தென்தணிகைக் குமர நின் தண்டையந்தாள்
சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாத கையும்
பாடாத நாவுமெனக்கே தெரிந்து படைத்தனனே. “
(கந்தர் அலங்காரப் பாடல்)
அப்படி தன்னோட குறையைச் சொல்றார். கொடுத்த உடம்பை வச்சிண்டு நான் என்னென்னவோ பண்றேனே. நான் அப்படி என்ன பாவம் பண்ணிட்டேன் அந்த ப்ரம்மன் கிட்ட? இப்படி என்னை படைச்சிருக்கானே. அப்படின்னா என்ன அர்த்தம். ‘எனக்கு முருகனுடைய தண்டையந்தாளை சூடக் கூடிய சென்னியும், அவனை நாடும் கண்களும், அவனைத் தொழும் கைகளும், அவனைப் பாடும் நாவும் கொடு’ன்னு பிரார்த்தனை பண்றார்.


சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

 இந்த ஸ்லோகத்துக்கு அவருடைய தமிழாக்கம்   



   செந்திற் குமாரன் றனைக்கண்கள் காண்க
   செவிஎந்தை புகழ்கேட்க வாய்சீர்த்தி பாட
   கந்தன் திருத்தொண்டு கைசெய்வ தாக
   கடையேன் அவன்தொண்ட னெனும்வாழ்வு சேர்க.
   


சுப்பிரமணிய புஜங்கம் முழுவதும் இசையுடன் 

பாம்பே  சகோதரிகள் குரலில் 
                                                    முருகா சரணம் 

Friday, 22 February 2019

அபிராமி அந்தாதி - 38


                                                            அபிராமி அந்தாதி - 38
                                                                           
                                                                                     


பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

இந்தப் பாடலில் அபிராமபட்டர் இரண்டு விவரங்கள் தருகிறார். ஒன்று சிவபெருமான் அம்பிகையிடம் எவ்வாறு மயங்கினார் என்பது. இரண்டாவது இந்திர உலகம் ஆளும் ஆசை இருந்தால், அவளைப் பணிவதே அதற்கு வழி என்பது.

சிவனுக்கே போகம் அருளும் எம்பெருமாட்டி, அவளைப் பணிவோருக்கு ( இந்திரன் அருளும்) அமராவதியை ஆளும் உயர்ந்த தேவலோகப் பதவியைத் தருவாள். ( இந்திரன் அனுபவிக்கும் போகம் தான்- போகத்தின் எல்லை).

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் - பவளக் கொடியில் பழுத்த பவளம் போல் இருக்கும் செவ்விதழ்களும்

பனி முறுவல் தவளத் திருநகையும் - குளிர்ந்த முறுவலும் முத்து போன்ற பற்கள் தெரிய செய்யும் புன்னகையும்
எவ்வாறான புன்முறுவல் அது? " பவளக் கொடியிற் பழுத்த செவ்வாய்? " - அன்னையின் திருஉதடுகள் பவளக் கொடியை விடச் சிவந்து உள்ளன. செக்கச் செவேல் என்ற அரிய வண்ணம் கொண்ட இதழ்கள் அவை. பவளக் கொடியின் மேல் இதழும் கீழ் இதழுமாய் இரண்டு இதழ்களும் சற்றுப் பிரிகின்றன. அவ்வாறு பிரிகையில் செம்பவள இதழ்களுக்குள்ளேயிருந்து, வெண் முத்துக்கள் போன்ற பற்கள் பளிச்சிடுகின்றன. அம்மை புன்முறுவல் பூத்துக் குறுநகை புரிகின்றாள். சிவந்த இதழ்களின் இடையே வேண்முத்துப் பற்கள் தெரியும் வண்ணம், அம்பிகை குறுநகை புரிகின்றாள்.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் கூட அன்னையை எப்படியெல்லாம் வர்ணிக்கறது பாருங்கோ!!
( 24) நவ வித்ரும்பிம்ப ஸ்ரீ ந்யக்காரி தசனச்சதா செம்மையான பொருள்களில் சிறந்ததான பவழம். கோவைப்பழம்இவற்றின் காந்தியை வெல்லும்படியான சிறந்த சிவந்த அதரங்கள் அன்னைக்கு. ( ரதனச்சதா என்றும் பாடமுண்டு. அர்த்தம் அதே....).
25. சுத்த வித்யாங்குரகார த்விஜ பங்க்த்தி த்வயோஜ்வலா - சுத்தவித்யையின் முளைகள் போன்ற இரு பல்வரிசைகளால் ஒளிமிக்க தோற்றமுடையவள். 242. சாருஹாஸா - அழகிய புன்சிரிப்போடு கூடியவள்.' உன் இனிய புன்சிரிப்பே சந்திரன்.
28. மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேச மானஸா - தனது புன்சிரிப்பின் ப்ரவாஹத்தில் காமேசுவரருடைய மனதை மூழ்கச் செய்தவள். ஸ்மித - புன்சிரிப்பு - பற்கள் வெளித் தெரியாமல் மெல்லச் சிரிப்பது. ' மந்தஸ்மித ' - இன்னும் விசேஷமான மென்மையானது. அம்பிகையின் புன்சிரிப்பிற்கு ' மூககவி ' - ' மந்தஸ்மிக சதகம் ' என்ற நூறு பாடல்கள் கொண்ட நூலை செய்திருக்கிறார்.

துணையா -
துணையாகக் கொண்டு
எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது - துவண்டு போகும்படி போரிட்டு

துடியிடை சாய்க்கும் - உடுக்கையைப் போன்ற இடையை கீழே சாய்க்கும்

துணை முலையாள் - ஒன்றிற்கு ஒன்று துணையான முலைகளை உடையவள்


' குறுநகை ' இப்போது போர்க்கலன் ஆகின்றது. அன்னை உட்கார்ந்தபடியே, சிரிப்பு என்ற படைகலனைத் துணையாகக் கொண்டு, பரமேசுரனைத் துவள வைக்கின்றாள். இரண்டாம் போர்க்கலனையும் அன்னை தன்னிடம் கொண்டிருக்கின்றாள். அது அன்னையின் கொடி போன்ற மெல்லிய இடை: சாயும் படியாகக் நகில் பாரங்கள். ஆக, நகையையும் நகிலையும் அம்பிகை துணையாகக் கொண்டு சிவனாரை வெல்கிறாள்.


(ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்)
36. ஸ்தன பார தலன் மத்யபட்டபந்த. வளித்ரயா -.ஸ்தனங்களின் சுமையினால் முறிந்து போய்விடுமோ என்று தோன்றக் கூடிய இடுப்புக்குப் பட்டை கட்டியது போன்று அமைந்துள்ள மூன்று மடிப்புகளை உடையவள்.உத்தம ஜாதி ஸ்திரீ புருஷர்களுக்கு நெற்றியிலும், கழுத்திலும், வயிற்றிலும் மூன்று கோடுகள் போன்ற மடிப்புகள் இருக்கும் என்று ஸாமுத்ரிகா சாஸ்த்ரம் கூறும் லட்சணம். அவை மகத்தான ஸௌபாக்கியத்திற்கு அடையாளம்.
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே - " அமராவதி என்னும் இந்திரநகர் ஆளும் தன்மை ஏற்பட வேண்டுமா? பணியுங்கள் பரமேட்டியை "

அவளை எவ்வாறு பணிவது? ஓர் உருவம் தருகிறார். அந்த உருவத்தை வைத்து வழிபாடு செய்தால், அமராவதி ஆளும் உரிமை கிட்டும் என்று குறிப்பிட்டார். அது பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல் தவளத் திருநகையும், துணையா எங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையும் கொண்ட உருவம்.


                                                      பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்


                                                                                          
                                                        அபிராமி சரணம் சரணம்!!

                                                              முருகா சரணம் 


U Tubes published  by us are available in the following link

Wednesday, 20 February 2019

VELLI VIZHA OF THIRUPPUGAZH SINGING AT HYDERABAD


                                                                                   

                      VELLI VIZHA OF THIRUPPUGAZH SINGING AT HYDERABAD 

                                                                                     
           


Thiruppugazh Anbargal at Hyderabad invite all the Anbars for the celebration of  25

Years of Thiruppugazh singing  on  16th and 17th March 2019 


                                               Invitation
                                              


         About activities of Thiruppugazh Anbargal at Hyderabad



                                                                               


                                 Velli Vizha Programme



Details of Accommodation arrangements made


      Welcoming all Anbargal, we are arranging accommodation for those coming from outside, in Dormitory, and guest houses as available here. 

1.For Anbargal desiring accommodation in Dormitory with Jamakkalam and pillows arrangement in mini hall nearby for a nominal payment of Rs 500/
( Rs Five Hundred only)/ per person for stay on 16th and 17th March 2019. The allotment shall be on first come first basis.
2. For Anbargal desiring to stay in guest houses with three per room with cots and beds a nominal payment of Rs 1000/  (Rupees Thousand only) per person for stay on 16th and 17th   March 2019. As limited rooms are available an early requisition may please be given.
3. For those who wish to make own arrangements in nearby hotels, may request for details of nearby hotels.
4. All Anbargals who are staying at Dormitory and guest houses will be served breakfast, lunch and dinner on 16th and 17th March. 
    All participating Anbargals can contact at   9014402266  /   9848812301 by phone or 
     by email at  krishnamurtiv@gmail.com     /      poojakrish54@yahoo.com.      


All the Anbars are requested to participatae in large numbers and receive the the blessings of Chenthilandavan

                                                                    Muruga Saranam                                                                          

                                                                                         

Wednesday, 6 February 2019

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம்






ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம் – நோய்கள் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே


ஸுப்ரமண்ய புஜங்கத்துல 23வது ஸ்லோகத்துலயும், 24வது ஸ்லோகத்துலயும், ‘என்னுடைய மனக் கவலைகள், மனோ வியாதிகளை எல்லாம் போக்கணும் முருகா’ன்னு வேண்டிண்டார். இன்னிக்கு 25வது ஸ்லோகம்.
अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥२५॥
அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த: |
பிஷாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே ||


இங்கு முக்கியமாக திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியின் பெருமையை விளக்குகிறார்.


    தாரகாரே= தாரகனை  வதைத்தவனே,

 மஹாந்தஹ அபஸ்மாரம்= பல பெரிய வியாதிகள், குஷ்டம் க்ஷயம், 

அர்ஷ ப்ரமேஹ= மூலம் சரக்கரை வியாதி, 

ஜ்வர உன்மாத= சுரம் மனவியாதி,

 குல்மாதி ரோகாஹா= குன்மம் போன்ற நோய்கள்,

 ஸர்வே பிஷாசாஹாசஹ, = பல பில்லி சூனியம் போன்ற  வியாதிகள்,  

பவத் பத்ர பூதிம்= உன்னுடைய பன்னீர் இலையில் வைக்கப் பட்டுள்ள விபூதியை, 

விலோக்ய= பார்த்தவுடனே, 

க்ஷணாத் த்ரவன்தே= ஒரு நொடியில் ஓடிவிடுகின்றன. 

உரை ஆசிரியரின் விளக்கம் 

அபஸ்மாரம், குஷ்டம், க்ஷயார்சம், ப்ரமேஹம், ஜ்வரம்,குல்மாதி ரோகா,வலிப்பு, குஷ்டம், க்ஷயம், சுவாச ரோகம், மேஹ ரோகம், ஜ்வரம், சித்த பிராந்தி, வயிற்று வலி இப்படிப் பல விதமான வியாதிகள் உடம்பைப் படுத்தறது.அப்படிஉடம்புக்கு வர்ற வியாதிகளை எல்லாம் போக்கிக்கிறதுக்கு ஒரு உபாயம் இருக்கு. 
‘பவத் பத்ர பூதிம் விலோக்ய’ இந்த பத்ர பூதியைக் கண்ணால பார்த்த மாத்திரத்திலேயே பூத ப்ரேத பிசாசங்கள், ப்ரம்ம ராக்ஷசர்கள், இன்னும் எல்லா வியாதிகளும், ஒரு க்ஷணத்தில் ஓடி மறைந்து விடுகின்றன. ‘க்ஷணாத் த்ரவந்தே ‘ ன்னு சொல்றார். அந்த பன்னீர் இலைல வச்சு கொடுக்கற விபூதிக்கு அவ்வளவு மகிமை. 
வேதங்கள் எல்லாம் சேர்ந்து தங்களுடைய ‘ஸுமனஸ்’னால அழகழகான வாசனைப் புஷ்பங்களை எல்லாம் முருகனுடைய பாதத்துல போடணும்ன்னு ஆசைப் பட்டு ஒரு வ்ருக்ஷ ரூபமா ஸ்வாமி சன்னிதியில வந்து இருக்காம். அதைத்தான் பன்னீர் வ்ருக்ஷம்ன்னு சொல்றா. அந்த பன்னீர் வ்ருக்ஷத்தோட கிளைகள் எல்லாம் வேத சாகைகள். அந்த வ்ருக்ஷத்தோட இலைகள் எல்லாம் வைதீக மந்திரங்கள். 

அந்த வைதீக மந்திரத்தில ப்ரணவ ஸ்வரூபமாகிய ஸ்வாமி சம்பந்தப்பட்ட விபூதியை வச்சு கொடுக்கறாதனால, அதை நாம இட்டுண்டா எல்லா உபாதைகளும் போய்டறது. ரொம்ப ஆரோக்யத்தோட தீர்க்காயுசா இருப்பா அப்படின்னு சொல்றார்.
தேதியூர் சாஸ்த்ரிகள், புராணத்திலிருந்து எடுத்து இன்னொரு கதையும் சொல்லியிருக்கார். விஷ்வாமித்ர மஹரிஷி ராமச்சந்திர மூர்த்தியைக் கூட்டிண்டுகாட்டுக்குப் போகும் போது தாடகா வதம் பண்ணுன்னு சொல்லி காரணமாக  இருந்தார்.  அதாவது ஒரு கார்யம் பண்ணுன்னு தூண்டி விடறது. ஒரு ஸ்தீரி வதம் பண்றதுக்கு தூண்டி விட்டதனால அவருக்கு உடம்புக்கு வந்துடுத்து. அவர் எத்தனையோ முயற்சி பண்ணினார். அஸ்வினி தேவர்களாலக் கூட அவரை குணப் படுத்த முடியல. அப்போ அவரோட கனவுல ராமரே வந்து ‘நீங்க ஸ்ரீஜயந்திபுரம் என்கிற திருச்செந்தூருக்குப் போய், முருகப் பெருமானுடைய விபூதியை வாங்கி இட்டுக்கோங்கோ’ அப்படின்னு சொன்னார். அதே மாதிரி விஷ்வாமித்ர மஹரிஷி வந்து அந்த பன்னீர் இலையில் விபூதியை வாங்கி இட்டுண்ட உடனே அவருக்கு எல்லா வியாதிகளும் போய்டுத்து அப்படின்னு ஒரு புராணக் கதை சொல்லியிருக்கார்.

அருணகிரியாரின் வாக்கு 

திருத்தணி முருகரையும் பவரோக வைத்யநாத பெருமாள் ன்னு சொல்லுவா. (‘நிலையாத சமுத்திரமான’ எனத் தொடங்கும் திருப்புகழ்).
வியாதிகள் போகணும்ன்னு திருத்தணி முருகன் மேல அருணகிரி நாதருடைய ஒரு திருப்புகழ் பாடல் இருக்கு. அதைப் படிச்சா எல்லா வியாதிகளும் நிவர்த்தி ஆகும் அப்படின்னு நம்பிக்கை. 
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி …… விடமே
நீரிழிவு விடாத தலைவலி சோகை யெழுகள மாலை …… யிவையோடே
பெருவயிறீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு …… முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனை நலியாத படியுன தாள்கள் …… அருள்வாயே
வருமொரு கோடியசுரர் பதாதி மடிய அநேக …… இசைபாடி
வருமொரு கால வயிரவராட வடிசுடர் வேலை …… விடுவோனே
தருநிழல் மீதிலுறை முகிலூர்தி தருதிரு மாதின் …… மணவாளா
ஜலமிடை பூவினடுவினில் வீறு தணிமலை மேவு …… பெருமாளே.
‘நோய்கள் பிறவிகள் தோறும் எனை நலியாதபடி உன தாள்கள் ருள்வாயே!
ஜலமிடை பூவினடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே!’ ன்னு பாடல்.
சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

 இந்த ஸ்லோகத்துக்கு அவருடைய தமிழாக்கம்   


   கண்டால்நி னிலைநீறு கைகால் வலிப்புக்
      காசங் கயம்குட்ட முதலாய நோயும்
         விண்டோடு மேபூத பைசாசம் யாவும்
            வினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே.
       ...... 25

செந்திலம்பதியில் அமர்ந்தருளும் தேவ தேவா! உன்னுடைய இலை விபூதியைக் கண்ட மாத்திரத்தில் கை கால் வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலாய நோயும் பூதம், பைசாசம், தீவினைகள் யாவுமே விட்டோடிடும்.


சுப்பிரமணிய புஜங்கம் முழுவதும் இசை வடிவில்  (மும்பை அன்பர்கள் )

https://youtu.be/khP6Kg80LLU

                                          முருகா சரணம்